தென்னாப்பிரிக்காவுடனான தொடர் தோல்வியிலிருந்து மீண்டுவிடலாம் என எண்ணியிருந்த ஆஸ்திரேலியாவின் நம்பிக்கையைத் தகர்த்தெறிந்தது நியூசிலாந்து, பெர்த் நகரில் நடந்த கிரிக்கெட் போட்டியில். இதே வேளையில் மெல்பர்ன் நகரில் நடந்த ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி - சானியா மிர்சா இணை கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் பட்டம் வென்றது. அவர்களுக்கு வாழ்த்துக்கள்! கிராண்ட்ஸ்லாம் எனப்படும் முதல் தர டென்னிஸ் போட்டிகளில் (ஆஸ்திரேலிய, அமெரிக்க, ஃபெரெஞ்ச் ஓப்பன் மற்றும் விம்பிள்டன் போட்டிகள்) பட்டம் வெல்லும் முதல் இந்திய பெண் சானியா!
ஆண்களுக்கான ஒற்றையர் ஆட்டத்தில் சுவிட்சர்லான்தை சேர்ந்த ரோஜர் ஃபெடரர், ஸ்பெயினின் ரஃபேல் நடாலிடம் தோல்வியுற்றார்.
பரிசளிப்பு விழாவில், இரண்டாமிடக் கோப்பையை பெற பெடரர் இவ்வாறு அழைக்கப்பட்டார். "இந்த நாடு(ஆஸ்திரேலியா) யாராவது ஒரு விளையாட்டு வீரரை தத்தெடுக்க விரும்பினால் அது இவர் தான்". ஆஸ்திரேலியாவில் இல்லாத விளையாட்டு வீரர்களா? அந்த அளவுக்கு திறமையும், ஆஸ்திரேலியர்களின் நன் மதிப்பையும் பெற்றவர் ஃபெடரர்.
பதக்கத்தட்டை பெற்றுக்கொண்டு ஏற்புரை கூற முயன்ற ஃபெடரருக்கு வார்த்தைகள் வரவில்லை. மிகுந்த கரவொலி வேறு.
"அடுத்தமுறை வெல்ல முயற்சி செய்வேன்...
எனக்குத் தெரியவில்லை...
கடவுளே...
இது(தோல்வி) என்னைக் கொல்கிறது..."
இதற்கு மேல் பேச இயலாமல் உடைந்து அழுதேவிட்டார். வெகுநேரம். யாருக்கும் என்ன செய்வதெனத் தெரியவில்லை, கரவொலி எழுப்புவதைத் தவிர. "வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு" போன்ற சாதாரண ஆறுதல் வார்த்தைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் ஃபெடரர். அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே தோல்விகளைச் சந்தித்தவர்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இதுவரை 5 முறை அமெரிக்க ஓப்பன், 5 முறை விம்பிள்டன், 3 முறை ஆஸ்திரேலிய ஓப்பன், ஆக மொத்தம், 13 முறை பட்டம் வென்றுள்ள ஃபெடரருக்கு, அதிக முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் என்ற பீட்சாம்ராஸின் சாதனையை சமன் செய்ய தேவைப்படுவது இன்னும் ஒன்று மட்டுமே. 237 வாரங்களாக, ஏறக்குறைய நாலரை ஆண்டுகளுக்கு மேல், தொடர்ந்து உலக டென்னிஸ் தர வரிசைப் பட்டியலில் முதலிடம் வகித்தவர் ஃபெடரர். (முந்தைய சாதனை: பெண்கள் பிரிவில் ஸ்டெஃபி கிராஃப் 186 வாரங்கள், ஆண்கள் பிரிவில் கான்னார் 160 வாரங்கள்). இதைப்போல இன்னும் பலப்பல
சாதனைகளுக்கு சொந்தக்காரரான ஃபெடரருக்கு கடந்த ஆகஸ்ட் முதல் கொஞ்சம் இறங்கு முகம். தொல்விகளை சந்திக்கத் துவங்கிய ஃபெடரர், 2009 ஆம் ஆண்டை நல்ல முறையில் துவக்க, ஆஸ்திரேலிய ஓப்பன் போட்டிகளை எதிர் நோக்கி இருந்தார். துவக்கச் சுற்றுப் போட்டிகளில் நன்றாக ஆடி இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றார். எதிர்த்து ஆட வேண்டியவர் ரஃபேல் நடால். பெரும்பாலானோர், ஃபெடரரே வெற்றி பெறுவார் என்று கணித்த கணிப்பு பொய்யாக நடால் வென்றார். இதில் நடாலின் திறமை ஒரு புறமிருக்க, ஃபெடரர் செய்த தவறுகளே அவர் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. அதுதான் அவ்வளவு பேர் முன்னிலையில், அதுவும் தன்னை மதிக்கும், நேசிக்கும் கூட்டத்தில், அழக்காரணம்.
ஃபெடரரின் அழுகையினால் என்ன செய்வதென்றறியாத அறிவிப்பாளர், அவரிடம் சென்று பேசிவிட்டு, "ஃபெடரர் சிறிது நேரம் சாந்தமாகட்டும்" எனச்சொல்லி நடாலை வெற்றிக் கோப்பையை பெற அழைத்தார். வரும் போதே ஃபெடரரை தட்டிக்கொடுத்து விட்டு வந்த நடால், கோப்பையைப் பெற்றவுடன் மறுபடியும் ஃபெடரரிடம் தான் சென்றார். இருவரும் ஏதோ பெசிக்கொள்ள, நடாலை இருக்கச் செய்து ஃபெடரரே திரும்ப பேச வந்தார்.
"மறுபடியும் நான் பேச முயற்சி செய்கிறேன். (இந்த மேடையில்) கடைசி வார்த்தைகளை நான் பேச விரும்பவில்லை(சிரிக்கிறார்). இவருக்கு (நடாலை காண்பித்து) அதற்கான முழுத்தகுதியும் இருக்கிறது. நீ மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினாய். இதற்கு நீ தகுதியனவனே" எனச் சொல்லி அனைவருக்கும் நன்றி தெரிவித்து "அடுத்த வருடம் சந்திப்போம்" என்று மறுபடியும் கண்ணீருடன் விடைபெற்றார்.
அடுத்து பேச வந்த நடால், "ரோஜர், இன்றைய நிகழ்விற்காக என்னை மன்னித்து விடுங்கள். எனக்குத் தெரியும் உங்களுடைய இப்போதைய உணர்வு எப்படி இருக்குமென்று. மிகவும் கடினமான வலி அது. ஆனால், நீங்கள் ஒரு சிறந்த வெற்றி வீரர் என்பதை மறக்க வேண்டாம். வரலாற்றின் சிறந்த வெற்றி வீரர்களில் நீங்களும் ஒருவர். பீட்சாம்ராஸின் சாதனையை நிச்சயம் முறியடிப்பீர்கள்" எனச் சொல்லி தன் வெற்றிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி கூறினார்.
ஆஸ்திரேலிய ஓப்பன் போன்ற மிகப்பெரிய போட்டியில் முதல் முறையாக வென்றுவிட்டு, அதுவும் அப்பட்டத்தை வெல்லும் முதல் ஸ்பானிய வீரர் என்ற சாதனையுடன், தன் வெற்றிக்களிப்பை மிகுதியாக வெளிப்படுத்தாமல் சக எதிர் வீரரின் உணர்வுகளைப் புரிந்து பேச எத்தனை பேரால் முடியும்? சக வீரர்களை களத்தில் மட்டுமே எதிர்த்து விளையாடும் விளையாட்டுணர்வின் இலக்கணம், நடாலின் அந்த பேச்சு.
நடால் மட்டும் சாதனைகளில் இளைத்தவரா? ஃபெடரர்-நடால் இணை தான் டென்னிஸ் வரலாற்றின் சிறந்த எதிர் இணை என்ற பெருமை படைத்தது. எல்லா கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் சாதனை செய்த ஃபெடரரால், ஃபிரெஞ்ச் ஓப்பனில் மட்டும் ஒரு பட்டம் கூட வெல்ல இயலவில்லை. காரணம் நடால். "களிமண்தரை அரசன்" என புகழப்படும் நடால் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து ஃபிரெஞ்ச் ஓப்பன் வெற்றியாளர். கடுந்தரை(Hard court), புல்தரை(Grass court), களிமண்தரை(Clay court) என்று மூன்று விதமான தரைகளில் டென்னிஸ் ஆடப்படுகிறது. இந்த ஆஸ்திரேலிய ஓப்பன் வெற்றி மூலம் மூன்று விதமான தரைகளும் கொண்ட கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வென்ற மூன்றாவது வீரர் என்ற பெருமை நடால் வசம் (ஆஸ்திரேலிய ஓப்பன், அமெரிக்கன் ஓப்பன் - கடுந்தரை, விம்பிள்டன்-புல்தரை, ஃபிரெஞ்ச் ஓப்பன்-களிமண் தரை). ஃபெடரருக்கு களிமண் தரை இன்னமும் சவாலே. இத்தனை சாதனைகளும் செய்திருக்கும் நடாலின் வயது 22 (ஃபெடரரின் வயது 27). 22 வயதில் ஃபெடரர் வென்றிருந்தது ஒரே ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் மட்டுமே. நடாலிடம் இப்போது 6 பட்டங்கள். தவிர்க்க இயலாத காரணங்கள் இருந்தாலொழிய, அனைத்து சாதனைகளையும் முறியடிக்கவும், யாராலும் முறியடிக்கமுடியாத சாதனைகளை செய்யவும் நடாலால் முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.
ஃபெடரருக்கு,
கவலைப்படதே நண்பா, பீட்சாம்ப்ராஸின் சாதனையை நீ முறியடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!
நடாலுக்கு,
பல உச்சங்கள் நீ தொடக் காத்திருக்கின்றன!