'விதி' வழிப்பட்டதே வாழ்க்கை!


சர்க்கஸ்(இதற்கு தமிழில் என்ன?) பார்க்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை கடந்த சனிக்கிழமையன்று பூர்த்தியடைந்தது. சிறு வயதில் ஒரு முறை சிவகாசியில் நடந்துகொண்டிருந்த சர்க்கஸ் காட்சிக்கு நாங்கள் சென்றிருந்தோம். பாதிக் காட்சியின் போதே பலத்த மழை பெய்யத்துவங்கி விட்டது. கூடாரம் கிழிந்து விடும் அளவுக்கு மழை பெய்ததால் காட்சி நிறுத்தப்பட்டு விட்டது. அதன்பிறகு சிறு சிறு சாலை வித்தைகளைப் பார்த்து இருக்கிறேன். ஆனால் முழுநீள சர்க்கஸ் காட்சி பார்க்கும் வாய்ப்பு வாய்க்கவில்லை. சென்னை வந்தபின்பு, ஒவ்வொருமுறை விளம்பரம் பார்க்கும் போதும் சென்றுவிட நினைத்ததுண்டு. ஆனால் இந்த முறை மட்டுமே செயல்படுத்தினேன். வீட்டிலிருந்து அனைவரும்சென்றோம்.

ஜெமினி சர்க்கஸ் இது. காலையிலேயே தொலைபேசி மூலம் முன்பதிவு செய்துவிட்டேன். சிறுவயதில் பார்த்ததுவும், பறக்கும் பாவை, அபூர்வ சகோதரர்கள் படங்களில் பார்த்த காட்சிகளும், ஒரு வித அனுமானத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தன. அபூர்வ சகோதரர்களின் பாதிப்பு நிறையவே. அப்படத்தில், கமல் முதலாளி மௌலியிடம் "நீங்க ஒரு கபடநாடகவேடதாரி முதலாளி" எனும் காட்சி எனக்குப் பிடித்தது எனினும் இப்பதிவிற்கு சம்பந்தம் இல்லாதது. கூடாரத்தின் உள்நுழையும் போதே அப்பு கமலும் மௌலியும் எங்காவது இருக்கிறார்களா எனத்தேடும் அளவிற்கு பாதிப்பு இருந்தது.

  • மதியம் 1, 4, 7 ஆக மூன்று காட்சிகள் ஒரு நாளைக்கு.
  • நான்கு மணிக்காட்சிக்கு மூன்று முப்பதிற்கே உள்ளே அனுமதிக்கப்பட்டோம். கூடாரத்தையும், அங்கு அமைக்கப் பட்டிருந்த அமைப்புகளையும், அதை காட்சியின் போது எவ்வாறு பயன் படுத்துவார்கள் என்ற ஆராய்ச்சியிலேயும் அரை மணி சென்று விட்டது.
  • காட்சி ஆரம்பிக்கும் முன், 120 ரூபாய் டிக்கெட்(இது தான் அதிகபட்சம்) வரிசைகளில் விசிறியும், 30 ரூபாய் வரிசைகளில் நொறுக்குத் தீனியும் விற்றனர். ஆரம்பித்த பின் எல்லா இடங்களிலும் எல்லாம் விற்கப்பட்டது.
  • சரியாக 4 மணிக்கு காட்சியை ஆரம்பித்து விட்டனர். சர்க்கஸ் அணிவகுப்பு தான் முதல் நிகழ்ச்சி. பளீர் உடை பெண்களும், கோமாளிகளும், மூன்று யானைகளும், மூன்று ஒட்டகங்களும், ஒரு குதிரையும் இடம் பிடித்து இருந்த அணிவகுப்பில் ஏனோ ஆண்களுக்கு இடம் இல்லை.
  • அதன் பிறகு ஒன்றொன்றாக பல சாகச நிகழ்ச்சிகள். கரணம் தப்பினால் மரணம் தான், குறைந்த பட்சம் பலத்த அடி விழும் என்ற வகையிலேயே எல்லா செய்கைகளும். தொங்கும் கயிற்றில் அந்தரத்தில் வித்தை, மேஜை மீது உடம்பை ரப்பரை போல் வளைப்பது, அந்தரத்தில் உருளும் வளையத்தின் மேல் நடப்பது, பல பந்துகளை மாற்றி மாற்றி பிடிப்பது, எவ்வித பிடிமாணமும் இல்லாமல் நிற்கும் ஏணி மீது ஏறுதல் என பலபல சாகசங்கள், ஆண்களும் பெண்களுமாய். மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகளுக்கு ரசிகர்களின் ஆரவாரமும் பலமாக இருந்தது.
  • சில இடங்களில், வெகு சில இடங்களில், நிலை தடுமாறும் போது ரசிகர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பாமல் அமைதி காத்ததே சாட்சி, எந்த அளவிற்கு ரசிகர்கள் அக்காட்சிகளை வியந்து பார்த்துக்கொண்டிருந்தனர் என்பதற்கு.
  • யானை, குதிரை, ஒட்டகம், நாய், கிளி எல்லாம் பயிற்சியாளரின் கட்டளை இல்லாமலே செய்ய வேண்டியதை செய்தது அதிசயமாக இருந்தது. யானை நாற்காலியில் ஏறியது, உட்கார்ந்தது, ஒற்றை காலில் நின்றது, குடித்து விட்டு மயங்கி விட்ட சக யானைக்கு வைத்தியம் செய்தது, கிரிக்கெட் ஆடியது, கால்பந்தில். அடித்தது எல்லாமே ஸ்டெரெயிட் லாங்-ஆன் லாங்-ஆப் லாப்டட் சாட்களே, வித் பெர்பெக்ட் டைமிங்! இவை எதற்குமே பயிற்சியாளர் அருகில் குச்சியுடன் இருந்தாரே ஒழிய, எதையும் செய்ய சொல்லவில்லை. தானாகவே செய்தன! கிளிக்கு அருகில் மிகச்சிறிய வண்டியை வைத்தபோது, கடகட வென இழுத்து வந்து எல்லையில் வைத்து விட்டு கம்பியில் ஏறிக்கொண்டது.
  • அரங்கில் புகைப்படம் எடுக்கக் கூடாது என அறிவிப்பு பலகையும் இருந்தது, அறிவிப்பும் செய்யப் பட்டது. இருந்தாலும் பலர் தங்கள் கைபேசியிலும், சிலர் புகைப்பட பெட்டியிலும் எடுத்துக்கொண்டு தானிருந்தனர், பிளாஷ் உடனும் கூட.
  • ஒரு நிகழ்ச்சி நடைபெறும் போதே அடுத்த நிகழ்ச்சிக்கான ஆயத்த வேலைகள் பக்கவாட்டில் நடந்துகொண்டிருந்தன. Well planned and well organized!
  • பெரும்பாலானவர்கள் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். சில மேற்கு வங்கத்தினரும், ஒரு சில கேரளத்தினரும், வெகு சில தமிழர்களுமிருந்தனர் குழுவில்.
  • ஒருசிலர் தவிர மற்றவர் முகங்களில் களை இல்லை. கடமை மட்டுமே இருந்தது. ஒரு நாளைக்கு மூன்று முறை, இதைபோல் வருடம் முழுவதும் எனும் இயந்திரவாழ்வில் இதுவும் மற்றுமொரு தொழிலே, என்றமுறையில் புரிந்துகொள்ளக் கூடியதே.
  • இடையிடையே நொறுக்குத்தீனி விற்பவர்களின் நடமாட்டம் எரிச்சலூட்டுவதாக இருந்தது.
ஒரு சர்க்கஸ்'ல் இவ்வளவு பேர் வேலை பார்ப்பார்கள் என்பது எனக்கு செய்தி. சிங்கம் புலி போன்றவைகளும் இருக்கலாம் என எதிர்பர்ர்த்தேன். இல்லை. காடுகளிலேயே இப்பொழுதெல்லாம் சிங்கம் புலி அருகி வருகிறது, சர்க்கஸ்'ல் எங்கே? நீங்களும் வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள். சில குப்பையான திரைப்படங்களுக்கு செலவழிப்பதை விட பல மடங்கு மேலானது. ஆனால் பார்க்கும் போது, இது எப்படி சாத்தியம், இது நியூட்டனின் எத்தனையாவது விதி என்ற ஆராய்ச்சிகளை விட்டுவிட்டு சாகசத்தை மட்டும் ரசியுங்கள். அப்பொழுதான் முழு அனுபவம் கிடைக்கும். இல்லையேல் சர்க்கஸ் கூடாரம் இயற்பியல் ஆய்வுக்கூடமாகிப் போகும்!

சர்க்கஸ் கலைஞர்களின் மேடைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை பற்றி பல செய்திகளையும், கட்டுரைகளையும், கதைகளையும் படித்து உள்ளேன். பல விஷயங்கள் எதிர்மறையாகவே இருக்கும். நல்ல நேரம் படத்தில் வரும் "வயித்து கஞ்சிக்கு மனுஷ இங்கே கயித்திலாடுறான் பாரு. ஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு" பாடல் அடிக்கடி மனதில் வந்து சென்றது.
They have chosen too much risk to live. After all thats the driving force for their life!

இதுவும் கடந்து போகும்...

நவம்பர் 27! முன்தினம் ஆரம்பித்த மழை இன்னும் விடாமல் பெய்து கொண்டிருந்தது. மும்பையில் ஆரம்பித்திருந்த தீவிரவாத தாக்குதலும்! "அலுவலகம் விடுமுறையா?" என்ற கேள்விக்கு "தெரியவில்லை. விடுமுறையாக இருந்தால் ஏதேனும் ஒரு மாற்று வேலை நாள் இருக்கும்" என்று மட்டுமே பதில் சொல்ல முடிந்தது. இந்திய ஆங்கில தொலைக்காட்சிகள், மும்பை தாஜ் மற்றும் ஓபராய் ஹோட்டல்களில் நடக்கும் தாக்குதல் செய்திகளை முந்தித் தர முனைந்துகொண்டிருந்தன. மழைகால அம்பத்தூர் தொழிற்பேட்டை சாலைகளுக்கும், எனக்கும் ஆறு வருட பழக்கம். சாலைகளின் தரம் உயர்ந்திருந்ததாலும், இந்த முறை என்னிடம் இரு சக்கர வாகனம் இருந்ததாலும், மழையில், வெள்ள நீரில் அதை ஓட்டிப் பார்க்கும் ஆசையினாலும், மாற்றுடையுடன் அலுவலம் சென்றேன். எதிர்பார்த்ததை விட நல்ல அனுபவமாகவே இருந்தது, ஓரடி நீரில் வண்டி ஓட்டுவது. சொற்பமானவர்களே வந்திருந்தனர். மழை விடாது பெய்யவே மதிய உணவுக்குப் பின் கிளம்பிச் சென்றுவிட அனைவரும் அறிவுறுத்தப்பட்டனர். நீண்ட ஆய்வுக்கும் பரிசீலனைக்கும் பின், எதுவானாலும் பரவாயில்லை வண்டியிலேயே திரும்பிவிடுவதென முடிவெடுத்தேன். வெற்றியும் பெற்றேன்! பிரதமரும் எதிர்க் கட்சித் தலைவரும் ஒரே விமானத்தில் மும்பையை பார்வையிட வர முடிவு செய்து பின்னர் மாற்றப்பட்டது. மழையும் தாக்குதலும் தொடர்ந்தது.

அடுத்த நாள் அதிகாலை மின்சாரம் துண்டிக்கப் பட்டது, பாதுகாப்பு நடவடிக்கையாக! மும்பை நிலவரம் ஒன்றும் அறிய முடியவில்லை. வீட்டுக் காவல் ஆக்கப் பட்டோம். எங்கெங்கு காணினும் தண்ணீரே. அலுவலகம் விடுமுறை. எங்கள் அடுக்கக சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்திருந்தது. ஈரக் கசகசப்புடன் அன்றைய நாள் கழிந்தது. மழையின் அடர்த்தி குறைந்து அவ்வப்போது தூற மட்டும் செய்தது, அடுத்த நாள். அதுக்கும் அடுத்த நாள் முற்றிலும் விட்டிருந்தது. கிளைச் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழை தேங்கிக்கிடந்தது. சாலைகள் உருமாறிப் போயிருந்தன.

பல மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு, பல உயிரிழப்புகளுடன் மும்பை தீவிரவாதம் கட்டுப்படுத்தப் பட்டது. சிறந்த மூன்று காவல் அதிகாரிகளையும், பல காவற் பணியாளர்களையும், பொதுமக்களையும், வெளிநாட்டு பிரமுகர்களையும், பாதுகாப்பு நம்பகத் தன்மையையும் இழந்திருந்தது இந்தியா! பல செய்திகளும், கோணங்களும், பார்வைகளும், அரசின் மெத்தனப் போக்கும் அலசப்பட்டன. தன்னை வீட்டிற்க்குள் அனுமதிக்க மறுத்த, மும்பை தாக்குதல்களில் மறைந்த மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் தந்தையை தரம் தாழ்த்து விமர்சித்து பின் மன்னிப்புக் கோறினார், கேரள முதல்வர். இந்திய உள்துறை அமைச்சரும், மகாராஷ்டிர முதல்வரும் மாற்றப்பட்டனர்! தாக்குதல்களில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உண்டென்று இந்தியாவும் உலக நாடுகளும் உரத்து கூறிக்கொண்டுள்ளன. அமெரிக்க வெளியறவு அமைச்சர் காண்டலிசா ரைஸ் வந்து, பாகிஸ்தானுக்கும் சென்றார். பாகிஸ்தான் நாளொரு தகவலும் அடுத்த நாள் அதை மறுத்தும் கண்ணா மூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது. சென்னை மழை வெள்ள நிவாரண நிதி அறிவிக்கப் பட்டது. எதிர்க் கட்சிகள் அதில் குறை கூறும் கடமையை செவ்வனே செய்தன. ஆளும் கட்சியும் அதற்கு புள்ளிவிவர பதிலளித்தது.
முதல்வரின் கண்கள் பனிக்க, நெஞ்சம் இனிக்க மாறன் குடும்பமும், முதல்வர் குடும்பமும் இணைந்தது. கனிமொழி அவர்களின் சேராமை கேள்வியாக்கப் பட்டது. வீட்டுக்கடன் வட்டி விகிதம் அரசு வங்கிகளில் குறைக்கப் பட்டது. தனியார் வங்கிகளும் பரிசீலிப்போம் என்றன. 7-0 என்ற நிலையில் ஒரு நாள் தொடரைக் கைப்பற்ற நினைத்துக் கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி, மும்பை சம்பவத்தால் இங்கிலாந்து அணி நாடு திரும்பி விட, 5-0 விலேயே திருப்திப் பட்டுக்கொண்டது. தோனி தொட்டதெல்லாம் துலங்கியது. பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தி தர இங்கிலாந்து மறுபடி இந்தியா வந்தது, டெஸ்ட் போட்டிகளில் விளையாட. ரசிகர்களை விட பாதுகாப்பு வீரர்கள் அதிகம் இருக்க இரு அணிகளும் விளையாடின. நான்காவது இன்னிங்க்சில் பெரிதாக சாதித்ததில்லை என்ற அவப் பெயரை சச்சின் தகர்த்து, சதம் கடந்து இந்திய வெற்றியை உறுதி செய்தார். மொகாலியில் 'மஞ்சு'வை விரைவாக விரட்ட முடியாததால், முடிவு சாத்தியமில்லாமல் போக 1-0 என்று தொடரை வென்றது இந்தியா! தேவையானவர்களுக்கு தேவையான மரியாதையை தேவையான சமயத்தில் தவறாமல் வழங்கும் தோனி, இங்கிலாந்து திரும்பி வந்து இந்தியா பாதுகாப்புள்ள தேசம் என நிரூபித்தமைக்கு பாராட்டு தெரிவித்து வழி அனுப்பி வைத்தார்.

விஜய் டிவி ஜோடி நம்பர் -1 மூன்றாம் பாகத்தில் மைக்கேல்-ஹேமா ஜோடி வென்றது. பரிசு வழங்கி வென்றவர் மற்றும் தோற்றவர்களுக்கு சொல்லும் செய்தியில், தன் அப்பா அடிக்கடி சொல்வதாக நடிகர் சூர்யா சொன்னதே, இப்பதிவின் தலைப்பு.

முந்ததர் அமெரிக்க அதிபர் மீது தன் காலணிகளை எறிந்து பிரபலமானார். சானியா மிர்சா 'டாக்டர்' ஆனார். செய்னா உலகத் தர பட்டியலில் 10 வது இடத்திற்கு முன்னேறினார். ஆர் அந்துலே எதையோ சொல்லி எதையோ வாங்கிக் கொண்டார். அதை காரணமாக்கி எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தை நடத்த விடாமல் செய்து, 8 மசோதாக்களை 17 நிமிடங்களில் விவாதமே இல்லாமல் நிறைவேற்ற செய்து, பாராளுமன்றத்திற்கு சாதனைப் பெருமை தேடித் தந்துள்ளன. மதுரை திருமங்கலத்தில் இடைத் தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய அதன் தேசிய தலைவர், விரைவில் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என்றார்.

தாக்குதலுக்குட்பட்ட தாஜ் மற்றும் ஒபராய் ஹோட்டல்கள் மீண்டும் திறக்கப்பட்டு விட்டன!

இது
மட்டும் அல்ல எதுவும் கடந்து போகும்...போக வேண்டும்!

ஒரு மழைநாளின் பின்னிரவு...

திடுக்கிட்டெழுந்தேன்! ஒன்றும் விளங்கவில்லை. மூடப்பட்டிருந்த கதவு... பக்கத்தில் ஒரு குப்பைக் கூடை...மின்விசிறி...ஜன்னல்... ...எனது அறை தான். தூக்கத்திலிருந்து விழித்தெழுந்திருக்கிறேன். சில வினாடிகள் ஆகியிருந்தன சுயமறிந்து கொள்வதற்கு. அருகிலிருந்த கைபேசியில் மணி பார்த்தேன். மூன்றைக் கடந்திருந்தது. மழை பெய்து கொண்டிருந்தது, ஜன்னல் வழியே தெரிந்தது. எழுந்தேன். சுழற் நாற்காலியை (நாற்காலி-காரணப் பெயர். ஆனால் இதற்கு நான்கு கால்கள் இல்லை. ஐந்து சக்கரமும் அதைத் தாங்கும் ஒரு மையக் காலும் மட்டுமே. இருந்தாலும் நாற்காலியே. பொதுப்பெயர்!) இழுத்து ஜன்னல் அருகே போட்டுக்கொண்டு அமர்ந்தேன். ஜன்னலின் ஒரு பகுதியைத் திறந்தேன். மூடியிருந்தபோது கணித்ததை விட அதிகமாகவே பெய்துகொண்டிருந்தது.

மழை! துப்பார்க்குத் துப்பாய தூஉ மழை! தூவிக்கொண்டிருந்தது. சீராக! நூற் பிடித்தாற்போல் நேராக! காற்றுத்தேவன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான் போல். நான் அமர்ந்திருந்தது முதல் மாடி. என் ஜன்னலின் வழி பார்த்தால் பக்கத்திலிருக்கும் காலிமனை தெரியும். எங்கள் அடுக்கக சுற்றுச்சுவர்க்கு வெளிப்பக்கமாக. பசும் புதர் மண்டிக்கிடக்கும் காலிமனை. விசும்பின் துளி வீழ்ந்ததால் தலை காட்டிய பசும் புதர். இரண்டு வேப்பமரங்களும் உண்டு. அருகிலிருந்த தெருவிளக்கின் வெளிச்சக் கற்றை பசுமையைக் காட்டிக் கொடுத்தது, இருட்டிலும். தலை குனியவைத்திருந்தது தழைகளை மழை. மழைச் சங்கீதத்திற்குத் தலையாட்டிக்கொண்டே குனிந்திருந்தன தழைகள். நீர் பட்டுப் பளிச்சிடும் பசும் இலைகள். சங்கீதத்திற்கு ஸ்ருதி சேர்த்துக் கொண்டிருந்தன வண்டினங்கள். முகம் காட்ட மறுத்து மறைந்திருந்தன. கண்டு கொண்டிருந்தேன், கண்ணு றங்கிக் கனவு கண்டு கொண்டிருக்கும் வேளையில்.


"தெருவிலெல்லாம் வெள்ளமே! திண்ணையோரம் செல்லுமே" சிறுவயது மழை பாடல். இங்கு திண்ணையெல்லாம் இல்லை. அடுக்கக சுற்றுச்சுவரை ஒட்டி உட்புறமாக சிறு கால்வாய். அது நிரம்பி வெளியிலும் ஓடிக்கொண்டிருந்தது மழை நீர். பெய்துகொண்டிருந்த மழை அதில் வட்டமிட்டு விளையாடிக் கொண்டிருந்தது. மையத்திலிருந்து விரியும் வட்டம். பக்கத்திலிருந்து விரிந்து வரும் மற்றொரு வட்டத்தின் மீது மோதும் போது நிலை தடுமாறும் அலை வட்டம்.

நிமிர்ந்து பார்த்தேன். வானம் முழு கருப்பாக இருந்தது. வானத்தில் மழை இல்லை. மழையின் ஆதி தெரியவில்லை. பாதியிலிருந்து தெரிந்து, அந்தம் எனக்கும் கீழே விழுந்து ஓடிக்கொண்டிருந்தது. எங்கிருத்து வருகிறாய் அவசியமில்லை, என்ன கொண்டு வருகிறாய் என்பதே முக்கியமோ?. எட்டி மழையைப் பிடிக்க நினைத்த என் முயற்சி பலிக்கவில்லை. என் ஜன்னலின் சுற்று சுவர் நீளமாக இருந்தது, என் கையின் நீளத்தை விடவும். மழைப் பாடல்களும், மழை நிகழ்ச்சிகளும், மழைக் காட்சிகளும் மனத்தில் நிழலாடின. மழையின் சத்தம் என்றைக்குமே ஆனந்தம் தான்!

இன்னும் மழை பெய்து கொண்டுதானிருந்தது. பெய்யட்டும். தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யுமாம் மழை! பெய்யட்டும்! நிறைய பெய்யட்டும்! நிறைய நல்லவர்களை இத்தொல்லுலகம் வேண்டி நிற்கிறது!

எங்க வீட்டு 'கார்த்திகையும்' பின்னே என் புகைப்பட 'திறமையும்'...

(படங்களின் மேல் கிளிக்கினால் முழு படம் விரியும்)
டிரைலர்
இது தான் இமேஜ் கிரியேஷன்ல லேட்டஸ்ட் டெக்னாலஜி. முதல்ல இதுக்கு ஒரு காப்பிரைட் வாங்கணும்..;)
(விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர்-வியு லார்ஜ் ஐகான்-பிரிண்ட் ஸ்க்ரீன்-எம் எஸ் பெயிண்ட்-கட்,காப்பி,பேஸ்ட்-சேவ் அஸ்)
'கோல'விளக்கு

நிழல் இதழ்ஈரொளி
ஒளிப்பிம்பம்
எண்ணை தேடி...
திரி தூண்டி

தனிதத்தவம்
தீப ஆவளிகள்








கோழிக் குழம்பு!

(என் முதற் சிறுகதை முயற்சி. சில வருடங்களுக்கு முன் எழுதியது)

"அவங்கவங்க வீட்டுக்கு
அவரக்கா சோத்துக்கு
சாப்பாட்டு நேரத்துக்கு
சரியாப் போய்ச்சேருங்க...!"

"ய்ஸ்கூல் கிரவுண்டில்" அன்றைய மாலை விளையாட்டு முடிந்ததற்கான தேசிய கீதத்தை இசைத்து விட்டு, குழந்தைகள் அவரவர் வீடு நோக்கி நடக்கத் துவங்கினர். பரசுவும், ராமசாமியும் ஒரே வகுப்பில் பயிலும் தோழர்கள். பரசுவின் வீடு தாண்டி இரண்டு தெரு தள்ளி இருந்தது ராமசாமியின் வீடு. அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வீடு செல்வது வழக்கம். இன்றும் நடக்கத் துவங்கினர். விளையாண்ட களைப்பையும் மீறி பரசுவின் முகம் உற்சாகமாக இருந்தது. பரசுவே ஆரம்பித்தான்.

"டேய் இன்னிக்கு எங்க வீட்ல கோழிக்கொழம்புடா...தெரியுமா?"

"அப்பிடியாடா...."

பரசுவின் உற்சாகத்தை தன் முகத்திலும் ஏற்றி பதிலளித்தான் ராமசாமி. கடைசி "டா "வை உச்சரித்த நாக்கும், உதடும் சிறிது நேரம் அப்படியே இருந்தது.

"ம்ம்... சாயந்தர ஒண்ணுக்கு மணிக்கு வெளில வந்தேன்ல, அப்ப எங்கம்மா காட்ல இருந்து வீட்டுக்கு போய்ட்டு இருந்துச்சு. அப்போ சொல்லிட்டுப் போச்சு..."

"எப்போ சாப்டுவ?"

"வீட்டுக்குப் போன ஒடனே..."

சிறிது நேர மெளனத்திற்குப் பிறகு ராமசாமி கேட்டான்.
"கோழியக் கொண்டு சாப்புடறது பாவமில்லையாடா ?"
கோழியின் மேலிருந்த்த பட்சாதாபத்தை விட, தன்னால் சாப்பிட முடியவில்லையே என்ற ஏக்கமே ராமசாமியின் தொணியில் விஞ்சி நின்றது.

கோழிக் குழம்பின் ருசியை இப்போதே அனுபவிக்கத் தொடங்கி விட்டிருந்த பரசு, இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை.

"நான் மட்டுமா சாப்புடுறேன்? எல்லாரும் தான் சாப்புடுறாங்க. போடா..." என சமாளித்தான்.

அதன் பிறகு நண்பர்கள் இருவரும் மெளனமாகவே நடக்கத் துவங்கினர்.



ரசு, அவனோட அம்மா, ஐயா மூன்று பேரே கொண்ட குடும்பம் அது. பரசுவின் ஐயாவும், அம்மாவும் காடு கரைகளுக்கு களையெடுக்கவோ, பாத்தி கட்டவோ, பருத்தி, மிளகாய் பொறுக்கவோ, மருந்தடிக்கவோ, வெண்டக்காய் ஒடிக்கவோ வேலைக்குச் செல்லும் தினக்கூலிகள். அதிகாலையில் எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, முந்தைய இரவின் நீரூற்றி வைக்கப்பட்ட சோற்றின் நீராகாரத்தைக் குடித்து விட்டு, பழைய சோற்றையும் தூக்குவாளியில் ஊற்றிக் கொண்டு காடுகளுக்குச் சென்று விடுவார்கள். பரசுவுக்கு வெவரம் தெரியும் வரை, அவனை பள்ளிக்கு அனுப்பி விட்டுத் தான், அவன் அம்மா வேலைக்குப் போவாள். ஆனால், பரசு இப்பொழுதெல்லாம் தன் வேலையைத் தானே செய்ய கற்றுக் கொண்டான். தூங்கியெழுந்து, குளித்து முடித்து, பழையசோற்றை பிழிந்து வைத்து, வெங்காயமோ, பச்சமிளகாயோ கடித்துக் கொண்டு சாப்பிட்டு விட்டு, பள்ளிக்கு கிளம்பி விடுவான். மதியஉணவு அவனுக்குப் பள்ளிக்கூடச் சத்துணவு . மூணு, நாலு மணிக்கெல்லாம், பரசுவின் அம்மா காட்டிலிருந்து வந்து, அன்றைக்குத் தேவையான அரிசி, பருப்பு, மளிகை, காய்கறி வாங்கி சமைத்து விடுவாள். பரசு சாயங்காலம் பள்ளி முடிந்ததும் அப்படியே குழந்தைகளுடன் விளையாடிவிட்டு வீடு திரும்புவான். வீட்டில் சிறிது நேரம் பாடம் படிப்பான். அப்புறம் மூவரும் சாப்பிட்டு விட்டு உறங்கி விடுவார்கள். நல்லநாள், பொல்லநாள் தவிர, வருடத்தின் முக்கால்வாசி நாட்களில், அந்தக் குடும்பத்தின் வாழ்க்கை முறை இதுதான்.

பக்கத்து வீட்டு பவளத்திற்கு, கர்சக்காட்டுக்கு, களையெடுக்கப் போன பாக்கி இருந்தது, பரசுவின் அம்மாவிற்கு. அதாச்சு இன்னியோட பதினைஞ்சு நாலு, களையெடுத்து. ஆனா, காசு தான் வரல. ஊடால ஒரு தடவ கேட்டப்ப, "நான் என்ன வைச்சுக்கிட்டாடி இல்லைன்றேன்? போன மாசம் துவர அளந்தேன். அந்த யாவாரிப் பய இன்னைக்குத் தரேன், நாளைக்குத் தரேன்னு சொல்றானே ஒழிய, இன்னும் துட்டு வந்து சேந்தபாடில்ல"ன்னு பதில் வந்தது. வேறு யாராவது என்றால், கறாரா பேசி காசு வாங்கிவிடுவாள், பரசுவின் அம்மா. ஆனால் வாக்கப்பட்டு வந்த நாளிலிருந்து, பவளத்திடம் தாயா பிள்ளையாப் பழகியாச்சு. அதும்போக, பவளம் சொல்வதும் உண்மை. அவ நிலமையும் அப்பிடித் தான். அதனால் செய்வதறியாமல் இருந்தாள். அனால் அன்று வேறு ஒரு முடிவோடு பவளத்தின் வீட்டுக்குச் சென்றாள்.

"வாடி! வேலைக்குப் போய்ட்டு சீக்கிரமே வந்துட்ட போல?"

"ஆமா மதினி! மேட்டுத் தோட்டத்துல, செட்டியாருக்கு கடல ஆயப் போயிருந்தேன். வெரசா முடிஞ்சி போச்சி..."

"ம்ம்..."

"ம்மதினி, களையெடுப்புப் பாக்கிக்கு, உங்க வீட்ல சுத்துதே ரெண்டு கோழிக்குஞ்சுக அதுல ஒண்ண புடிச்சுகிடட்டா...?"

"இதென்னடி புதுக்கூத்து? எப்பவுமே காசு தான் வேணும்னு குறியாயிருப்ப. இப்ப என்ன கோழி கேக்குறவ?"

"அதயேன் கேக்குற? போன ரெண்டு மாத்தைக்கு முந்தி, செல்லாரபட்டில பொங்கலுன்னு, எங்கண்ண வீட்டுக்குப் போயிருந்தமுல்ல. அப்ப, மச்சினனையும், மருமகனையும் வகையா கெவனிக்கறன்னு, எங்கண்ண கோழியடிச்சு சோறு போட்டுச்சு. அங்கன போயிட்டு வந்ததுல இருந்து, எங்க பரசுப்பய நீயும் கோழிக்குழம்பு வைச்சுத்தான்னு ஒரே நொச்சரிப்பு. அதான் உங்கிட்ட கேக்கச் சொல்லி அவங்கய்யா சொல்லிச்சு..."

"ஒ அதானா சங்கதி ? ஆனா ரொம்ப சின்னக் குஞ்சாவில்லடி இருக்கு. றெக்கை எல்லாம் போனா காக்கிலோ கூட தேறாதே?"

"பரவால்ல மதினி... பரசுக்கு மட்டும் அளவா ரெண்டு துண்டு வந்தாப் போதும். இதுக்கும் மேல இல்லன்னு சொன்னா பாவம் புள்ள ஏங்கிப் போய்டுவான்..."

"ம்ம்... சரி. கேட்டுட்ட... புடிச்சுட்டுட்டுப்போ"



"எம்மா...கோழிக்கொழம்ம்ம்..." என்று கத்திக்கொண்டே வந்த பரசு, தன் முன்னேயிருந்த தட்டில் அறுத்து வைக்கப்பட்டிருந்த கொழிச்சதைத் துண்டுகளைப் பார்த்ததும் பாதியிலேயே நிறுத்தி விட்டான்.

"என்னம்மா... இன்னுமா கொழம்பு வைக்கல?"

"இதோ ஆயிடும்டா. நீ போயி கை, கால், மூஞ்சி கழுவிட்டு பாடம் படிச்சுட்டு இரு. அம்மா கூப்பிடுறேன். போ..." சீமக்கருவேல முள் விறகை அடுப்பிற்குள் தள்ளியவாறே சொன்னாள்.

"போம்மா... நான் இங்கனக்குள்ளேயே உக்காந்து வேடிக்கை பாக்குறேன்."

"ஏ ராசால்ல... போடா. இங்க பொகயடிக்கும். உனக்கு சேராது. பெறகு ஐயா வந்தா வையும்."

"போம்மா..." என்று சிணுங்கிக் கொண்டே எழுந்தான். பக்கத்திலிருந்த அண்டாவிலிருந்து ஒரு செம்புத் தண்ணி எடுத்துக்கொண்டான். வீட்டின் முன்புறம், சுவரை ஒட்டி இருந்த வாறுகாலில்(கழிவு நீர்க் கால்வாய்) வாசலின் வலதுபுறம் நின்று கொண்டு கை, கால் முகம் கழுவினான். அருகிலிருந்த கொடியில் தொங்கிக் கொண்டிருந்த துண்டை இழுத்து துடைத்துவிட்டு, பள்ளிக்கூட பைக்கட்டை எடுத்துக்கொண்டு வாசலின் இடதுபுறம், வாறுகாலை மூடியவாறு போடப்பட்டிருந்த கடப்பா கல்லின் மீதமர்ந்தான். அதுதான் அவர்களுக்குத் திண்ணை, துவைகல், பரசுவின் படிக்கும் மேசை எல்லாம். அக்கல்லின் மேல் சம்மணங்கால் போட்டமர்ந்து, தமிழ் புத்தகத்தை எடுத்து விரித்து, மடியில் வைத்து, முதுகும் தலையும் ஒருசேர முன்னும் பின்னும் போய்வருமாறு குனிந்து நிமிர்ந்து, வாய்விட்டு, ராகமாக, அவன் ஆசிரியை சொல்லித் தந்தது போலவே படிக்கத் துவங்கினான்.

"அறம் செய விரும்பு..."

"ஆறுவது சினம்..."

கடப்பா கல்லிற்கும், வாறுகாலின் இருகரைகளுக்கும் சிறிது இடைவெளி இருந்ததால், இவன் ஆடஆட, கல்லும் ஆடியது. இரு ஆட்டத்திற்கும் ஒத்திசைவு இல்லாமல் இருந்தாலும் அது பரசுவுக்குப் பழகியிருந்தது.

"இயல்பது... அம்மா எப்பம்மா முடியும் ?" உள்ளே எட்டிப் பார்த்துக் கத்தினான். அம்மா பதில் சொல்லாமல் வேலையில் கவனமாயிருந்தாள்.

"அறம் செய விரும்பு..."
.
.
.
சிறிது நேரத்திற்குப் பின் தமிழ் புத்தகத்தை மூடிவைத்து விட்டு, வாய்ப்பாட்டைப் பிரித்தான்.

"ஓரொண் ஒண்ணே..."

"ஈரொண் ரெண்டே..."

"மூவொண் மூணே...அம்மா அய்யா எங்கம்மா?"

"கம்மாப் பக்கம் போயிருக்குடா..."

"நாலொண் நாலே..."

"அஞ்சொண் அஞ்சே..."
.
.
.
"பாஞ்சொண் பாஞ்ச்சே..."

"ப்ப்ப்பதினா...றொண் பதினாறே..."

"பரசு... இங்க வாடா..."

உள்ளே இருந்து குரல் வந்தது தான் தாமதம், எல்லா புத்தகங்களையும் மடித்து பைக்கட்டில் வைத்து, அதை முருகன் படத்துக்குக்கிழே இருந்த ஆணியில் மாட்டினான். நேராப் போய் ஒரு தட்டெடுத்து அதை அண்டாவில் முக்கி ஒரு சுழற்று சுழற்றிவிட்டு, கையையும் அண்டாவில் முக்கிஎடுத்துவிட்டு அம்மாவின் முன்னமர்ந்தான். அதுவரை இவன் செய்கைகளை கவனிக்காது , ஒரு கிண்ணத்தில் குழம்பை ஊற்றி அளவு பார்த்துக் கொண்டிருந்த பரசுவின் அம்மா, அதை அவனிடம் நீட்டி, "ந்தா... இதப்போய் பவளமத்தைகிட்ட குடுத்துட்டு ஓடிவா, சாப்பிடலாம்" என்றாள்.

"சாப்ட்டுட்டு அப்புறம் போறேன்மா..."

"வெரசா போடா. அவங்க வீட்ல சாப்பிட்ற போறாங்க..."

முணங்கிக் கொண்டே, கிண்ணத்தை வாங்கிக் கொண்டு போனான். திரும்பி வந்த போது, தட்டில் சோறுபோட்டு, குழம்பு ஊற்றி, நிறைய்ய்ய்ய்ய கறி வைத்து இருந்தது. நேராக சாப்பிட ஆரம்பித்தான் பரசு...

ஒரு விசிறியை எடுத்து அவனுக்கு விசிறிக்கொண்டே, அவன் சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டிருந்தாள் பரசுவின் அம்மா. எலும்பை கடிக்க சிரமப்படும் போது, எலும்பிலிருந்து கறியைத் துண்டா எடுத்துக் கொடுத்தாள்.

"ச்சூப்பரா இருக்கும்மா..." அவள் சிரித்துக்கொண்டாள்.

"என்னம்மா கறி இவ்ளோதா இருக்கு. அவ்ளோதானா? உனக்கு?"

"உனக்குத்தாண்டா எல்லாம். நீ சாப்ட்டா நான் சாப்ட்ட மாதிரி..." அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே வாசலில் நிழல் ஆடியது.

"டேய் பரசு... நாளைக்கு காத்தால வெளையாட வர்றியா?" கேட்டவாறு ராமசாமி நின்றிருந்தான்.

ராமசாமியைப் பார்த்து விட்டு அம்மாவைப் பார்த்து பரசு சொன்னான். "எம்பிரண்டுமா...ராமசாமி..."

ஒரு நாளும் இல்லாத வழக்கமாக, காத்தால வெளையாட்டுக்கு இப்பவே கூப்பிட்டு வந்திருக்கானே என யோசித்தவள், சட்டென எதையோ யூகித்தவளாக ...,
" நீயும் வாடா சாப்பிடலாம்" என்றாள்.

"இல்ல... நான் சாப்பிட்டேன்... இல்...ல" இன்னொருமுறை கூப்பிட்டால் போய்விடலாமென இழுத்தான்.

பரசு எதையோ நினைத்தவனாக, "டேய் ராமசாமி, கோழி சாப்பிட்டா பாவமெல்லாம் வராதுடா. சும்மா வாடா. வந்து சாப்புடுறா..." என்றான்.

பரசுவின் அம்மா முழித்தாள், பரசு எதைப்பற்றி பேசுகிறான் என்று. ராமசாமி விடுவிடுவென வந்து பரசுவை ஒட்டினாற் போல் அமர்ந்து கொண்டான் .

"டேய், போய் கையக் கழுவிட்டு வாடா..."

சிரித்துக்கொண்டே எழுந்து ஓடி, அண்டாவிற்குள் கையை முக்கிவிட்டு வந்தான், ராமசாமி.

அவனுக்கும் ஒரு தட்டு வைத்து, சோறு வைத்து, தன் வீட்டுக்காரருக்காக சிறிது தனியே எடுத்து வைத்திருந்த கோழிக்குழம்பை எடுத்து ராமசாமிக்குப் பரிமாறத் தொடங்கினாள், பரசுவின் அம்மா!

முதுமையைப் போற்றுவோம்!

கடந்த சனிக்கிழமை இரவு நண்பன் திருமணத்திற்காக மதுரை செல்ல வேண்டி, நெற்குன்றம் பேருந்து நிறுத்தத்திலிருந்து ஷேர் ஆட்டோ மூலமாக கோயம்பேடு பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்தேன். கோயம்பேடு வெளியூர் பேருந்து நிறுத்தத்தில் பெரும்பாலோனோர் இறங்கி விட நானும் ஒரு பாட்டியும் மட்டுமிருந்தோம்.

"நீங்க எங்க சார் போகணும்?"

"உள்ள டவுன் பஸ் ஸ்டாண்ட்"

"உள்ள போய் இந்த பாட்டிய கோல்டன் பிளாட்ஸ் போற பஸ்ல ஏத்திவிட்றீங்களா?"

"..."

"இவங்க கோல்டன் பிளாட்ஸ் போணுமாம். உள்ள போனா D70 வரும். அதுல ஏத்திவிட்ருங்க"

"....சரி நான் ஏத்திவிட்டுர்றேன்"

"பாட்டி பஸ் ஸ்டாண்ட் முன்னாடி இறக்கி விடுறேன். அவர் கூட உள்ள போ. உன்ன அவர் D70 ஏத்திவிட்டுருவார்"

இருவரும் இறங்கி உள்ளே நடந்தோம்.

"கூடவே வந்து இருக்கலாம். ஆட்டோல ஏத்தி விட்டுட்டுப் போய்ட்டான். ஆட்டோக்காரனுக்கும் உனக்கும் இருக்குறது கூட பெத்த புள்ளைக்கு இல்ல. ம்ம்ம்.....எனக்கு இந்த D70 எல்லாம் தெரியும். இருட்டாயிடுச்சுல அதுதான்..." என் முகத்தை பார்க்காமலே, குனிந்தவாறே பேசிக்கொண்டு வந்தார்.

"நீ எங்க போற?"

"நான் எக்மோர்"

D70 வந்து நிற்கும் இடம் வந்திருந்தோம்.

"எனக்கு ட்ரெயின்க்கு நேரமாகுது. இங்கேயே நில்லுங்க. D70 வரும். பாத்து ஏறிக்கோங்க"

"ரொம்ப தேங்க்ஸ்பா"

"பரவால்ல...பரவால்ல..." என சொல்லி அவர் இடப்பக்கம் நின்று கொண்டிருந்த நான், என வலக்கையை அவர் தோளைச் சுற்றி அணைக்குமாறு கொண்டு சென்று முதுகில் லேசாகத் தட்டினேன்.

இதை எதிர்பார்க்காத அவர் சிறிது வெட்கத்துடன் சிரித்தார். அங்கிருந்து எக்மோர் செல்லும் பேருந்து தேடி நகர்ந்தேன்.

இது ஒரு தற்செயல் நிகழ்வு! என் பாட்டியையோ தாத்தாவையோ, கூட இருந்து கை பிடித்து அழைத்துப்போன சம்பவங்கள் எனக்கு மனத்தில் இல்லை. என் பள்ளி கல்லூரி வாழ்கையின் பெரும் பகுதியை விடுதியில் கழித்ததனால் பெருமளவு வாய்ப்பும் இல்லாமல் போனது. ஒருமுறை, நியாயவிலைக் கடையில் பொருள் வாங்கி விட்டு படியில் கீழிறங்கும் போது, தாத்தாவை விட்டுவிட்டு வேகமாக இறங்கிய போது அருகிலிருந்த ஒரு பெண் "தாத்தா கைய பிடிச்சு கூட்டிட்டுப் போப்பா" என சற்று கடுமையாகவே எச்சரித்தார்.

பொதுவாகவே மற்றவர்களுக்கு உதவும் குணம் உடையவர்கள் கூட தன் குடும்பத்தில் உள்ளவர்க்கென்று வரும்போது சற்று அலட்சியமாக இருந்துவிடுவதுண்டு. அந்த பாட்டியின் மகன் கூட அப்படி ஒருவராக இருந்து இருக்கலாம்.
***************************************
*
*********************************************


மதுரையில் கல்யாணம். முன்தினம் இரவு நிச்சயதார்த்தம் முடிந்து உணவருந்திக்கொண்டு இருந்தோம். பந்தியில், எங்களுக்கு பின்புறமிருந்த வரிசையில் இருந்து பரிமாறுபவரின் குரல் கேட்டது. "இது தான் கடைசி பந்தி. ஒண்ணும் அவசரம் இல்ல. மெதுவா பொறுமையா சாப்பிடு". திரும்பி பார்த்த போது ஒரு பாட்டி பரோட்டாவை குருமாவில் ஊறவைத்து அதை பிய்த்து சாப்பிட முயன்று கொண்டிருந்தார். கொஞ்சம் சிரமப்பட்டாலும் ரசித்து சாப்பிடுவதாகவே எங்களுக்குப் பட்டது. நாங்கள் முடித்து விட்டு எழுந்த பின்பும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அடுத்த நாள் திருமணம் முடிந்த பின்பு, அப்பாட்டி பாதி குடித்திருந்த 'மிராண்டா' பாட்டிலை கையில் வைத்துக்கொண்டு வருவதை பார்த்தேன். நானும் என் நண்பனும் பார்த்து புன்னகைத்துக் கொண்டோம்.

'பரோட்டா பாட்டி' என்று பேர் வைத்து மற்ற நண்பர்களுக்கும் மேற்சொன்ன இரண்டு நிகழ்வையும் விவரித்தோம்.

மாலையில், மணமுடித்த நண்பனின் வீட்டுக்கு சென்றிருந்தோம். புதுமாப்பிள்ளை நண்பன் வாசலில் நின்று கொண்டு எல்லோரையும் வரவேற்பதுவும், செல்பவர்களுக்கு நன்றி கூறுவதுமாக இருந்தான். தற்செயலா அப்பக்கம் நான் வந்த போது தான், அந்த பாட்டி நண்பனிடம் விடை பெற்று அவனுக்கு சொல்லிக்கொண்டிருந்தார்.
"நல்லா வைச்சுக்கோங்கப்பு!"

எனைத்தான் அன்பே மறந்தாயோ?

பள்ளிக்கூட படிப்பக்கூட
பாதியில விட்டுப்போட்டு
பட்டாளம் போனமச்சான்
பாவிமக நெனப்பிருக்கா?

ஆலமர ஊஞ்சல்லையும்
ஆமணக்குத் தோட்டத்திலயும்
ஆடிப்பாடி ஓடினோமே
அதாச்சும் யாவமிருக்கா?

ஒன்னப்பத்தி நெனைச்சாலே
ஒறக்கமெல்லா ஓடிப்போது!
நெதானமே இல்லாம
நெதநெதம் பித்துப்பிடிக்குது!

உருப்படாம போனவன்னுதான்
ஊருசனம் பொறணி பேசுது!
இலவுகாத்த கிளிக்கு என்ன
இட்டுக்கட்டி கத சொல்லுது!

மாமங்கிட்ட சொல்லிட்டியா?
மனச தொறந்து காட்டீட்டியா?
சோடிப்பொண்ணுங்க கேக்குறாங்க
சொல்லிச்சொல்லி சிரிக்கிறாங்க!

கம்மாக்குள்ள மழத்தண்ணி
கடுதாசி போட்டா வந்துசேரும்?
சோளக்கொல்ல குருவிரெண்டும்
சொல்லிகிட்டா ஒண்ணு சேரும்?

எதிர்க்கேள்வி நாங்கேட்டா
எனக்கெந்த பதிலுமில்ல
கூனிக்குறுகி இளிப்பாளுக
கூறுகெட்ட குப்பாயிமக்க!

மத்தவங்களப்பத்தி கவலயில்ல
மசிரேபோச்சுன்னுதான் ஊதிடுவேன்
ஊருவாய பொத்திவைக்க
உலகத்திலேயே ஒண்ணுமில்லன்னு!

அடுத்த தைதான் கடைசியாம்
அதுக்கு மேல பொறுக்கமாட்டாளாம்!
அம்மாக்காரி சொல்லிப்புட்டா
அவகடம அவளுக்கு!

சேந்துநட்ட புங்ககூட
சரஞ்சரமா பூத்திடுச்சு
என்கூட சமஞ்சதெல்லாம்
ஏழெட்டு பெத்திடுச்சு!

இதுக்குமேல எதுத்துநிக்க
இந்தவுசுருக்கு திராணியில்ல
ஏதாச்சும் செஞ்சுக்குவேன்
எவனாச்சும் கட்டவந்தா!

கயிறோ கள்ளிப்பாலோ
கணக்கா முடிச்சுக்குவேன்
கனகுப்பயலுக்காவது கருகெடைக்கும்
கவிதயில என்கதயப்பாட!

பாண்டவர் பூமியிலிருந்து...

கல்லூரி படிக்கும் காலத்தில் எழுதிய கவிதை! நகரத்தில் வாழும் எங்களுக்கும் பல நன்மைகள் உள்ளது, கிராமத்தில் உள்ளவர்களுக்கு இல்லாதது என, ஒரு சிறு விமர்சனம் என் முன் வைக்கப்பட்ட போது, இது நகரத்தில் வாழும் அடுத்தவர்களுக்காக எழுதியது அல்ல. என்னையே நான் கிராம வாசியாகவும் நகர வாசியாகவும் வரிந்து கொண்டு, கிராமவாசி கனகு, நகரவாசி கனகுவிடம் கேட்பதாகத் தான் எழுதினேன், என பொய் சமாதானம் சொன்னேன். ஆனால் இன்று, இந்த கவிதையில் உள்ள அத்தனையும், என்னளவிலே உண்மையாகிப் போனது தான் நிதர்சனம். யதார்த்தத்தின் மீது பழி போட்டு விட்டு நானும் நகரமாகிப்போனேன்!


இரைச்சலை இசையாக்கி,
சத்தத்தை சங்கீதமாக்கி,
அவசரத்தையே
அடுத்த அடியாகக் கொண்டு,
இயற்கையைக் கூட
இயந்திரமாக்கி,
இரத்தவோட்டமுள்ள
இயந்திரமாகிப் போன,
நகரத்து நண்பருக்கு...

அடுத்த வீட்டில்,
யாரென்றறியாத
'அபார்ட்மென்ட்' வாசம்!

கரி அமில வாயுவையே
காசு கொடுத்து வாங்கி
சுவாசம்!

ம்மியிலிருந்து
சிரியர் வரை
யந்திரத்தில்!

ன்றவர்களோ
தவும் கரங்களில்
சல்களாய்!

ட்டாவது மாடியில் வீடு
ழடுக்கு குளிர்சாதனப்பெட்டி
ம்பத்தாறு 'சேனல்' தொலைக்காட்சி
ன்றாம் வகுப்பிற்கே
ராயிரம் புத்தகங்கள்
வைக்கும் சங்கம்
திலும் ஊழல்!

இன்னும் இன்னும்
எத்தனையோ
அவசிய, அனாவசிய
தேவைகள்
வசதிகள்
வாய்ப்புகள்!

ஆயிரம் இருக்கட்டுமே!
என்றேனும்
பசித்துப் புசித்ததுண்டா?
இல்லை,
படுத்தகணம் அறியாமலுறங்கிய
பழக்கம்தானுண்டா?