
மழை! துப்பார்க்குத் துப்பாய தூஉ மழை! தூவிக்கொண்டிருந்தது. சீராக! நூற் பிடித்தாற்போல் நேராக! காற்றுத்தேவன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான் போல். நான் அமர்ந்திருந்தது முதல் மாடி. என் ஜன்னலின் வழி பார்த்தால் பக்கத்திலிருக்கும் காலிமனை தெரியும். எங்கள் அடுக்கக சுற்றுச்சுவர்க்கு வெளிப்பக்கமாக.

"தெருவிலெல்லாம் வெள்ளமே! திண்ணையோரம் செல்லுமே"
சிறுவயது மழை பாடல். இங்கு திண்ணையெல்லாம் இல்லை. அடுக்கக சுற்றுச்சுவரை ஒட்டி உட்புறமாக சிறு கால்வாய். அது நிரம்பி வெளியிலும் ஓடிக்கொண்டிருந்தது மழை நீர். பெய்துகொண்டிருந்த மழை அதில் வட்டமிட்டு விளையாடிக் கொண்டிருந்தது. மையத்திலிருந்து விரியும் வட்டம். பக்கத்திலிருந்து விரிந்து வரும் மற்றொரு வட்டத்தின் மீது மோதும் போது நிலை தடுமாறும் அலை வட்டம்.

நிமிர்ந்து பார்த்தேன். வானம் முழு கருப்பாக இருந்தது. வானத்தில் மழை இல்லை. மழையின் ஆதி தெரியவில்லை. பாதியிலிருந்து தெரிந்து, அந்தம் எனக்கும் கீழே விழுந்து ஓடிக்கொண்டிருந்தது. எங்கிருத்து வருகிறாய் அவசியமில்லை, என்ன கொண்டு வருகிறாய் என்பதே முக்கியமோ?. எட்டி மழையைப் பிடிக்க நினைத்த என் முயற்சி பலிக்கவில்லை. என் ஜன்னலின் சுற்று சுவர் நீளமாக இருந்தது, என் கையின் நீளத்தை விடவும். மழைப் பாடல்களும், மழை நிகழ்ச்சிகளும், மழைக் காட்சிகளும் மனத்தில் நிழலாடின. மழையின் சத்தம் என்றைக்குமே ஆனந்தம் தான்!
இன்னும் மழை பெய்து கொண்டுதானிருந்தது. பெய்யட்டும். தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யுமாம் மழை! பெய்யட்டும்! நிறைய பெய்யட்டும்! நிறைய நல்லவர்களை இத்தொல்லுலகம் வேண்டி நிற்கிறது!
1 கருத்து:
நல்லாருக்கு! :-) ஒரு சந்தேகம்.. கடைசி வரில. ஒருவர் இருந்தா கூட உலகத்துல மழை பெய்யும்ன்ர அர்த்தம்! சரியா?! அப்படின்னா, மழை பெஞ்சு நிறைய நல்லவர்களை கொண்டு வரட்டும், நிறைய பேரு தேவைபடுராங்கன்ர அர்த்தத்துல எழுதிருக்குற மாதிரி இருக்கே?. இதுனால அதா? அதுனால இதா?
கருத்துரையிடுக