கோழிக் குழம்பு!

(என் முதற் சிறுகதை முயற்சி. சில வருடங்களுக்கு முன் எழுதியது)

"அவங்கவங்க வீட்டுக்கு
அவரக்கா சோத்துக்கு
சாப்பாட்டு நேரத்துக்கு
சரியாப் போய்ச்சேருங்க...!"

"ய்ஸ்கூல் கிரவுண்டில்" அன்றைய மாலை விளையாட்டு முடிந்ததற்கான தேசிய கீதத்தை இசைத்து விட்டு, குழந்தைகள் அவரவர் வீடு நோக்கி நடக்கத் துவங்கினர். பரசுவும், ராமசாமியும் ஒரே வகுப்பில் பயிலும் தோழர்கள். பரசுவின் வீடு தாண்டி இரண்டு தெரு தள்ளி இருந்தது ராமசாமியின் வீடு. அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வீடு செல்வது வழக்கம். இன்றும் நடக்கத் துவங்கினர். விளையாண்ட களைப்பையும் மீறி பரசுவின் முகம் உற்சாகமாக இருந்தது. பரசுவே ஆரம்பித்தான்.

"டேய் இன்னிக்கு எங்க வீட்ல கோழிக்கொழம்புடா...தெரியுமா?"

"அப்பிடியாடா...."

பரசுவின் உற்சாகத்தை தன் முகத்திலும் ஏற்றி பதிலளித்தான் ராமசாமி. கடைசி "டா "வை உச்சரித்த நாக்கும், உதடும் சிறிது நேரம் அப்படியே இருந்தது.

"ம்ம்... சாயந்தர ஒண்ணுக்கு மணிக்கு வெளில வந்தேன்ல, அப்ப எங்கம்மா காட்ல இருந்து வீட்டுக்கு போய்ட்டு இருந்துச்சு. அப்போ சொல்லிட்டுப் போச்சு..."

"எப்போ சாப்டுவ?"

"வீட்டுக்குப் போன ஒடனே..."

சிறிது நேர மெளனத்திற்குப் பிறகு ராமசாமி கேட்டான்.
"கோழியக் கொண்டு சாப்புடறது பாவமில்லையாடா ?"
கோழியின் மேலிருந்த்த பட்சாதாபத்தை விட, தன்னால் சாப்பிட முடியவில்லையே என்ற ஏக்கமே ராமசாமியின் தொணியில் விஞ்சி நின்றது.

கோழிக் குழம்பின் ருசியை இப்போதே அனுபவிக்கத் தொடங்கி விட்டிருந்த பரசு, இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை.

"நான் மட்டுமா சாப்புடுறேன்? எல்லாரும் தான் சாப்புடுறாங்க. போடா..." என சமாளித்தான்.

அதன் பிறகு நண்பர்கள் இருவரும் மெளனமாகவே நடக்கத் துவங்கினர்.



ரசு, அவனோட அம்மா, ஐயா மூன்று பேரே கொண்ட குடும்பம் அது. பரசுவின் ஐயாவும், அம்மாவும் காடு கரைகளுக்கு களையெடுக்கவோ, பாத்தி கட்டவோ, பருத்தி, மிளகாய் பொறுக்கவோ, மருந்தடிக்கவோ, வெண்டக்காய் ஒடிக்கவோ வேலைக்குச் செல்லும் தினக்கூலிகள். அதிகாலையில் எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, முந்தைய இரவின் நீரூற்றி வைக்கப்பட்ட சோற்றின் நீராகாரத்தைக் குடித்து விட்டு, பழைய சோற்றையும் தூக்குவாளியில் ஊற்றிக் கொண்டு காடுகளுக்குச் சென்று விடுவார்கள். பரசுவுக்கு வெவரம் தெரியும் வரை, அவனை பள்ளிக்கு அனுப்பி விட்டுத் தான், அவன் அம்மா வேலைக்குப் போவாள். ஆனால், பரசு இப்பொழுதெல்லாம் தன் வேலையைத் தானே செய்ய கற்றுக் கொண்டான். தூங்கியெழுந்து, குளித்து முடித்து, பழையசோற்றை பிழிந்து வைத்து, வெங்காயமோ, பச்சமிளகாயோ கடித்துக் கொண்டு சாப்பிட்டு விட்டு, பள்ளிக்கு கிளம்பி விடுவான். மதியஉணவு அவனுக்குப் பள்ளிக்கூடச் சத்துணவு . மூணு, நாலு மணிக்கெல்லாம், பரசுவின் அம்மா காட்டிலிருந்து வந்து, அன்றைக்குத் தேவையான அரிசி, பருப்பு, மளிகை, காய்கறி வாங்கி சமைத்து விடுவாள். பரசு சாயங்காலம் பள்ளி முடிந்ததும் அப்படியே குழந்தைகளுடன் விளையாடிவிட்டு வீடு திரும்புவான். வீட்டில் சிறிது நேரம் பாடம் படிப்பான். அப்புறம் மூவரும் சாப்பிட்டு விட்டு உறங்கி விடுவார்கள். நல்லநாள், பொல்லநாள் தவிர, வருடத்தின் முக்கால்வாசி நாட்களில், அந்தக் குடும்பத்தின் வாழ்க்கை முறை இதுதான்.

பக்கத்து வீட்டு பவளத்திற்கு, கர்சக்காட்டுக்கு, களையெடுக்கப் போன பாக்கி இருந்தது, பரசுவின் அம்மாவிற்கு. அதாச்சு இன்னியோட பதினைஞ்சு நாலு, களையெடுத்து. ஆனா, காசு தான் வரல. ஊடால ஒரு தடவ கேட்டப்ப, "நான் என்ன வைச்சுக்கிட்டாடி இல்லைன்றேன்? போன மாசம் துவர அளந்தேன். அந்த யாவாரிப் பய இன்னைக்குத் தரேன், நாளைக்குத் தரேன்னு சொல்றானே ஒழிய, இன்னும் துட்டு வந்து சேந்தபாடில்ல"ன்னு பதில் வந்தது. வேறு யாராவது என்றால், கறாரா பேசி காசு வாங்கிவிடுவாள், பரசுவின் அம்மா. ஆனால் வாக்கப்பட்டு வந்த நாளிலிருந்து, பவளத்திடம் தாயா பிள்ளையாப் பழகியாச்சு. அதும்போக, பவளம் சொல்வதும் உண்மை. அவ நிலமையும் அப்பிடித் தான். அதனால் செய்வதறியாமல் இருந்தாள். அனால் அன்று வேறு ஒரு முடிவோடு பவளத்தின் வீட்டுக்குச் சென்றாள்.

"வாடி! வேலைக்குப் போய்ட்டு சீக்கிரமே வந்துட்ட போல?"

"ஆமா மதினி! மேட்டுத் தோட்டத்துல, செட்டியாருக்கு கடல ஆயப் போயிருந்தேன். வெரசா முடிஞ்சி போச்சி..."

"ம்ம்..."

"ம்மதினி, களையெடுப்புப் பாக்கிக்கு, உங்க வீட்ல சுத்துதே ரெண்டு கோழிக்குஞ்சுக அதுல ஒண்ண புடிச்சுகிடட்டா...?"

"இதென்னடி புதுக்கூத்து? எப்பவுமே காசு தான் வேணும்னு குறியாயிருப்ப. இப்ப என்ன கோழி கேக்குறவ?"

"அதயேன் கேக்குற? போன ரெண்டு மாத்தைக்கு முந்தி, செல்லாரபட்டில பொங்கலுன்னு, எங்கண்ண வீட்டுக்குப் போயிருந்தமுல்ல. அப்ப, மச்சினனையும், மருமகனையும் வகையா கெவனிக்கறன்னு, எங்கண்ண கோழியடிச்சு சோறு போட்டுச்சு. அங்கன போயிட்டு வந்ததுல இருந்து, எங்க பரசுப்பய நீயும் கோழிக்குழம்பு வைச்சுத்தான்னு ஒரே நொச்சரிப்பு. அதான் உங்கிட்ட கேக்கச் சொல்லி அவங்கய்யா சொல்லிச்சு..."

"ஒ அதானா சங்கதி ? ஆனா ரொம்ப சின்னக் குஞ்சாவில்லடி இருக்கு. றெக்கை எல்லாம் போனா காக்கிலோ கூட தேறாதே?"

"பரவால்ல மதினி... பரசுக்கு மட்டும் அளவா ரெண்டு துண்டு வந்தாப் போதும். இதுக்கும் மேல இல்லன்னு சொன்னா பாவம் புள்ள ஏங்கிப் போய்டுவான்..."

"ம்ம்... சரி. கேட்டுட்ட... புடிச்சுட்டுட்டுப்போ"



"எம்மா...கோழிக்கொழம்ம்ம்..." என்று கத்திக்கொண்டே வந்த பரசு, தன் முன்னேயிருந்த தட்டில் அறுத்து வைக்கப்பட்டிருந்த கொழிச்சதைத் துண்டுகளைப் பார்த்ததும் பாதியிலேயே நிறுத்தி விட்டான்.

"என்னம்மா... இன்னுமா கொழம்பு வைக்கல?"

"இதோ ஆயிடும்டா. நீ போயி கை, கால், மூஞ்சி கழுவிட்டு பாடம் படிச்சுட்டு இரு. அம்மா கூப்பிடுறேன். போ..." சீமக்கருவேல முள் விறகை அடுப்பிற்குள் தள்ளியவாறே சொன்னாள்.

"போம்மா... நான் இங்கனக்குள்ளேயே உக்காந்து வேடிக்கை பாக்குறேன்."

"ஏ ராசால்ல... போடா. இங்க பொகயடிக்கும். உனக்கு சேராது. பெறகு ஐயா வந்தா வையும்."

"போம்மா..." என்று சிணுங்கிக் கொண்டே எழுந்தான். பக்கத்திலிருந்த அண்டாவிலிருந்து ஒரு செம்புத் தண்ணி எடுத்துக்கொண்டான். வீட்டின் முன்புறம், சுவரை ஒட்டி இருந்த வாறுகாலில்(கழிவு நீர்க் கால்வாய்) வாசலின் வலதுபுறம் நின்று கொண்டு கை, கால் முகம் கழுவினான். அருகிலிருந்த கொடியில் தொங்கிக் கொண்டிருந்த துண்டை இழுத்து துடைத்துவிட்டு, பள்ளிக்கூட பைக்கட்டை எடுத்துக்கொண்டு வாசலின் இடதுபுறம், வாறுகாலை மூடியவாறு போடப்பட்டிருந்த கடப்பா கல்லின் மீதமர்ந்தான். அதுதான் அவர்களுக்குத் திண்ணை, துவைகல், பரசுவின் படிக்கும் மேசை எல்லாம். அக்கல்லின் மேல் சம்மணங்கால் போட்டமர்ந்து, தமிழ் புத்தகத்தை எடுத்து விரித்து, மடியில் வைத்து, முதுகும் தலையும் ஒருசேர முன்னும் பின்னும் போய்வருமாறு குனிந்து நிமிர்ந்து, வாய்விட்டு, ராகமாக, அவன் ஆசிரியை சொல்லித் தந்தது போலவே படிக்கத் துவங்கினான்.

"அறம் செய விரும்பு..."

"ஆறுவது சினம்..."

கடப்பா கல்லிற்கும், வாறுகாலின் இருகரைகளுக்கும் சிறிது இடைவெளி இருந்ததால், இவன் ஆடஆட, கல்லும் ஆடியது. இரு ஆட்டத்திற்கும் ஒத்திசைவு இல்லாமல் இருந்தாலும் அது பரசுவுக்குப் பழகியிருந்தது.

"இயல்பது... அம்மா எப்பம்மா முடியும் ?" உள்ளே எட்டிப் பார்த்துக் கத்தினான். அம்மா பதில் சொல்லாமல் வேலையில் கவனமாயிருந்தாள்.

"அறம் செய விரும்பு..."
.
.
.
சிறிது நேரத்திற்குப் பின் தமிழ் புத்தகத்தை மூடிவைத்து விட்டு, வாய்ப்பாட்டைப் பிரித்தான்.

"ஓரொண் ஒண்ணே..."

"ஈரொண் ரெண்டே..."

"மூவொண் மூணே...அம்மா அய்யா எங்கம்மா?"

"கம்மாப் பக்கம் போயிருக்குடா..."

"நாலொண் நாலே..."

"அஞ்சொண் அஞ்சே..."
.
.
.
"பாஞ்சொண் பாஞ்ச்சே..."

"ப்ப்ப்பதினா...றொண் பதினாறே..."

"பரசு... இங்க வாடா..."

உள்ளே இருந்து குரல் வந்தது தான் தாமதம், எல்லா புத்தகங்களையும் மடித்து பைக்கட்டில் வைத்து, அதை முருகன் படத்துக்குக்கிழே இருந்த ஆணியில் மாட்டினான். நேராப் போய் ஒரு தட்டெடுத்து அதை அண்டாவில் முக்கி ஒரு சுழற்று சுழற்றிவிட்டு, கையையும் அண்டாவில் முக்கிஎடுத்துவிட்டு அம்மாவின் முன்னமர்ந்தான். அதுவரை இவன் செய்கைகளை கவனிக்காது , ஒரு கிண்ணத்தில் குழம்பை ஊற்றி அளவு பார்த்துக் கொண்டிருந்த பரசுவின் அம்மா, அதை அவனிடம் நீட்டி, "ந்தா... இதப்போய் பவளமத்தைகிட்ட குடுத்துட்டு ஓடிவா, சாப்பிடலாம்" என்றாள்.

"சாப்ட்டுட்டு அப்புறம் போறேன்மா..."

"வெரசா போடா. அவங்க வீட்ல சாப்பிட்ற போறாங்க..."

முணங்கிக் கொண்டே, கிண்ணத்தை வாங்கிக் கொண்டு போனான். திரும்பி வந்த போது, தட்டில் சோறுபோட்டு, குழம்பு ஊற்றி, நிறைய்ய்ய்ய்ய கறி வைத்து இருந்தது. நேராக சாப்பிட ஆரம்பித்தான் பரசு...

ஒரு விசிறியை எடுத்து அவனுக்கு விசிறிக்கொண்டே, அவன் சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டிருந்தாள் பரசுவின் அம்மா. எலும்பை கடிக்க சிரமப்படும் போது, எலும்பிலிருந்து கறியைத் துண்டா எடுத்துக் கொடுத்தாள்.

"ச்சூப்பரா இருக்கும்மா..." அவள் சிரித்துக்கொண்டாள்.

"என்னம்மா கறி இவ்ளோதா இருக்கு. அவ்ளோதானா? உனக்கு?"

"உனக்குத்தாண்டா எல்லாம். நீ சாப்ட்டா நான் சாப்ட்ட மாதிரி..." அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே வாசலில் நிழல் ஆடியது.

"டேய் பரசு... நாளைக்கு காத்தால வெளையாட வர்றியா?" கேட்டவாறு ராமசாமி நின்றிருந்தான்.

ராமசாமியைப் பார்த்து விட்டு அம்மாவைப் பார்த்து பரசு சொன்னான். "எம்பிரண்டுமா...ராமசாமி..."

ஒரு நாளும் இல்லாத வழக்கமாக, காத்தால வெளையாட்டுக்கு இப்பவே கூப்பிட்டு வந்திருக்கானே என யோசித்தவள், சட்டென எதையோ யூகித்தவளாக ...,
" நீயும் வாடா சாப்பிடலாம்" என்றாள்.

"இல்ல... நான் சாப்பிட்டேன்... இல்...ல" இன்னொருமுறை கூப்பிட்டால் போய்விடலாமென இழுத்தான்.

பரசு எதையோ நினைத்தவனாக, "டேய் ராமசாமி, கோழி சாப்பிட்டா பாவமெல்லாம் வராதுடா. சும்மா வாடா. வந்து சாப்புடுறா..." என்றான்.

பரசுவின் அம்மா முழித்தாள், பரசு எதைப்பற்றி பேசுகிறான் என்று. ராமசாமி விடுவிடுவென வந்து பரசுவை ஒட்டினாற் போல் அமர்ந்து கொண்டான் .

"டேய், போய் கையக் கழுவிட்டு வாடா..."

சிரித்துக்கொண்டே எழுந்து ஓடி, அண்டாவிற்குள் கையை முக்கிவிட்டு வந்தான், ராமசாமி.

அவனுக்கும் ஒரு தட்டு வைத்து, சோறு வைத்து, தன் வீட்டுக்காரருக்காக சிறிது தனியே எடுத்து வைத்திருந்த கோழிக்குழம்பை எடுத்து ராமசாமிக்குப் பரிமாறத் தொடங்கினாள், பரசுவின் அம்மா!

கருத்துகள் இல்லை: