கவிதையெழுதலாம் வாங்க!

வித்தியாசமான பாடுபொருட்களை
ஆகச்சிறந்த வார்த்தைகளில்
அடக்கியாளும் கலை
என் கவிதைகளில்
கைவரப்பெறுவதில்லை

மூன்றாவது வரியிலோ
அதற்கும் முன்னரோ கூட
'புரிந்து'விடுபவை தான்
என் பின்நவீனத்துவ
கவிதை முயற்சிகள்

குட்டைப் போர்வையினால்
உடல்மூட முனைவதுபோல்
அடங்கா வார்த்தைகள் சில
அங்கங்கே
துருத்திக்கொண்டுதானிருக்கும்

'நாற்பது வரிகளுக்கு மிகாமல்'-
குறிப்புகளைப் புறந்தள்ளியே
விடையெழுதிப் பழகிவிட்ட எனக்கு
நான்குவரிக் கவிதையெல்லாம்
ரசித்துப் படிக்க மட்டுமே

வார்த்தை அடுக்குகளையே
'கவிதை' என வகைப்படுத்தத் துணிந்துவிடும்
என் இவ்வரிகளை வாசிக்கும்போதே
"நாமும் கூட கவிதை எழுதிவிடலாம்" என்று
கற்பனை விதை
உங்களுக்குள் முளைவிடுமாயின்
வேறொரு பயனும்
வேண்டி நிற்கா என் கவிதைகள்!

நிரந்தரம்!

வெற்றிகளுக்காக மட்டுமே
காத்திருக்கும்
இரத்தினக்கம்பள வரவேற்புகள்
இருக்கும் வரை

தன் தவறுகளுக்குத்
தானே பொறுப்பேற்கும் தைரியம்
அனைவரிடத்தும்
வாய்க்கும் வரை

உழைத்த கூலியையும்
ஒருவேளை சோற்றையும்
உரிமையுடன் கேட்டுப் பெறமுடியா
அவலம் நீடிக்கும் வரை

தரத்தைப் புறந்தள்ளி
இலவசங்களில் ஈர்க்கப்படும்
இன்றைய நிலை
மாறும் வரை

சந்தேகத்தைத் துணை கொண்டு
உண்மை அன்பிற்கு
வைக்கப்படும் சோதனைகள்
தொடரும் வரை

பொய்மை நிரந்தரம்!

காகித இதயங்கள்!

ஆறாம் வகுப்பில் விடுதியில் தங்கி படிக்க ஆரம்பித்த போதுதான் ஆரம்பமானது, கடிதம் எழுதுவது. அதற்கு முன்னர் வாய்ப்புகள் இல்லை. விடுப்பு விண்ணப்பக்கடிதம் கூட எழுதியதில்லை என நினைக்கிறேன். விடுதியில் சேர்ந்த பின்பு வீட்டிலுள்ளவர்களுக்கும் எனக்குமிடையேயான இடைவெளியை கண்ணுக்குத் தெரியாத கயிறுகளால் இணைத்தவை கடிதங்கள். பதினைந்துபைசா மஞ்சள் அட்டைகளும், எழுபத்தைந்து பைசா இன்லேண்ட் லெட்டர்களும் எழுதி முடியா எண்ணங்களை சுமந்து கொண்டு இங்கும் அங்குமாக போய் வந்துகொண்டிருக்கும்.

"அன்புள்ள அப்பா அவர்களுக்கு...", "அன்பும் பாசமும் நிறைந்த அப்பா அவர்களுக்கு...", "அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த நண்பனுக்கு" என்று விதவிதமான விளிப்புகளுடன் தொடங்கி, நல விசாரிப்புகள், தேவைகள், பணம், எப்பொழுது பார்க்க வரவேண்டும், என்ன வாங்கி வர வேண்டும் என்பது போன்ற, எந்த கட்டிலும் வரையறைகளிலும் அடங்காத வாக்கியங்கள் அடங்கியதாகவே அது பெரும்பாலும் இருக்கும். மாரி பிஸ்கட் ஒரு பாக்கெட், நல்ல காயாக உள்ள கொய்யாக்காய்கள் சில, இது போல பட்டியலிட்டு கூட நான் எழுதி இருக்கிறேன். ஒருமுறை என்னைப் பார்க்க வந்த அப்பா, நான் எழுதிய கடிதங்களில் உள்ள தவறுகளை சிவப்பு மையினால் திருத்தி(ஆசிரியர் அல்லவா) கொண்டு வந்து, என் நண்பர்கள் சூழ்ந்து நிற்க என்னென்ன தவறு, எப்படி எழுதி இருக்க வேண்டும் என விளக்கினார். அப்பொழுது என்ன மனநிலையில் அதை எதிர்கொண்டேன் எனத்தெரியவில்லை. இப்பொழுது நினைத்தால் சிலிர்க்கிறது.

மதிய உணவிற்காக விடுதிக்கு வரும்போது, அன்றைய தின கடிதங்களை விடுதிக்காப்பாளர்அறை முன்பு பரப்பி வைத்திருப்பார்கள். கடிதம் வந்திருந்தால் அதை எடுத்துக்கொண்டு நடக்கும்போது ஒரு விதமான பெருமிதமும், எதிர்பார்த்து வராவிட்டால் ஏக்கமமுமான உணர்ச்சிப் பொழுதுகள் அவை. அப்பாவின் கையெழுத்தில் "அன்புள்ள எனது மகன் சிரஞ்சீவி கனகராசுவிற்கு," என வாசிக்கும்போதே ஏதோ ஒன்று தொண்டையில் உருவாகி, கண்களை நிறைத்திருக்கும். என்ன ஏதுவென்று புரியாமலே வேகவேகமாக கடிதம் முழுவதும் படித்து முடித்து அதன் சாராம்சத்தை தெரிந்து கொண்ட பின்பு தான் ஒரு ஆசுவாசம் வரும். அதன் பிறகு தான் நிதானமாக முழுவதும் படிப்பது. அப்பழக்கத்தினால் இன்று மின்மடலைக் கூட அப்படித்தான் படிக்கிறேன்.

படம் வரைவது, ஒவ்வொரு வரியையும் ஒரு வண்ணத்தில் எழுதுவது போன்ற புதிய முயற்சிகள் கூட அரங்கேற்றப்படும். ஒருமுறை ஒரு அஞ்சலட்டையில் இடம் போதாததால் தொடரும் போட்டு, இன்னொரு அட்டையில் மீதியை எழுதி இரண்டையும் ஒன்றாக அஞ்சல் செய்திருக்கிறேன். மகிழ்ச்சி இருந்தாலும் இல்லாவிட்டாலும் "நலம். நலமறிய ஆவல்" தான் இரண்டாம் வரியாக இருக்கும். ஒருமுறை காய்ச்சல் வந்து உடல் நலமில்லாமல் போனபோது, வந்து உடனே வீட்டிற்கு அழைத்துச்செல்ல வேண்டி அப்பாவிற்கு எழுதிய கடிதத்தில் கூட "நலம். நலமறிய ஆவல்" எழுதிவிட்டு தான் எழுதினேன். முதல் வரிகளை படிக்கும் போது என்ன மனநிலையில் இருப்பார்கள் என எனக்குத் தெரியும். அதனால் அமங்களமாகத் தொடங்காமல் மகிழ்சியாகத் தொடங்குவதே என்னுடைய வழக்கம். காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறைகள், கோடை விடுமுறைகளின் போது நண்பர்களுக்கு கடிதம் எழுதுவது உண்டு.

எல்லா தினத்திற்கும் விதவிதமான வாழ்த்து அட்டைகள் பரிமாறிக்கொள்ளப்படும் இக்காலம் போல் அல்லாமல், அக்காலத்தில் ஒரே தினத்திற்கு தான் வாழ்த்து அட்டை உண்டு. பொங்கல் வாழ்த்து! வருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த பண்டிகையின் போது உச்சபட்ச திறமைகள் வெளிக்கொணரப்படும். விடுதியிலிருந்து வீட்டிற்கு, அதுவும் விடுமுறைக்கு ஊருக்கு செல்வதற்கு முன்தினம் அஞ்சல் செய்து அடுத்த நாள் நாம் வீட்டிலிருக்கும் சமயம் வினியோகம் செய்யும் போது நாமே வாங்கி யாரோ அனுப்பியது போல் பாவித்து வீட்டிலுள்ளவர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி தருவது, விடுதியிலிருக்கும் போதே சக நண்பர்களின் வீடுகளுக்கு மாறி மாறி பொங்கல் வாழ்த்து அனுப்பிக்கொள்வது, வீட்டிற்கு வந்த பின்பும் நண்பர்களின் வீடுகளுக்கு மாட்டுப்பொங்கல் வாழ்த்து அட்டையை அனுப்பி சந்தோசப் படுத்துவது போன்ற பலப்பல மகிழ்ச்சி தருணங்கள்.

கல்லூரியில் சேர்ந்த பின்பு கடிதங்களின் எண்ணிக்கை குறைந்தபோதும் நின்றுவிடவில்லை. ஆனால் வீட்டில் தொலைபேசி நிறுவப்பட்ட பின்பு நின்று போனது. மாறாக வாழ்த்து அட்டைகள் கொடுப்பது அதிகரித்துவிட்டது. எழுதி, மடித்து, தபால்தலை ஒட்டி அஞ்சல் செய்வது போன்றவைகள் மறைந்து, நேருக்குநேர் கொடுத்துவிடும் பழக்கம் ஏற்பட்டது. பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளில், அனைவரும் நல்ல மனங்கவரும் வார்த்தைகள் உள்ள அட்டையாக தேடிக்கொண்டிருக்க, நான் மட்டும் நிறைய பக்கங்களும் வெற்றிடமும் உள்ள அட்டையாகத் தேடுவேன். அப்போதைய (இப்ப மட்டும்?) என்னுடைய ஆங்கில அறிவுக்கு வார்த்தைகள் தேடுவது சற்று சிரமமான காரியம். அதற்கு பதில் நானே எழுதிவிடுவது(தமிழில்) என் வழக்கம். வாழ்த்து, அறிவுரை, நையாண்டி என அனைத்தும் கலந்த பெரிய சொற்பொழிவுகளுக்கு சமமானவைகளாக இருக்கும் அவை. என் அன்பிற்காக அவைகளை என் நண்பர்கள் பொறுத்துக்கொண்டார்கள் என நினைக்கிறேன்..;)

பணிக்கு வந்தபின்பு மின்மடல்கள், கடிதத்திற்கு மாற்றாக வந்து விட்டது. இருந்தாலும் கடிதம் எழுதுவதில் இருக்கும் நெருக்கமான உணர்வு மின்மடல்களில் இல்லை. கடிதத்தில் கூறப்பட்டுள்ள செய்திகளுக்கு இணையானவை எழுதியவரின் கையெழுத்து. பேசும்போது ஒருவர் வெளிப்படுத்தும் அங்க அசைவுகளுக்குள்ள தனித்தன்மை போல, ஒவ்வொருவர் கையெழுத்தும் எழுதியவரின் எழுத்து வழி குறியீட்டு வடிவம். எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் கூட தன் மகன்/மகள் எழுதிய கடிதங்களை இனம் கண்டுகொள்வது அந்த தனித்தன்மையினால் தான். இந்த உணர்வு மின்மடல்களில் வராது.

பத்திரிக்கைகளுக்கு வெகு சில கடிதங்களும் மின்மடல்களும் எழுதியிருக்கிறேன். அபூர்வமாகவே பதில் வரும். பதிலை எதிர் நோக்கியே கடிதம் எழுதப் பழகிவிட்ட எனக்கு இது மிகவும் வருத்தமளிப்பதாக இருந்ததால் நிறுத்திக்கொண்டேன். காதல் கடிதங்கள் எழுதும் அளவிற்கு காதலியோ, காதலோ இன்னும் வாய்க்கவில்லை. எதிர்காலத்தில் வாய்க்கலாம்.

அறிவியலின் வளர்ச்சியால் நான்(ம்) தொலைத்துவிட்ட வழக்கங்களில் ஒன்று கடிதம் எழுதுவது. பேச்சில் சொல்லப்பட்டதை விட எழுத்தில் சொல்லப்பட்ட அன்பிற்கு, வலிமையும் உண்மையும் ஆயுளும் அதிகம் என்பது என் கருத்து. திரைப்படங்களில் கடிதம் வாசிக்கப்படும் போது அதை எழுதியவர் முகத்தை அந்த கடிதத்தில் தெரியச்செய்து, அவர்குரலிலேயே கடிதம் வாசிக்கப்படுவது போல் காட்டப்படும். ஏதோ ஒரு இயக்குநர் கண்டறிந்த கதை சொல்லும் உத்தி என ஒதுக்கி விடமுடியாத, வாசிப்பவரின் மனநிலையைத் தெள்ளெனப் பிரதிபலிக்கும் காட்சி அது என்பது கடித வாசிப்பனுபவம் உள்ள எவருக்கும் புரியும். இதயத்திலிருக்கும் உணர்வுகளை வார்த்தைகளில் தாங்கி உலா வரும் கடிதங்களை "காகித இதயங்கள்"(அப்பாடா தலைப்பு வந்திடுச்சு) என்பதைத் தவிர என்ன சொல்லி வருணிக்க?

(நான் திக்கித்திணறி இத்தன வார்த்தைகள்ல சொன்னத, ஒரே படத்துல இன்னாமா சொல்லீட்டாங்கப்பா)

பின்குறிப்பு: "காகித இதயங்கள்" என்ற உருவகம் சரியா என்பதில் எனக்கும் சந்தேகம் உள்ளது. இருந்தாலும் அந்த சொல்லாடல் எனக்குப் பிடித்திருப்பதால் அதையே உபயோகித்துள்ளேன். தவறெனில், என் கோடானுகோடி (சரி...சரி) வாசகர்கள் பொறுத்தருள வேண்டும்.

கனகைக் கவர்ந்தவை #3

படிம ஆடை
அணி அலங்கார
ஒப்பனைகளுடன்
அரங்கேறிய உங்கள்
அடையாளம் தெரியவில்லை
எனக்கு
மேடையின் பின்னே
ஒப்பனை அறையின்
எளிய வாயிலில்
காத்திருக்கிறேன்
முகம் பார்க்க...

- புவியரசு
('கணையாழி கடைசிப்பக்கங்கள்' புத்தகத்தில் வாசித்தது. 1976 ஜுலை இதழில் வெளியானது)

பூவதிரும் ஓசை!

இரு நாட்களாகப் பெய்து வந்த மழை இன்று தணிந்திருந்தது. ஆனாலும் வானம் இருண்டிருந்த அந்த பிற்பகல் வேளை இரவு போலிருந்தது. காற்று, தரை, சுவர் எங்கும் ஈரப்பதம். எதுவும் செய்ய விருப்பமற்ற, தூங்கவும் இயலாத ஒரு மந்தமான நிலை, கண்மூடி கனவு காண அழைத்தது. உள்ளறை சென்று, படுக்கை விரித்து, பக்கவாட்டில் கால்கள் ஒன்றின் மீது ஒன்று வருமாறு வைத்து மடக்கி உடல் குறுக்கி, போர்வையை இறுக்கிப் போர்த்தி படுத்தேன். கண்கள் மூடியதும் காட்சி விரிந்தது.

ஆளரவமற்ற வீதி. நீண்டு கிடந்தது நிசப்தம். வீதியின் இரு மருங்கிலும் மரங்கள். மரம் முழுவதும் மலர்கள். மஞ்சள் மலர்கள். வீதிமுழுவதும் விழுந்தும் கிடந்தன, அடுக்கி வைக்கப்பட்ட நேர்த்தியுடன். வசந்தத்தின் உச்சம். எங்கும் மஞ்சள். மங்களகரம். நீண்ட அலகினையுடைய பறவை ஒன்று சத்தமின்றி பூ கொத்திக் கொண்டிருந்தது. அதுவும் மஞ்சள் நிறமே. ஒரு மர அடியில் இருந்த நீண்ட இருக்கையில் ஒருவன் அமர்ந்திருக்கிறான். இரு கைகளையும் இருக்கையின் கைப்பிடியில் தளரவிட்டு, முகத்தை மேலுயர்த்தி கண்கள் மூடிய நிலையில். அருகினில் சென்று பார்த்தால், ஓ...நான் தான்!

என்ன ஒரு தனிமைச் சுகம்? எனக்காக நானே படைத்துக்கொண்ட கனவுலகம். சன்னமான காற்று வீசினால் இன்னும் சுகமாக இருக்கும். என்ன அது சத்தம்? பூவதிரும் சத்தம். கண்விழித்தேன். என் வலப்பக்கம், சிறிது தொலைவில் ஒருத்தி வந்து கொண்டிருந்தாள். நெருங்க நெருங்க இதம். எனை நோக்கித்தான் வருகிறாளோ? இல்லை இல்லை எனைப் பார்ப்பதாகத் தெரியவில்லையே.

"ஏ பெண்ணே? யார் நீ?"

"நீங்கள் யாரோ?"

"நானல்லவா முதலில் கேட்டேன்?"

"அதனால்?"

"விடையையும் முதலில் அறியும் தகுதி படைத்தவனாகிறேன்"

அவளின் ஒவ்வொரு சொல்லிலும் இதம்!

"தன் வழியில் போய்க்கொண்டிருந்தவளை நிறுத்தி, எனை யாரென அறிய முயலும் நீங்கள் யாரென முதலில் நானறிவது தானே முறை?"

என்ன பதில் சொல்வது இதற்கு? நான் யாரென்பதைத் தவிர?

"நான் இக்கனவு வீதியைப் படைத்தவன். இங்குள்ள ஒவ்வொன்றும் என் விருப்பத்தின் பேரில் அமைந்தவை. இவ்வீதியை அறிந்தார் எனையன்றி யாருமில்லை. இப்பொழுதாவது சொல்? யார் நீ?"

"இங்குள்ள ஒவ்வொன்றும் நீர் படைத்ததென்றால், நான் மட்டும் எப்படி வர முடியும்? எல்லாம் படைத்த உங்களுக்கு நான் யாரென்பது மட்டும் தெரியவில்லையா?"

"ஆ... நீ மிகுந்த அறிவுள்ளவளாக இருக்கிறாய்"

"மன்னிக்கவும். உங்கள் அறியாமையை மறைக்க என்னை அறிவுள்ளவளாக்க வேண்டாம்"

"மறுபடியும் நிரூபிக்கிறாய், உன் அறிவை. இல்லை இல்லை என் அறியாமையை. போதும் சொல்லிவிடு"

"தென்றல் என்பர் என்னை"

"ஓ... என் நினைவிலிருந்து படைக்கப்பட்டவள். இதம் பரவும் போதே நான் உணர்ந்திருக்க வேண்டும். வந்தமைக்கு நன்றி. வா...வந்திங்கு சிறிது நேரம் என்னருகினில் அமர்"

"இல்லை. முடியாது"

"ஏன்? எனக்காகத்தானே வந்தாய். நானல்லவா உனைப் படைத்தது? என்னருகினில் அமரமாட்டாயா?"

"படைத்தவரென்றால்? அடங்கி விட வேண்டுமா?"

இமை குறுக்கி, கன்னக்கதுப்புகள் உப்ப, இதழ்விரிய புன்னகை புரிந்தாள் தென்றல் பெண். இதம் இதம்!

"தேங்கி நிற்பதல்ல என் பண்பு. என் பயணத்தில் தான் பயன். வருகிறேன்"

மறைந்து விட்டாள், தென்றல். எனதாக்கிக் கொள்ள எத்தனித்ததை அவதானித்துக் கொண்டாளோ?. இன்னும் இன்னும் இதம்! இதம்!

போர்வைக்குள் பொதிந்து கண்மூடி, குறுநகை புரியுமென் முகம் பார்த்தால், எனைப் பைத்தியக்காரன் என நினைப்பதைத் தவிர உங்களுக்கு வேறு வழி இருக்காது.

மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்!


தென்னாப்பிரிக்காவுடனான தொடர் தோல்வியிலிருந்து மீண்டுவிடலாம் என எண்ணியிருந்த ஆஸ்திரேலியாவின் நம்பிக்கையைத் தகர்த்தெறிந்தது நியூசிலாந்து, பெர்த் நகரில் நடந்த கிரிக்கெட் போட்டியில். இதே வேளையில் மெல்பர்ன் நகரில் நடந்த ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் மகேஷ் பூபதி - சானியா மிர்சா இணை கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் பட்டம் வென்றது. அவர்களுக்கு வாழ்த்துக்கள்! கிராண்ட்ஸ்லாம் எனப்படும் முதல் தர டென்னிஸ் போட்டிகளில் (ஆஸ்திரேலிய, அமெரிக்க, ஃபெரெஞ்ச் ஓப்பன் மற்றும் விம்பிள்டன் போட்டிகள்) பட்டம் வெல்லும் முதல் இந்திய பெண் சானியா!

ஆண்களுக்கான ஒற்றையர் ஆட்டத்தில் சுவிட்சர்லான்தை சேர்ந்த ரோஜர் ஃபெடரர், ஸ்பெயினின் ரஃபேல் நடாலிடம் தோல்வியுற்றார்.

பரிசளிப்பு விழாவில், இரண்டாமிடக் கோப்பையை பெற பெடரர் இவ்வாறு அழைக்கப்பட்டார். "இந்த நாடு(ஆஸ்திரேலியா) யாராவது ஒரு விளையாட்டு வீரரை தத்தெடுக்க விரும்பினால் அது இவர் தான்". ஆஸ்திரேலியாவில் இல்லாத விளையாட்டு வீரர்களா? அந்த அளவுக்கு திறமையும், ஆஸ்திரேலியர்களின் நன் மதிப்பையும் பெற்றவர் ஃபெடரர்.

பதக்கத்தட்டை பெற்றுக்கொண்டு ஏற்புரை கூற முயன்ற ஃபெடரருக்கு வார்த்தைகள் வரவில்லை. மிகுந்த கரவொலி வேறு.

"அடுத்தமுறை வெல்ல முயற்சி செய்வேன்... எனக்குத் தெரியவில்லை... கடவுளே... இது(தோல்வி) என்னைக் கொல்கிறது..."

இதற்கு மேல் பேச இயலாமல் உடைந்து அழுதேவிட்டார். வெகுநேரம். யாருக்கும் என்ன செய்வதெனத் தெரியவில்லை, கரவொலி எழுப்புவதைத் தவிர. "வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு" போன்ற சாதாரண ஆறுதல் வார்த்தைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் ஃபெடரர். அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே தோல்விகளைச் சந்தித்தவர்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இதுவரை 5 முறை அமெரிக்க ஓப்பன், 5 முறை விம்பிள்டன், 3 முறை ஆஸ்திரேலிய ஓப்பன், ஆக மொத்தம், 13 முறை பட்டம் வென்றுள்ள ஃபெடரருக்கு, அதிக முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் என்ற பீட்சாம்ராஸின் சாதனையை சமன் செய்ய தேவைப்படுவது இன்னும் ஒன்று மட்டுமே. 237 வாரங்களாக, ஏறக்குறைய நாலரை ஆண்டுகளுக்கு மேல், தொடர்ந்து உலக டென்னிஸ் தர வரிசைப் பட்டியலில் முதலிடம் வகித்தவர் ஃபெடரர். (முந்தைய சாதனை: பெண்கள் பிரிவில் ஸ்டெஃபி கிராஃப் 186 வாரங்கள், ஆண்கள் பிரிவில் கான்னார் 160 வாரங்கள்). இதைப்போல இன்னும் பலப்பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான ஃபெடரருக்கு கடந்த ஆகஸ்ட் முதல் கொஞ்சம் இறங்கு முகம். தொல்விகளை சந்திக்கத் துவங்கிய ஃபெடரர், 2009 ஆம் ஆண்டை நல்ல முறையில் துவக்க, ஆஸ்திரேலிய ஓப்பன் போட்டிகளை எதிர் நோக்கி இருந்தார். துவக்கச் சுற்றுப் போட்டிகளில் நன்றாக ஆடி இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றார். எதிர்த்து ஆட வேண்டியவர் ரஃபேல் நடால். பெரும்பாலானோர், ஃபெடரரே வெற்றி பெறுவார் என்று கணித்த கணிப்பு பொய்யாக நடால் வென்றார். இதில் நடாலின் திறமை ஒரு புறமிருக்க, ஃபெடரர் செய்த தவறுகளே அவர் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. அதுதான் அவ்வளவு பேர் முன்னிலையில், அதுவும் தன்னை மதிக்கும், நேசிக்கும் கூட்டத்தில், அழக்காரணம்.


ஃபெடரரின் அழுகையினால் என்ன செய்வதென்றறியாத அறிவிப்பாளர், அவரிடம் சென்று பேசிவிட்டு, "ஃபெடரர் சிறிது நேரம் சாந்தமாகட்டும்" எனச்சொல்லி நடாலை வெற்றிக் கோப்பையை பெற அழைத்தார். வரும் போதே ஃபெடரரை தட்டிக்கொடுத்து விட்டு வந்த நடால், கோப்பையைப் பெற்றவுடன் மறுபடியும் ஃபெடரரிடம் தான் சென்றார். இருவரும் ஏதோ பெசிக்கொள்ள, நடாலை இருக்கச் செய்து ஃபெடரரே திரும்ப பேச வந்தார்.

"மறுபடியும் நான் பேச முயற்சி செய்கிறேன். (இந்த மேடையில்) கடைசி வார்த்தைகளை நான் பேச விரும்பவில்லை(சிரிக்கிறார்). இவருக்கு (நடாலை காண்பித்து) அதற்கான முழுத்தகுதியும் இருக்கிறது. நீ மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினாய். இதற்கு நீ தகுதியனவனே" எனச் சொல்லி அனைவருக்கும் நன்றி தெரிவித்து "அடுத்த வருடம் சந்திப்போம்" என்று மறுபடியும் கண்ணீருடன் விடைபெற்றார்.

அடுத்து பேச வந்த நடால், "ரோஜர், இன்றைய நிகழ்விற்காக என்னை மன்னித்து விடுங்கள். எனக்குத் தெரியும் உங்களுடைய இப்போதைய உணர்வு எப்படி இருக்குமென்று. மிகவும் கடினமான வலி அது. ஆனால், நீங்கள் ஒரு சிறந்த வெற்றி வீரர் என்பதை மறக்க வேண்டாம். வரலாற்றின் சிறந்த வெற்றி வீரர்களில் நீங்களும் ஒருவர். பீட்சாம்ராஸின் சாதனையை நிச்சயம் முறியடிப்பீர்கள்" எனச் சொல்லி தன் வெற்றிக்கு உதவிய அனைவருக்கும் நன்றி கூறினார்.

ஆஸ்திரேலிய ஓப்பன் போன்ற மிகப்பெரிய போட்டியில் முதல் முறையாக வென்றுவிட்டு, அதுவும் அப்பட்டத்தை வெல்லும் முதல் ஸ்பானிய வீரர் என்ற சாதனையுடன், தன் வெற்றிக்களிப்பை மிகுதியாக வெளிப்படுத்தாமல் சக எதிர் வீரரின் உணர்வுகளைப் புரிந்து பேச எத்தனை பேரால் முடியும்? சக வீரர்களை களத்தில் மட்டுமே எதிர்த்து விளையாடும் விளையாட்டுணர்வின் இலக்கணம், நடாலின் அந்த பேச்சு.

நடால் மட்டும் சாதனைகளில் இளைத்தவரா? ஃபெடரர்-நடால் இணை தான் டென்னிஸ் வரலாற்றின் சிறந்த எதிர் இணை என்ற பெருமை படைத்தது. எல்லா கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் சாதனை செய்த ஃபெடரரால், ஃபிரெஞ்ச் ஓப்பனில் மட்டும் ஒரு பட்டம் கூட வெல்ல இயலவில்லை. காரணம் நடால். "களிமண்தரை அரசன்" என புகழப்படும் நடால் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து ஃபிரெஞ்ச் ஓப்பன் வெற்றியாளர். கடுந்தரை(Hard court), புல்தரை(Grass court), களிமண்தரை(Clay court) என்று மூன்று விதமான தரைகளில் டென்னிஸ் ஆடப்படுகிறது. இந்த ஆஸ்திரேலிய ஓப்பன் வெற்றி மூலம் மூன்று விதமான தரைகளும் கொண்ட கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வென்ற மூன்றாவது வீரர் என்ற பெருமை நடால் வசம் (ஆஸ்திரேலிய ஓப்பன், அமெரிக்கன் ஓப்பன் - கடுந்தரை, விம்பிள்டன்-புல்தரை, ஃபிரெஞ்ச் ஓப்பன்-களிமண் தரை). ஃபெடரருக்கு களிமண் தரை இன்னமும் சவாலே. இத்தனை சாதனைகளும் செய்திருக்கும் நடாலின் வயது 22 (ஃபெடரரின் வயது 27). 22 வயதில் ஃபெடரர் வென்றிருந்தது ஒரே ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் மட்டுமே. நடாலிடம் இப்போது 6 பட்டங்கள். தவிர்க்க இயலாத காரணங்கள் இருந்தாலொழிய, அனைத்து சாதனைகளையும் முறியடிக்கவும், யாராலும் முறியடிக்கமுடியாத சாதனைகளை செய்யவும் நடாலால் முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

ஃபெடரருக்கு,
கவலைப்படதே நண்பா, பீட்சாம்ப்ராஸின் சாதனையை நீ முறியடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!

நடாலுக்கு,
பல உச்சங்கள் நீ தொடக் காத்திருக்கின்றன!

--- எமக்குத் தொழில்!

"இன்னாம்மே நீ..? தெனிக்கும் இப்பிடி லைன்க்குப் போகசொல்லோ போகசொல்லோ மூஞ்சத்தூக்கி வேச்சுகினா, நா இன்னா பண்ணுரது? " அவனுக்கு முதுகுகாட்டி அமர்ந்து பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்த மனைவியிடம் கேட்டான். அவனுக்குத் தெரியும் பதில் வராதென.

"நா இன்னா வேற தொயிலுக்கு போமாட்டேன்னா சொன்னே? ஒண்ணியும் கெடிக்கலம்மே. உன்க்குத் தெரியாததாம்மே? இந்த பேட்டைக்கு வந்து எத்தினி தொயிலுக்கு போய்க்கீரேன். அல்லாத்துக்கும் சங்கம் ஒண்ணு வெச்சுனுகீராங்க. அதுல ஜாயிண்டு பண்ணாத்தா என்னியும் இஸ்துக்கினு போவானுகளாம். சங்கத்துல சேர துட்டு ஓணுமே? எங்க பூறது?

"மானம், மருவாதி, கவுரதிம்பே. வவுத்துக்கு சோறுதாம்மே மொதல்ல. அப்பாலதே கவுரதி கிவுரதியெல்லாம். பொயச்சு கெடந்தாதே அதெல்லம். துன்ர சோத்துக்கே வளி இல்லன்னா, கவுரதி இன்னாம்மே கவுரதி?"

"செத்துபூட்லாம்பே. இன்னாத்துக்குன்ரேன்? நமக்கென்ன புள்ளியா குட்டியா? இல்ல எதானு சொந்தங்கீதா? ஒண்ணியுமில்ல. இருக்குரவரைக்கும் இருப்பொம். அப்பால சாவுரதுக்கும் ஒரு இது வெணும்மே. நம்மகிட்ட அதெல்லாங் கெடியாது"

"நா என்ன திருடியா கொண்டாரேன். ரொம்பப்பேர் கீராம்மே. அசால்ட்டுப் பசங்க. நேக்காத் தட்டுராம்மே பர்ச. ஜீன்ஸ் பேண்டென்ன? டி சட்டையென்ன? ஷோக்கா கீரானுங்கம்மே. நா போற லைன்லேயே கீரானுவ நாலஞ்சு பேரு. அதெல்லம் நமக்கு வராதும்மே. ஓணவுவ்வோனாம். ஆனா ஒண்ணும்மே. அவனுக்கென்ன கஷ்டமோ. இத்தப் போய் தொயிலாக்கிக்கினு பயந்து பயந்து வாளுரானுவ"

"உனக்கின்னா இப்போ? இத்த மாத்தனும் அவ்ளொதானே. நம்ம லைன்ல ஒருத்தங்கிரா. பேஸ்ட்டு, ப்ரெஷ்ஷு, காதுகொடையர பட்சு, பேனவெல்லா வித்துகினு. அவனாண்ட பேசிவைச்சுக்கீரேன். நம்ம பர்மாபசார் கீதுபாரு, அங்க கெடக்குதாம், இந்த ஐட்டம்லாம். அத்த வாங்கினுவந்து தான் இங்க போனிபன்ரானாம். கொஞ்சம் கைக்கு துட்டு வந்த ஒடனே, நாமலும் பண்ணிபோடலாம். என்ன இந்த பாஷ தான் எயவு வரமாட்டேங்குது. ஷோக்கா பேசராம்மே. "இங்கே பாருங்க சார்...கம்பனி ஐட்டம் சார்...வெளில வாங்கினா ஒரு பேனா விலை பத்து ரூபா சார்...இங்க கம்பனி விளம்பரத்துக்காக, உங்களுக்காக, மூனு பேனா பத்து ரூபா சார். த்ரீ பென்.....டென் ருப்பீஸ் சார்" இது மாறி நெரைய்யா பேசனும். இவ்லொதான் நா கத்துவெச்சுனுங்கீரெ. போகப்போக கத்துப்பே. நீ ஒண்ணியும் கவலப்படாத. சீக்கிரமே மாத்திபுடலாம் தொயில. போ, இப்போ போய் அந்த ரெண்டு மூட்டப்பையையும் இட்டாண்டா. பீக் அவரு வரப்போது, லைனுக்குப் போவனும்" என்ற அவனோட லைன் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான மின்தொடர் வண்டிப் பயணம். தொழில் பிச்சை எடுத்தல்.
பிச்சை எமக்குத் தொழில்!

உன்னாலணையும் உயிர்!

முதலில் இதை வாசிக்க.

அப்படி
எங்குதான் போய்விட்டாய்?

உன்னால் மட்டுமே இயன்றிருக்கிறது!
வரையறுத்துவிடயியலா
குணங்களும்
புறப்பார்வைகளுக்கு நேரெதிரான
அகக்கூறுகளுமுடைய என்னை
'நானாகவே' ஏற்றுக்கொள்ள!

பொய்யெனப் புரிந்தும்
என் பொய்களை
உண்மைபோலாக்கிக்கொள்ள
மெய்யே எனினும்
என் மெய்வருத்த
இடமளிக்காமல் பார்த்துக்கொள்ள
உனையன்றி யாருமில்லை இங்கெனக்கு!

அழப்பயந்ததில்லை நான்!
ஆனாலும் அழவில்லை.
வரவிருக்கும் அந்தநாளில்,
நம் இணைவையேற்று வரவேற்க
வேறொன்றுமில்லை என்னிடம்
அழுகையையன்றி!

வாழ்வதனை வாழவேண்டும்
புரிந்துணர்ந்து!
என்றென்றும் நீ வேண்டும்
அதை உணர்ந்து
விரைந்து வா
வந்துன்னை முழுமை செய்!

கதகதயாம் காரணமாம்

" ஹே, அவர் பி.எம் இஸ் காலிங் யு. ஹி இஸ் தேர் இன் தட் கான்ஃபெரென்ஸ் ரூம்" அருகிலிருந்த அறையை கண்ணால் காட்டிவிட்டு சென்றான் டீம்மேட்.

"ஜி-டாக்"ல் தோழியுடன் அரட்டை மும்முரத்தில் இருந்த அவளைத் திடீர் பரபரப்பு பற்றிக்கொண்டது. என்னவாக இருக்கும் என யூகிக்கக்கூட அவகாசம் இல்லாமல் அந்த கான்ஃபெரென்ஸ் ரூம் நோக்கி நடக்கலானாள். உடனே திரும்பி வந்து நோட்பேடும் பென்னும் எடுத்துக்கொண்டு சென்றாள். கான்ஃபெரென்ஸ் ரூம் கதவை மெதுவாக திறந்து "ஹாய்" என்றாள், ஒரு புன்னகையைச் சிந்தி.

செவ்வக வடிவ அந்த அறையின் மையத்தில் நீள்வட்ட வடிவ பெரிய மேஜை அதைச் சுற்றி நாற்காலிகள் இருந்தன. மேஜையின் தூர முனையில் பி.எம் இருந்தார். இவள் நடுவில், பி.எம் க்கு இரண்டு நாற்காலிகள் தள்ளி அமர்ந்துகொண்டாள்.

சிறிது நேரம் நிசப்தம். பி.எம் எழுந்து வந்து அவள் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார். இவள் அவரைப் பார்த்தாள். அவர் இவள் கண்களை நேருக்கு நேர் பார்த்தார். இவள் இமை தாழ்த்தினாள். சில வினாடிகள் கழித்து உயர்த்தினாள். இன்னும் பார்த்துக் கொண்டுதானிருந்தார். தலையை மேல்நோக்கி உயர்த்தினாள், "என்ன?" என்பதுபோல்.

"ஐ லவ் யு!"

இவள் முகத்தில் அதிர்ச்சி, உடனடியாக திகைப்பு, ஆனந்தம், மகிழ்ச்சி. சட்டென எழுந்து வெளியே சென்று விட்டாள்.

சிறிது நேரம் கழித்து உள்ளே வந்தாள். நேரே சென்று உட்கார்ந்திருந்த பி.எம்ன் கழுத்தை சுற்றி கைபோட்டு "......பையா...கல்யாணம் முடிஞ்சு மூணு வாரம் ஆயிடுச்சி. ஹனிமூன் எல்லாம் போயிட்டு வந்தாச்சு. இப்போதான் சொல்லணும்ன்னு தோனிச்சா? அதுவும் இந்த கான்ஃபெரென்ஸ் ரூம்குள்ள கூப்பிட்டு" ன்னு சொல்லி நடு நெத்தியில் முத்தம் ஒன்று வைத்தாள்.

"ஓக்கே...ஓக்கே...."

"என்ன ஓக்கே?"

"ஓக்கே.."

"என்ன ஓக்கே?" என்று ஒரு குலுக்கு குலுக்கிய பின்பு தான் எழுந்து உட்கார்ந்தார் படுக்கையிலிருந்து. "அடச்சே கனவு..." என்றார்.

"என்ன கனவு?"

"இல்ல...நீ என்கிட்டே சொல்லச்சொல்லி கேட்டுகிட்டு இருக்கியே, அத ஆபீஸ்க்கு போய் கான்ஃபெரென்ஸ் ரூம்ல கூப்ட்டு வைச்சு சொல்லுறமாதிரி கனவு"

"ரகு...ரகூகூகூ...."

"ஐயோ ஐயோ ஹனிமூன் வந்த எடம் எல்லாம் விட்டுப்போட்டு, ஆபீஸ்ல அதுவும் அந்த ஜங்க்கு கான்ஃபெரென்ஸ் ரூம்ல வைச்சா...? தூ...இந்த ஆபீஸ் பைத்தியத்த கட்டிக்கிட்டு...."

"ரகூகூகூ....ஏன்டா, நான் பாட்டு கூப்ட்டுகிட்டே இருக்கேன். உங்காதுல விழுதா இல்லியா?"

"என்னம்மா...இப்ப தான் ஒரு அழகான ரொமான்டிக் கத எழுதிட்டு இருக்கேன். ஃபினிஷிங் ஸ்டேஜ் வந்துடுச்சு. முடிச்சுட்டு வந்துடுறேன். செத்த பொறு"

"இந்த எடத்துல கட் சொல்லுறோம், சார். இது தான் நம்ம படத்தோட ஓப்பனிங் சீன்!" என்றார் டைரக்டர்.

"என்ன சீனோ? சாப்ட்வேர் இன்டஸ்ட்ரின்ற...ரைட்டர்ன்ற...கதக்குள்ள கதன்ற...யூத் சப்ஜக்ட்ன்ற..... ம்ம்ம்ம்ம்... ஏதோ எம்பைய சொன்னானேன்னு... 'பி' அண்ட் 'சி' ல தேறுமா? போட்ட காசாவது வருமா?" செக் புக்ல கையெழுத்து போட்டவாறே கேட்டார் "கதகதயாம் காரணமாம் " படத்தின் தயாரிப்பாளர்.

புத்தக சந்தையும் நானும்

இது ஐந்தாவது வருடம், தொடர்ச்சியாக நான் சென்னை புத்தக சந்தைக்குச் செல்வது. நிறைய மாற்றங்கள், நிறைய அரங்குகள், நிறைய புத்தகங்கள். அதைப்பற்றி எல்லாம் எழுதி, மறுபடியும் இதை மற்றுமொரு என் சுயபுராணப் பதிவாக மாற்றாமல், நான் வாங்கிய புத்தகங்களை மட்டும் பட்டியலிடுகிறேன். இது முழுக்க முழுக்க என்னுடைய ஆவணத்திற்காக மட்டுமே. அதையும் மீறி இந்த பட்டியலில் உங்களுக்கு ஏதேனும் பிடித்திருந்தால், நம் ரசனைகள் ஒத்து போவதற்காக நான் பெருமகிழ்ச்சி அடைவேன்.

(நூலின் பெயர் - ஆசிரியர் - பதிப்பகம் என்ற வரிசையில் வாசிக்க)

புதினங்கள்:
1. யாமம் - எஸ். ராமகிருஷ்ணன் - உயிர்மை
2. காகித மலர்கள் - ஆதவன் - உயிர்மை
3. கொலையுதிர் காலம் - சுஜாதா - உயிர்மை
4. தந்திர பூமி - இந்திரா பார்த்தசாரதி - கிழக்கு
5. கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன் - கிழக்கு
6. கடல்புரத்தில் - வண்ணநிலவன் - கிழக்கு
7. மிஸ்டர் வேதாந்தம் - தேவன் - கிழக்கு
8. இரும்புக் குதிரைகள் - பாலகுமாரன் - விசா
9. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன் - மீனாட்சி
10. தோட்டியின் மகன் - தகழி சிவசங்கரப் பிள்ளை(மலையாளம்) , தமிழ் மொழிபெயர்ப்பு சுந்தர ராமசாமி - காலச்சுவடு

சிறுகதைகள்:
11. சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழு தொகுப்பு - சுந்தர ராமசாமி - காலச்சுவடு
12. கிராமிய கதைகள் - கி. ராஜநாராயணன் - அன்னம்

கவிதைகள்:
13. கல்யாண்ஜி கவிதைகள் - கல்யாண்ஜி - வ.உ.சி நூலகம்
14. நீராலானது - மனுஷ்யபுத்திரன் - உயிர்மை
15. வனப்பேச்சி - தமிழச்சி தங்கப்பாண்டியன் - உயிர்மை
16. தண்ணீர்தேசம் - வைரமுத்து - சூர்யா

கட்டுரைகள்:
17. கணையாழி கடைசிப் பக்கங்கள் - சுஜாதா - உயிர்மை
(கணையாழி இதழில் 1965-1998 ஆண்டுகளில் சுஜாதா எழுதிய பத்திகளின் தொகுப்பு)
18. கரிசல்காட்டுக் கடுதாசி - கி. ராஜநாராயணன் - அன்னம்
(இது கதைகளா இல்லை கட்டுரைகளா இல்லை இரண்டுமா என்பதில் சிறு சந்தேகம் உள்ளது. படித்துவிட்டு சரி செய்ய வேண்டும்)

பிற:
19. சிரிப்பு டாக்டர் - முத்துராமன் - கிழக்கு
(என். எஸ். கிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு)
20. கோக் ஜிவ்வென்று ஒரு ஜில் வரலாறு - என். சொக்கன் - கிழக்கு
(கொக்கோ கோலா வளர்ந்த கதை)


இவை தவிர என் தங்கை அவள் பங்கிற்கு அவளுக்கு விருப்பான இன்னும் பல புத்தகங்கள் நேற்று வாங்கி இருக்கிறாள். அந்த பட்டியலையும் சேர்க்கவேண்டும்..;)

என் வாழ்க்கைப் பயணங்களில் மிதிவண்டி...

ஏழு அல்லது எட்டு வயதிருக்கலாம் நான் மிதிவண்டி ஓட்ட கற்றுக்கொள்ள ஆரம்பித்தபொழுது. ஒரு மணிநேரத்திற்கு ஒரு ரூபாய் வாடகை, சிறு அளவிலான வண்டிக்கு. "முருகன் சைக்கிள் மார்ட்" என்பது கடையின் பெயர். இன்னொரு கடையும் இருந்தது ஊரில். ஆனால் முருகனில் தான் இரண்டு மூன்று உயர அளவுகளில் வண்டிகள் இருந்ததால் அது முதல் விருப்பமாக இருந்தது. தவிர அது பள்ளி விளையாட்டு மைதானத்தின் அருகிலேயே இருந்ததால் ஓட்டிப் பழகவும் வசதியாக இருந்தது. ஓட்டிப்பழகும் போது, எங்கேனும் ஆணி/முள்/கல் குத்தி சக்கரத்தினுள் உள்ள குழாயில்(Tube) பொத்தல் விழுந்து விட்டால் அதை சரிசெய்யும் பணத்தையும் நாம் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். சில சமயங்களில் அது தெரியாதவாறு நிறுத்திவிட்டு வந்துவிட முயலுவதும் உண்டு. ஆனால் அடுத்த முறை போகும் போது முருகனிடம் மாட்டிக்கொள்ள வேண்டும். இதற்காக உள்ளீடற்ற சக்கரம்(Tubeless Tyre) - கல்லு டயர் என்போம் - உள்ள வண்டியை தேர்வு செய்வது உண்டு. ஆனால் அதை ஓட்டுவது சிறிது கடினமாது. கொஞ்சம் அதிகமாக விசை கொடுத்து உந்தவேண்டும். முருகனிடம் அதுபோல ஒரே வண்டி மட்டுமே இருந்தது. அவரிடம் இருந்த அனைத்து வண்டிகளுமே சிகப்பு வண்ணம் உடையவை.

விடுமுறை நாட்களில் தான் ஓட்டிப் பழகுவேன். கடைக்கு செல்லும் போதே கைகளை கால்களாக்கி வண்டி ஓட்டுவது போல் பாவனை செய்து கொண்டே போவது இன்னும் நினைவில் இருக்கிறது. ஓரளவுக்கு பழகிய பின்பு ஒரு முறை எதேச்சையாக, பக்கத்து ஊரிலிருக்கும் என் பெரியம்மா மகன், என் அண்ணன் அப்பக்கம் வந்த போது, ஒரு கையை விட்டு ஓட்டி என் திறமையை காண்பித்தேன். மிதிவண்டி ஓட்டிப் பழக வேண்டும் என்ற எண்ணத்தை யார் என்னிடம் முதலில் விதைத்தார்கள், முதலில் யார், அப்புறம் யார்யாரெல்லாம் எனக்கு கற்றுக்கொடுத்தார்கள் என்பது நினைவில் இல்லை. என் நினைவில் இருக்கும், எனக்கு கற்றுக்கொடுத்த ஒரே நபர் அதுவும் ஒரே நாள், குமார் மாமா. என் அக்காவின் மகன். அன்று தான் மிதிவண்டியில் என் முதல் விபத்து. என் உயரத்தை விட சற்று உயரம் கூடுதலான வண்டி. அந்த மாதிரியான வண்டிகளில் ஏறி அமர்ந்து ஓட்டாமல் குரங்கு பெடல் முறையிலேயே ஓட்டி வந்தேன். குமார் மாமா கொடுத்த தைரியத்தால் அன்று ஏறி அமர்ந்து ஓட்டலானேன். வட்டமடித்துக் கொண்டிருக்கும் போது அதீத ஆர்வத்தினால், வேகத்தை கூட்ட முனைந்து , நிலை தடுமாறி கீழேவிழுந்து, கையை கீழே ஊன்றி முழு எடையையும் அதில் செலுத்தி நிலை நிறுத்த முயன்ற போது பிசகிக்கொண்டது. சிராய்ப்பு ஏதேனும் இருந்ததா எனத் தெரியவில்லை. ஆனால் முட்டைப்பத்து போட்டு தூளி கட்டும் அளவுக்கு கை பிசகிக் கொண்டது. கரிசல்குளம் வைத்தியர் முட்டைப்பத்து புண்ணியத்தில் கை சில நாட்களில் சரியானது.

மற்றவர்கள் ஓட்டும் போது, பின் இருக்கையில், வண்டி ஓடிக்கொண்டிருக்கும் போதே லாவகமாக தாவி ஏறி அமர்ந்துகொள்ளும் கலை எனக்கு வெகு நாட்கள் கைகூடாமலேயே இருந்தது. வண்டியின் ஓட்டத்திற்கு ஏற்பவும் , பின் இருக்கையின் மையத்தில் அமரும் அளவுக்கும், தகுந்த விசை கொடுத்து உந்தி குதித்து உட்கார வேண்டும். இருக்கையில் சற்று முன்போ அல்லது தள்ளியோ அமர்ந்துவிட்டால் பயணம் முழுவதும் ஒருவிதமான நிலையின்மையாகவே அமைந்து, எங்கு எப்போது கீழே விழுந்து விடுவோமோ என்ற பயம் நிறைந்ததாக, கொடுமையாக அமைந்து விடும். அதுவும் வண்டி புறப்பட்டு சிறிது நேரத்திற்குள் ஏற வேண்டும். நாம் ஏற வேண்டும் என்பதற்காக வண்டியோட்டி மெதுவாக ஓட்டிக்கொண்டிருப்பார், ஏறியதற்கான அறிகுறி தெரிந்ததும் வேகத்தை அதிகரிக்கும் முனைப்புடன். என் உயரமும் பின்னிருக்கையின் உயரமும் ஏறக்குறைய ஒரே அளவு இருந்த அக்காலங்களில் இது எனக்கு மிகவும் சவாலானதாகவே இருந்து வந்தது. இதற்கு இடையில் சாலையின் மேடு பள்ளங்களையும் எதிரில் வரும் மற்ற வண்டிகளையும் வேறு கவனித்துக் கொள்ள வேண்டும். உண்மையாகவே அது ஒரு கலை தான்! பல நாட்கள் நான் வண்டி கூடவே ஓடிப்போவதுதான் தான் மிஞ்சும். அவராக நிறுத்தி எனக்கு ஏற அவகாசம் தந்தாலொழிய நான் ஏறிஇருக்க மாட்டேன். கூட்டிச் செல்வதே பெரிய உதவி. அவர்களிடம் போய் "இல்லை எனக்குத் தாவி ஏறத் தெரியாது. நிறுத்தி ஏற்றிக்கொண்டு அப்புறம் செல்லுங்கள்" என்றெல்லாம் கூறுவது மிகப்பெரிய குற்ற உணர்ச்சியாக என்னுள் இருந்தது. எனவே மிகத் தெரிந்தவர்களுடன் மட்டுமே செல்லுவேன். நாட்கள் செல்ல செல்ல கலை ஒருவழியாக கைகூடியது. அதன் பிறகு 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி விடுதிகளில் தங்கி பயின்ற காரணத்தினால் மிதிவண்டி ஓட்டும் நேரமும், தேவையும் குறைந்து விட்டது. விடுமுறையில் ஊருக்கு வரும் போது எப்போதாவது ஓட்டுவேன்.

கோவை அரசு பொறியியற் கல்லூரியில் இரண்டாம் ஆண்டிலிருந்து மிதிவண்டி வைத்துக்கொள்ள அனுமதி உண்டு. மேலே உள்ள படத்தில் உள்ளது தான் நான் வாங்கியது. கோவை 100 அடி சாலையில் உள்ள ஒரு கடையில் வாங்க நான் சென்ற போது ஒரு ஒரு பாகங்களாக இணைக்கப்பட்டு முக்கால்வாசி முடிவடைந்த நிலையில் ஒரு வண்டியை அருகில் ஒருவர் மாட்டிக்கொண்டிருந்தார். கடை முதலாளியிடம் விலை விசாரித்து வாங்கிவிடுவதென முடிவெடுத்து பணமும் கட்ட ஆயத்தம் ஆகும் வரை அது தான் எனக்கு வரப்போகும் வண்டி என எனக்குத் தெரியாது. "எப்போ கெடைக்கும்" எனக் கேட்டபோது இதோ இவர் மாட்டி முடிச்சதும் எடுத்துக்கலாம் என அவர் கை காட்டிய திசையில் நான் பார்த்தது தான், என் வண்டி என நான் பார்த்த முதல் பார்வை. அங்கேயே இருந்து முழுவதும் முடிந்த பின்பு அப்படியே ஓட்டிக்கொண்டு வந்தேன். ஆனந்தமாக இருந்தது. நகர வீதிகளில் நான் ஓட்டுவது அதுவே முதல் முறை. அதுவும் அதுபோன்ற நவீனமான மிதிவண்டியை. என் அப்பாவிலிருந்து தொடங்கும் எங்கள் குடும்பத்தின் முதல் வாகனம்(சிறு வயதில் நடை பழகிய நடைவண்டியைத் தவிர்த்து). "என் செல்லம்" எனப் பெயர் வைத்தேன், எனக்காக மட்டும்! கல்லூரி மற்றும் கணிணி வகுப்புகளுக்கு செல்லல், திரைப்படம் பார்க்க செல்லுதல், ஊர் சுற்றுதல் என மிதி வண்டியின் பயன்பாடுகள் அதிகம். மூன்று வருடத்தில் எத்தனை தூரம் பயணம் செய்திருப்பேன் என்பது தெரியாது. ஒரு முறை கோவையின் அருகிலிருக்கும் ஆனைக்கட்டி என்ற ஊருக்கு ஒரு மாலை வேளையில் தனியாக சென்று தேநீர் மட்டும் அருந்தி விட்டு வந்திருக்கிறேன். எந்த ஒரு காரணமும் குறிக்கோளும் இல்லாமல் மிதிவண்டியில் பயணம் செய்வதை என மனம் எப்போதுமே விரும்பியிருக்கிறது.

அவினாசி
சாலையில், ஹோப்ஸ் கல்லூரி நிறுத்தத்தின் அருகில் இருக்கும் குமார் மாமாவின் அறைக்கு (கோவையில் அப்போது அவர் மகிழ்வுந்து(car) ஓட்டுனராக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். இன்னும் சில நண்பர்களுடன் அறையில் தங்கி இருந்தார்) அடிக்கடி சென்று வருவேன். அப்படி ஒரு முறை சென்றபோது தான் மிதிவண்டியில் என் இரண்டாவது விபத்து. என் இரண்டு விபத்திலுமே குமார் மாமா சம்பந்தப் பட்டு இருப்பது, இப்போது தான் எனக்குப் புரியும் ஆச்சரியமான உண்மை. அவினாசி சாலையில் இடது புறத்தில் இருந்து வலது பக்கம் திரும்ப முனைந்து பின்பக்கம் பார்த்து விட்டு தான் திரும்பினேன். திரும்பிய சில நொடிகளில் என்ன ஏதுவென்று உணரும் முன்பே சாலையில் விழுந்து கிடந்தேன். பின்னால் வந்த ஒரு இரு சக்கர வாகனம் என் மீது மோதிவிட்டு சென்றிருந்திருக்கிறது. மாலை முடிந்து இருள் கவிழ்ந்திருந்த நேரம். அந்த பகுதியில் விளக்குகள் ஏதும் இல்லை. அருகினில் எங்கோ இருந்த சிலர் வந்து என்னையும் என் வண்டியையும் சாலை ஓரமாக கொண்டுவந்தனர். பெரிய அடி எதுவும் இல்லை. ஆனால் இடுப்பு பகுதியில் வலி தெரிந்தது. ஒரு மாதிரி தவங்கி தவங்கி நடந்து சாலை ஓரம் வந்தேன். நல்ல வேளை, நான் அடிபடும் போது பின்புறம் எந்த வாகனமும் வரவில்லை. அதுவும் அவினாசி சாலை போன்ற பெரிய சாலைகளில் எப்போதும் பேருந்துகள் போய் கொண்டிருக்கும். வந்திருந்தால் 'அலைபாயுதே' சக்தி கதை தான் எனக்கும் நேர்ந்திருக்கும். சிறிது நேரம் கழித்து என்னை இடித்து சென்ற வண்டியில் ஒரு வாலிபர் திரும்பி வந்தார். என்னைவிட சிறிதே வயது மூத்தவர். திரும்பும் போது பாத்து திரும்ப வேண்டாமா என என்னை கேட்டுவிட்டு மன்னிப்பும் கேட்டார். அங்குஇருந்தவர் எல்லாம் "இவருக்கு இடுப்பு வலிக்குதாம் ஆஸ்பத்ரிக்கு கூட்டீட்டுபோங்க" என சொல்ல என் வண்டியை அங்கேயே ஓரமா பூட்டி வைத்து விட்டு அவர் என்னை ஒரு மருத்துவமனையில் இறக்கி விட்டுவிட்டு சென்றுவிட்டார். கூட்டமாக இருந்தது, மருத்துவர் இன்னும் வந்திருக்க வில்லை. எனக்கு பெரிதாக ஒன்றும் நேர்ந்துவிடவில்லை என்பது புரிந்துவிட அப்போது கொஞ்சம் இடுப்பும் வலி குறைந்திருப்பதாக உணர்ந்ததால், அங்கிருந்து நடந்தே என வண்டி இருந்த இடத்திற்கு வந்துவிட்டேன். முன் சக்கரம் ஒரு மாதிரி வளைந்து ஏதோ ஒரு கம்பி வளைந்து ஓட்ட முடியாத அளவிற்கு இருந்தது. தள்ளிக்கொண்டே வெளிச்சத்திற்கு வந்து சரி செய்து ஓட்டிச் சென்றேன்.

கோவை அரசு கல்லூரியில் மிதிவண்டி வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் வண்டியுடனான ஒரு கதை இருக்கும். வண்டி இல்லாதவர்களுக்கு இன்னும் பல கதைகள். அரட்டை, காதல், மோதல், படிப்பு, துக்கம், சந்தோசம் என எல்லாவற்றிலும் எங்களுடன் பங்கு பெற்ற மிதிவண்டிகள், எங்கள் கல்லூரி வாழ்க்கையின் அழிக்கமுடியாத குறியீடுகள். இதோ இதை எழுதும் போது கூட ஏதோ ஒன்று எனக்குள் நிகழ்ந்து, எழுத்தில் காட்டமுடியாத ஒரு பரவச நிலைக்கு என்னை இட்டுச் செல்கிறது. படிப்பு முடியும் போது வண்டியை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல முடியாத சில காரணங்களினால் மட்டுமே அதை விற்று விட்டுசெல்வர். நான் என் வண்டியை என் ஊருக்கு எடுத்து சென்று விட்டேன். அன்று முதல் நான் ஊர் செல்லும் நாட்களில் என் உற்ற துணையாய் அது ஆகிவிட்டது. நான் வருகிறேன் என்றால் முன்தினமே என் அப்பா வண்டியை வெளியே எடுத்து துடைத்து காற்றடித்து வைத்துவிடுவர். என் தெரு வாசிகளுக்கு நான் ஊருக்கு வருகிறேன் என்பதன் அடையாளம் அது. மாலை வேளைகளில் மனித நடமாட்டம் அதிகம் இல்லாத தோட்டம் துறவுகளில், தரிசு நிலங்களில் நானும் என் செல்லமும் சுற்றுவோம். தார் சாலைகளை விடுத்து ஒற்றையடி பாதைகளில் வண்டியோட்டுவது இன்னும் அலாதியானது. வருடத்தின் சில நாட்களிலே கிடைக்கும் இந்த அற்புத தினங்களுக்காக மட்டுமே என் வண்டியை சென்னை கொண்டு வரும் திட்டத்தினை வெறும் பேச்சளவில் இன்னும் வைத்திருக்கிறேன்.

எதிர்காலம் நோக்கிய நம் வாழ்க்கைப் பயணங்களில் உறவுகளையும் மனிதர்களையும் தாண்டி சில பொருட்கள் நம்முடனேயே பயணிக்கின்றன, சில முறை நமக்குத் தெரிந்தும் பலமுறை நமக்குத் தெரியாமலும். ஏதேனும் ஒரு வேளையில், ஒரு நிகழ்வில் அதை நாம் உணரும் சமயம், நாம் வாழ்ந்த வாழ்க்கையை பின்னோக்கி பார்த்து சென்றிட உதவிடும் கருவியாக அவை உள்ளன. கடந்த கால வாழ்க்கையின் உணர்வுக் குறியீடுகள் அவை. எனக்கு என் மிதிவண்டி போல் உங்களுக்கும், எவருக்கும் கட்டாயம் ஒன்று(ஒன்றுக்கு மேலும்) இருக்கும்!

பொங்கலோ பொங்கல்!

புதுவீட்டில் குடியேறி இருப்பதால் முதல் ஒரு வருடத்திற்கு அனைத்து விழாக்களும் புது வீட்டில் தான் என்று அப்பா சொல்லிவிட இந்த முறை பொங்கலும் சென்னையில் தான். பொங்கலுக்கு ஊருக்கு போவது ஒரு தனி அனுபவம்! இந்த முறை அது வாய்க்கவில்லை. போகியன்றும் பொங்கலன்றும் மட்டுமே விடுமுறை. அவசர வேலை காரணமாக போகியன்றும் அலுவலகம் செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இரவு 8 மணி வரை அலுவலகத்திலேயே இருந்தேன். பொங்கலுக்கான ஒரு அறிகுறியும் எதிர்பார்ப்பும் இல்லாமலே போனது. மற்றுமொரு நாளாக மட்டுமே இருக்க போகிறது என்பது மட்டும் தெரிந்தது.

என் தங்கைகளின் உழைப்பால் வீடு சுத்தம் செய்யப் பட்டு இருந்தது. பொங்கலன்று நான் எழும்போது மணி 7:30 ஆகி இருந்தது. வாசலில் கரும்பு எல்லாம் வைத்து பொங்கல் வைப்பதற்கான ஆயத்த வேலைகளில் இருந்தனர். எனக்குத் தெரிந்து எங்கள் வீட்டில் பொங்கலன்று வைக்கப்பட போகும் முதல் பொங்கல் இதுவாகத்தான் இருக்கும். முந்தைய ஆண்டுகளில் வித விதமாய் காய்கறிகள், 12 வகை 16 வகை எல்லாம் செய்வார்கள். ஏனோ பொங்கல் வைத்ததில்லை. இந்த முறை அதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். 9 முதல் 10:30 வரை பொங்கல் வைக்க நல்ல நேரமாம். அதற்குள் குளித்து முடித்து தயாராக எனக்கு உத்தரவு வந்தது. 9 மணிக்கு மேல் பொங்கல் வைத்து சாமி கும்பிட்டோம். எங்கள் வீட்டு பொங்கலின் புகைப்படங்கள் கீழே.









காலை உணவுக்குபிறகு சிறிது நேரம் தொலைக்காட்சி பார்த்து விட்டு கரும்பு சாப்பிட்டு விட்டு எனது அறைக்கு வந்து புத்தகம் வாசிக்க ஆரம்பித்தேன். ஒரு இரண்டு மணி நேரம் வாசித்திருப்பேன். அப்புறம் மத்திய உணவு. 6 வகை காய்கறிகள் சாம்பார், ரசம் அப்பளமுடன் சாப்பாடு. திருப்தியாக சாப்பிட்டு விட்டு தூக்கம். மாலை ஆறு மணிக்கு தான் எழுந்தேன். வருத்தமாக இருந்தது. பொங்கலும் ஒரு விடுமுறை நாள் போல கழிந்துவிட்டதென்று. ஊரில் இருந்தால் என்ன பண்ணியிருப்பேன் என்று யோசித்துக்கொண்டே தேநீர் பருகினேன். அப்புறம் தற்செயலாகத் தோன்றியது "சென்னை சங்கமம்" நிகழ்ச்சி பற்றி. அண்ணாநகர் பூங்கா செல்வதென்று முடிவெடுத்து உடனே கிளம்பியும் விட்டேன்.
நல்ல கூட்டம். என் இருசக்கர வாகனத்தை நிறுத்த இடம் தேடவே நிறைய நேரம் ஆனது. உள்ளே சென்றபோது நையாண்டி மேளம், தப்பாட்டம் நிகழ்ச்சியின் உச்சகட்டம் நடந்து கொண்டிருந்தது. விலக இடம் இல்லை. உண்மையாகவே திருவிழா கூட்டம். அனேக பேர் மேடையின் முன் அமர்ந்திருக்க(தரையில்) அதைவிட அதிகமானோர் சுற்றி நின்றிருந்தனர். மரங்களின் மீது கூட சிலர் ஏறி அமர்ந்திருந்தனர். நான் போன சிறிது நேரத்திற்கெல்லாம் மேளம் நிகழ்ச்சி முடிந்து கர்நாடக சங்கீத பாட்டு ஆரம்பித்தது. விஜயலக்ஷ்மி சுப்பிரமணியன் பாடினார். இனிமையாகவும் இதமாகவும் இருந்தது. ரசிகர்களின் கரவொலியும் நன்றாகவே இருந்தது. முருகன், கண்ணன், சிவன் பாடல்கள், "செந்தமிழ் நாடெனும் போதிலே..., சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா..., அலைபாயுதே..." போன்ற பாடல்களை பாடினார். ஒரு ரசிகையின் வேண்டுகோளுக்கிணங்க "குறையொன்றுமில்லை..." பாடினார். நேரம் போதாமையால் ஒரு மணிநேரத்திலேயே முடித்துவிட்டார். அடுத்து "வால்கா முதல் கங்கை வரை.." என்ற தலைப்பில் மேற்கத்திய இசை நிகழ்ச்சி நடந்தது. நன்றாக இருந்த போதிலும் அதீத ஒலி கொண்ட இசை அப்போதைக்கு எனக்கு கேட்க வேண்டாம் என்று தோன்றிய காரணத்தினால் எழுந்து வந்துவிட்டேன். பொங்கலை நல்ல முறையில் முடித்து வைத்த மகிழ்ச்சி! திருப்தி!

உன்னாலணையும் உயிர்!



அப்படி,
எங்குதான் போய்விட்டாய்?

எப்படியோ
கடந்துவிடுகின்றன
கடத்தியும் விடுகிறேன்
நீயற்ற பகல்களை!

குளிர்பனி நெருக்கத்தில்
உடல் குறுக்கிக் கிடக்கையில்
பீறிட்டெழும் நினைவுகளை
போர்வைக்குள் சேமிக்கிறேன்
அடக்கமாட்டாமல்!

இன்றே கடைசி என்ற
நினைப்பினால் மட்டுமே
விழித்தெழுகிறேன்
ஒவ்வொரு காலையிலும்!

அலையிடை ஓடமும்
மலையிடை பருந்தும்
அடிக்கடி வந்துபோகின்றன!

நிதர்சன விதிகளை
நெடுநேரம்
பொய்க்கச் செய்யாமலிருக்க
விரைந்து வா
வந்துன்னை முழுமை செய்!


இதன் தொடர்ச்சியினை இங்கு வாசிக்க.

மழைக்கஞ்சி!

-சிறுகதை

"எலேய் அய்யனாரு, இங்கனக்குள்ள செத்த நேரம் வந்து ஒக்காந்தா குளுப்பாட்டி விடுவேன்ல. அப்பத்தான சாந்தரம் சாமி கும்புடப் போக சரியா இருக்கும்" சீத்தா பெரியம்மா கூப்பிட்டாள்.

நொங்கு வண்டி ஓட்டிக்கொண்டிருந்த அய்யனார், இதை காதில் வாங்கியதாகவே தெரியவில்லை. வண்டியை ஓட்டியவாறே வட்டமடித்துக் கொண்டிருந்தான். அவன் அருகில் சென்று வலதுகையின் நான்கு விரல்களையும் மடக்கி பெருவிரலை மட்டும் உயர்த்தி , கையை தலைக்கு மேலே உயர்த்தி, பெருவிரல் கீழே வருமாறு மணிக்கட்டை கவிழ்த்தி கீழிறக்கி பெருவிரல் தலையை மோதுமாறு இருமுறை செய்து, "குளிச்சயின்னா....", இப்பொழுது வலது கையை கடிகார சுற்றுக்கு எதிர் சுற்றாக காற்றில் இரு முறை அரை வட்டம் அடித்து "அப்புறமா... சாமி கும்புடப் போலாம்..." என இரு கையையும் குவித்துக் காட்டினாள்.

"கம்மாக்கு போவேன்.....குளிக்க"

"எந்த கம்மாயில தண்ணி இருக்கு குளிக்க? ஊரே காஞ்சி போய் கெடக்கு. அதுக்கு தான மழக்கஞ்சி காச்சி சாமி கும்புடப் போறோம். நீ இங்கயே குளி. நான் ஊத்தி விடுறேன்"

ஒண்ணும் சொல்லாமலே அய்யனார் ஓடி விட்டான். சிறிது நேரம் கழித்து வந்து உட்கார்ந்து கொண்டான்.



"அய்யனார் அந்த தெருவின் செல்லப்பிள்ளை. அவனுடைய அம்மாவும் அப்பாவும் அந்த ஊருக்கு பிழைப்பு தேடி வந்தார்கள். ஊர், பேர், சாதி, சனம் எதைப் பற்றியும் வாய்திறக்கவில்லை. "எங்களுக்குன்னு யாரும் எதுவும் இல்ல. இங்க ஒரு குடுசை போட விட்டீங்கன்னா உங்களுக்கு ரொம்ப ஒத்தாசையா இருப்போம்" என்று கேட்ட போது அத்தெருக்காரர்கள் ஏனோ மறுக்கவில்லை. தெருக்கடைசியில், ஒத்த வீட்டுக்கு எதிரில் இருந்த சீமக்கருவேல முள்ளை ஒதுக்கி விட்டு குடிசை போட்டுக்கொண்டனர். வரும்போதே வயிற்றில் அய்யனார் இருந்தான் என்பதை சிலநாட்கள் கழித்து தான் அவன் அம்மா தெருக்காரர்களிடம் கூறினாள். அய்யனார் பிறந்த போது தெருவே கொண்டாடியது. அத்தெருவில் அபொழுது சிறு வயதில் யாருமே இல்லை. ஐந்தாவது படித்துக் கொண்டிருந்த முருகேசு தான் இருப்பதிலேயே சின்னவன். எனவே அய்யனார் தெருவின் செல்லப் பிள்ளையாகிப் போனான். அவனுக்கு அய்யனார் எனப் பெயர் வைத்ததும் தெரு வாசிகளே.

இதிப்படி இருக்க அய்யனார்க்கு இரண்டு வயதாகும் போது அவன் அம்மாவும் அப்பாவும் காணாமல் போய் விட்டனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவர்களாகவும் திரும்பவில்லை. இதையொட்டி பல கதைகள் பேசப்பட்டாலும் உண்மையான காரணம் என்ன? எங்கு சென்றனர்? என்ன ஆயினர்? என யாராலும் சொல்ல இயலவில்லை. போனவர்கள் போகட்டும், அய்யனார் நம்ம கொழந்தையென தெருக்காரர்களும் விட்டு விட்டனர். அன்றிலிருந்து அய்யனார் எல்லோராலும் வளர்க்கப்பட்டான். நாட்கள் செல்ல செல்லத் தான் தெரிய வந்தது அய்யனாரின் உடல் வளர்ச்சிக்கு ஏற்ப மூளை வளரவில்லையென. பேச்சும் தாமதமாகவே வந்தது. "ச சா சி சீ" வரிசை உச்சரிக்க வரவில்லை, அவனுக்கு. சா க்கு தா தான் சொல்லுவான். சாமி அவனுக்கு தாமி. பேசவும் முடியும், காதும் கேட்கும் ஆனால் சைகை மொழி தான் அவனுக்கு எளிதாக புரிந்தது. எனவே ஒரு முறை சொல்லி அவன் சரியான மறுமொழி செய்யாவிட்டால் சைகை செய்து காட்ட ஆரம்பித்தனர் தெருக்காரர்கள். தலையாட்டல், கையசைத்தல் மட்டுமே பெரும்பாலான மறுமொழிகளாக இருக்கும். ஒரு வார்த்தை இரண்டு வார்த்தை தான் பேசுவான். முருகேசுவிடம் மட்டுமே கொஞ்சம் நிறைய பேசுவான்.

இப்பொழுது அவனுக்கு ஏழு வயசு முடிந்து விட்டது. பள்ளிக்கூடம் போக மறுத்துவிட்டான். வலுக்கட்டாயமாகப் போய் விட்டால், எங்காவது ஓடிப் போய்விடுவான். ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பது அவனுக்கு பிடிக்காததுவும், முடியாததுவுமாக இருந்தது. நடந்துகொண்டோ ஓடிக்கொண்டோ தான் இருப்பான் எப்பொழுதும். தெருவாசிகள் அவனை மிகவும் பாசத்துடன் பார்த்துக்கொண்டனர். அவன் நடவடிக்கைகளை, செய்கைகளை ஊர்க்காரர்களை கேலி பேச அனுமதிப்பதில்லை அவர்கள். செய்தால் அத்தெரு இளைஞர்களுக்கு கோபம் வந்துவிடும். அவனை குளிக்க வைக்கவும், சோறு போடவும், துணி வாங்கிக் கொடுக்கவும் நிறைய பேர் இருந்தனர். சாமி கும்பிடுவது அய்யனார்க்கு மிகப் பிடித்தமான ஒன்று. ஊர்த் திருவிழா மற்றும் நல்ல நாட்களில் கோயிலுக்குப் போகும் பெண்களுடன் சேர்ந்துகொள்ளுவான். கோவிலில் முதல் வரிசையில் சாமிக்கு நேர் எதிரே நின்று தான் கும்பிடுவான்.



ஊரில் இந்த வருடம் பெய்ய வேண்டிய பருவமழை தள்ளிக்கொண்டே சென்றது. போன வருடமும் குறைந்த அளவே மழை பெய்ததால் கம்மாய், குளம், குட்டை எல்லாம் வற்றி விட்டன. கிணறுகளில் மட்டும் கொஞ்சம் தண்ணி இருந்தது. வற்றாத கிணறு எனப்பட்ட குடிநீர் கிணற்றில் கூட தண்ணீர் கீழே சென்றுவிட்டது. ஐப்பசி தாண்டி கார்த்திகை பாதி கடந்தும் மழை பெய்யவில்லை. இப்படியே சென்றால் சித்திரையில் குடிக்கவும் விவசாயத்திற்கும் சிறிதளவு கூட தண்ணி இருக்காது என்று பேசிக்கொண்டனர். ஊர்க்கூட்டம் போட்டு அனைவரும் சேர்ந்து மழைவேண்டி மழைக்கஞ்சி காச்சி மாரியம்மனுக்குப் படைப்பதென முடிவு செய்தனர். வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யவும், கஞ்சி காய்ச்ச தேவையான பொருட்களும், பலி குடுக்க ஆடும் வாங்க வேண்டிய பணத்திற்கு தலைக்கட்டுக்கு எவ்வளவு வரி எனவும் தீர்மானித்து வசூலும் செய்யப் பட்டது.

இன்றைக்குத்தான் அந்த நாள். அதற்குப் போகத் தான் சீத்தா பெரியம்மா அய்யனாரை தயார்படுத்திக் கொண்டிருந்தாள். அவளுக்குத் தெரியும் சாமி கும்பிட போவதற்கு அய்யனார் தானாகவே வருவான் என்று. ஆதலால் ஒன்றும் பெரிதாக அவனை வற்புறுத்தவில்லை.



ஊரே மாரியம்மன் கோவிலில் கூடி இருந்தது. ஒரு பக்கத்தில் பெரிய வட்டையில் கஞ்சி காச்சிக் கொண்டிருந்தனர். அரிசி, பருப்பு, கேழ்வரகு, கம்பு, காய்கறிகள் எல்லாம் போட்டு ஆக்கப்படும் ஒருவிதமான கூட்டாஞ்சோறு அது. வடித்த சோறு போலவும் இல்லாமல், கஞ்சியாகவும் இல்லாமல் அரைப் பக்குவத்துடன் கிண்டப்படும் சோறு அது. மறுபக்கம் பூசைக்குத் தேவையான ஏற்பாடுகளை கோவில் பூசாரியும் இன்னும் இருவரும் பார்த்துக்கொண்டிருந்தனர். ஊர்ப் பெரியவர்களும் வயசானவர்களும் கோயிலின் பக்கவாட்டில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர். பெண்கள் விரிக்கப் பட்டிருந்த தார்ப்பாய்களில் உட்கார்ந்திருந்தனர். இடம் இல்லாதவர்கள் நின்று கொண்டு இருந்தனர்.

இப்பொழுதே மேகம் கூட ஆரம்பித்திருப்பதாக சிலர் பேசிக்கொண்டனர். பலி குடுக்கப் பட வேண்டிய ஆடு மாலையும் கழுத்துமாக அருகிலிருந்த மரத்தில் கட்டப் பட்டிருந்தது. கஞ்சி ஆகிவிட்டது எனச் சொல்லி அதை எடுத்து வந்து அம்மனுக்கு முன்னால் வைத்தனர். பூசாரி பூசையை ஆரம்பித்தார். அனைவரும் எழுந்து கைகூப்பிய வண்ணம் பூசையைக் கவனித்துக் கொண்டிருந்தனர். அங்கம்மாள் பாட்டி சத்தமாகவே தன் பிரார்த்தனையை முன்வைத்தாள். "அம்மா மகமாயி, மாரியம்மா...இப்பவே தண்ணி இல்லாம போய்டுச்சு. இப்பிடியே போனா நாங்க எல்லாம் எங்க போறது. மனுஷங்களாவது அங்க இங்க தேடி தண்ணி குடிச்சுகிடுறோம். இந்த ஆடு மாடு கோழி எல்லாம் என்ன பண்ணும்? வானம் பாத்த பூமிய வைச்சுக்கிட்டு, மழ பெய்யலைன்னா நாங்க என்ன பண்ணுவோம்? நாங்க குடுக்குற இந்த காணிக்கைய ஏத்துகிட்டு மனம் குளுந்து மழ பெய்ய வையிமா"

மேற்குத் திசையில் ஒரு மின்னல் வெட்டியது. மக்கள் சந்தோசத்துடன் பூசையைக் கவனிக்கத் தொடங்கினர். பூசாரி படையல் வைத்து, அம்மனுக்கு மாலை சாத்தி, தேங்காய் உடைத்து தீபாராதனை காட்டிவிட்டு, ஆட்டை வெட்டுமாறு தலையசைத்தார். அரிவாளுடன் நின்றிருந்த இருளப்பன் ஆட்டை கோவிலுக்கு நேரே கொண்டு வந்து ஆடு அம்மனை நோக்கியவாறு இருக்குமாறு செய்து தலையில் மஞ்சள் நீர் ஊற்றினான். ஆடு தலையை குலுக்கியதும் ஒரே வெட்டு. தலை தனியே போய் விழுந்தது. உடல் கீழே விழுந்து துள்ளியது. ரத்தம் பீய்ச்சியடித்து அனைவர் மேலும் தெறித்தது. பெண்கள் அனைவரும் குலவை இட்டனர். மறுபடியும் மின்னல் வெட்டியது. இடி இடித்தது. மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. காற்றில் ஈரப்பதம் கூடி இருந்தது.

பூசை முடிந்து அனைவருக்கும் திருநீறு கொடுத்தார் பூசாரி. அம்மனுக்குப் படைத்தது போக மீதமிருந்த கஞ்சியை அனைவருக்கும் வழங்குமாறு பூசாரி சொல்ல அதற்கான ஆயத்த வேலைகள் ஆரம்பமாயின. அனைவரும் தாங்கள் கொண்டு வந்திருந்த பாத்திரங்களுடன் வரிசையில் நிற்க ஆரம்பித்தனர். தூறலும் ஆரம்பித்து விட்டது. அதை பொருட்படுத்தாது அனைவரும் சாமி கும்பிடவும் கஞ்சி வாங்கவும் செய்து கொண்டிருந்தனர். பெண்கள் வானத்தை நோக்கியும், அம்மனை நோக்கியும் மீண்டுமொருமுறை குலவையிட்டனர். மழை வலுக்க ஆரம்பித்தது. இப்பொழுது அனைவரும் ஒதுங்க இடம் தேடி ஓடினர். கோயில் மண்டபத்திலும், போட்டிருந்த கொட்டகையிலும் ஒதுங்க ஆரம்பித்தனர். கோயில் அருகினில் இருந்த வீட்டுக்காரர்கள் தங்கள் வீடுகளுக்கு மழைக்கு நடுவே ஓடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது சீனிச்சாமி வாத்தியார் தான் முதலில் பார்த்து சொன்னார் "இங்க பாருய்யா. அய்யனார் கொடையோட வந்திருக்கான்"னு.

மழையில் குடை பிடித்துக்கொண்டு வந்த அய்யனார் கொட்டகையில் ஒதுங்கி நின்ற முருகேசுவிடம் "வா...வீட்டுக்கு..." என்று குடைக்குள் அழைத்தான். முருகேசு ஓடிச் சென்று அவனுடன் குடைக்குள் புகுந்துகொண்டான். அவனை அணைத்துக் கொண்டு மழையில் நனையாதவாறு நடக்கும் போது அய்யனார் சொன்னான்
"தாமி மேல நம்பிக்கையா இருந்தா....தாமி மழ குடுக்கும்...."
"எனக்குத் தெரியும் மழ வரும்ன்னு. அதான் கொடை கொண்டாந்தேன்..."

-----*****-----

இந்த கதைக்கான கரு சில வருடங்களுக்கு முன்பு மின்னஞ்சலில் வந்தது. அதை கீழே கொடுத்துள்ளேன். இதனை தமிழாக்கம் செய்யும் என் முயற்சியே மேற்கண்ட கதை.

Drought was devastating to the farmers of yesterday. Even rich, fertile ground becomes cracked and hard. Healthy crops wither and begin to die. The farmer’s life, money and hope is tied up in the wilting crop as he waits for rain. The occasional clouds that float past are only hollow promises. He waits, because that is all the farmer of yesterday could do.

Every conversation turned to the same concern, "When is it going to rain?" Even in the little white church between the rows of wilting corn, the wrinkles that creased their brow and the quiver in their voice mirrored their fear, "When is it gonna rain? This drought can’t hold out forever."

Somebody suggested it, no one was sure exactly who, but everyone agreed it was a good idea- a prayer meeting was scheduled. They were going to pray for rain. What a spiritual idea. After weeks of drought they finally decided to pray.

Everyone came. They were desperate. The entire town depended on those crops. They came with dust on their shoes and deep furors of concern etched in their heart. Some were wrinkled and white haired, some were young and strong from hard work and good food. Some held tiny babies in their arms, but they all came to pray.

They all came to pray except one little girl, she made her way to the front row where she laid it down on the pew. The others came to pray, but she came to get rain. Why would I make such a bold statement? Because I saw the red umbrella that lay beside her on the pew.