என் வாழ்க்கைப் பயணங்களில் மிதிவண்டி...

ஏழு அல்லது எட்டு வயதிருக்கலாம் நான் மிதிவண்டி ஓட்ட கற்றுக்கொள்ள ஆரம்பித்தபொழுது. ஒரு மணிநேரத்திற்கு ஒரு ரூபாய் வாடகை, சிறு அளவிலான வண்டிக்கு. "முருகன் சைக்கிள் மார்ட்" என்பது கடையின் பெயர். இன்னொரு கடையும் இருந்தது ஊரில். ஆனால் முருகனில் தான் இரண்டு மூன்று உயர அளவுகளில் வண்டிகள் இருந்ததால் அது முதல் விருப்பமாக இருந்தது. தவிர அது பள்ளி விளையாட்டு மைதானத்தின் அருகிலேயே இருந்ததால் ஓட்டிப் பழகவும் வசதியாக இருந்தது. ஓட்டிப்பழகும் போது, எங்கேனும் ஆணி/முள்/கல் குத்தி சக்கரத்தினுள் உள்ள குழாயில்(Tube) பொத்தல் விழுந்து விட்டால் அதை சரிசெய்யும் பணத்தையும் நாம் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். சில சமயங்களில் அது தெரியாதவாறு நிறுத்திவிட்டு வந்துவிட முயலுவதும் உண்டு. ஆனால் அடுத்த முறை போகும் போது முருகனிடம் மாட்டிக்கொள்ள வேண்டும். இதற்காக உள்ளீடற்ற சக்கரம்(Tubeless Tyre) - கல்லு டயர் என்போம் - உள்ள வண்டியை தேர்வு செய்வது உண்டு. ஆனால் அதை ஓட்டுவது சிறிது கடினமாது. கொஞ்சம் அதிகமாக விசை கொடுத்து உந்தவேண்டும். முருகனிடம் அதுபோல ஒரே வண்டி மட்டுமே இருந்தது. அவரிடம் இருந்த அனைத்து வண்டிகளுமே சிகப்பு வண்ணம் உடையவை.

விடுமுறை நாட்களில் தான் ஓட்டிப் பழகுவேன். கடைக்கு செல்லும் போதே கைகளை கால்களாக்கி வண்டி ஓட்டுவது போல் பாவனை செய்து கொண்டே போவது இன்னும் நினைவில் இருக்கிறது. ஓரளவுக்கு பழகிய பின்பு ஒரு முறை எதேச்சையாக, பக்கத்து ஊரிலிருக்கும் என் பெரியம்மா மகன், என் அண்ணன் அப்பக்கம் வந்த போது, ஒரு கையை விட்டு ஓட்டி என் திறமையை காண்பித்தேன். மிதிவண்டி ஓட்டிப் பழக வேண்டும் என்ற எண்ணத்தை யார் என்னிடம் முதலில் விதைத்தார்கள், முதலில் யார், அப்புறம் யார்யாரெல்லாம் எனக்கு கற்றுக்கொடுத்தார்கள் என்பது நினைவில் இல்லை. என் நினைவில் இருக்கும், எனக்கு கற்றுக்கொடுத்த ஒரே நபர் அதுவும் ஒரே நாள், குமார் மாமா. என் அக்காவின் மகன். அன்று தான் மிதிவண்டியில் என் முதல் விபத்து. என் உயரத்தை விட சற்று உயரம் கூடுதலான வண்டி. அந்த மாதிரியான வண்டிகளில் ஏறி அமர்ந்து ஓட்டாமல் குரங்கு பெடல் முறையிலேயே ஓட்டி வந்தேன். குமார் மாமா கொடுத்த தைரியத்தால் அன்று ஏறி அமர்ந்து ஓட்டலானேன். வட்டமடித்துக் கொண்டிருக்கும் போது அதீத ஆர்வத்தினால், வேகத்தை கூட்ட முனைந்து , நிலை தடுமாறி கீழேவிழுந்து, கையை கீழே ஊன்றி முழு எடையையும் அதில் செலுத்தி நிலை நிறுத்த முயன்ற போது பிசகிக்கொண்டது. சிராய்ப்பு ஏதேனும் இருந்ததா எனத் தெரியவில்லை. ஆனால் முட்டைப்பத்து போட்டு தூளி கட்டும் அளவுக்கு கை பிசகிக் கொண்டது. கரிசல்குளம் வைத்தியர் முட்டைப்பத்து புண்ணியத்தில் கை சில நாட்களில் சரியானது.

மற்றவர்கள் ஓட்டும் போது, பின் இருக்கையில், வண்டி ஓடிக்கொண்டிருக்கும் போதே லாவகமாக தாவி ஏறி அமர்ந்துகொள்ளும் கலை எனக்கு வெகு நாட்கள் கைகூடாமலேயே இருந்தது. வண்டியின் ஓட்டத்திற்கு ஏற்பவும் , பின் இருக்கையின் மையத்தில் அமரும் அளவுக்கும், தகுந்த விசை கொடுத்து உந்தி குதித்து உட்கார வேண்டும். இருக்கையில் சற்று முன்போ அல்லது தள்ளியோ அமர்ந்துவிட்டால் பயணம் முழுவதும் ஒருவிதமான நிலையின்மையாகவே அமைந்து, எங்கு எப்போது கீழே விழுந்து விடுவோமோ என்ற பயம் நிறைந்ததாக, கொடுமையாக அமைந்து விடும். அதுவும் வண்டி புறப்பட்டு சிறிது நேரத்திற்குள் ஏற வேண்டும். நாம் ஏற வேண்டும் என்பதற்காக வண்டியோட்டி மெதுவாக ஓட்டிக்கொண்டிருப்பார், ஏறியதற்கான அறிகுறி தெரிந்ததும் வேகத்தை அதிகரிக்கும் முனைப்புடன். என் உயரமும் பின்னிருக்கையின் உயரமும் ஏறக்குறைய ஒரே அளவு இருந்த அக்காலங்களில் இது எனக்கு மிகவும் சவாலானதாகவே இருந்து வந்தது. இதற்கு இடையில் சாலையின் மேடு பள்ளங்களையும் எதிரில் வரும் மற்ற வண்டிகளையும் வேறு கவனித்துக் கொள்ள வேண்டும். உண்மையாகவே அது ஒரு கலை தான்! பல நாட்கள் நான் வண்டி கூடவே ஓடிப்போவதுதான் தான் மிஞ்சும். அவராக நிறுத்தி எனக்கு ஏற அவகாசம் தந்தாலொழிய நான் ஏறிஇருக்க மாட்டேன். கூட்டிச் செல்வதே பெரிய உதவி. அவர்களிடம் போய் "இல்லை எனக்குத் தாவி ஏறத் தெரியாது. நிறுத்தி ஏற்றிக்கொண்டு அப்புறம் செல்லுங்கள்" என்றெல்லாம் கூறுவது மிகப்பெரிய குற்ற உணர்ச்சியாக என்னுள் இருந்தது. எனவே மிகத் தெரிந்தவர்களுடன் மட்டுமே செல்லுவேன். நாட்கள் செல்ல செல்ல கலை ஒருவழியாக கைகூடியது. அதன் பிறகு 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி விடுதிகளில் தங்கி பயின்ற காரணத்தினால் மிதிவண்டி ஓட்டும் நேரமும், தேவையும் குறைந்து விட்டது. விடுமுறையில் ஊருக்கு வரும் போது எப்போதாவது ஓட்டுவேன்.

கோவை அரசு பொறியியற் கல்லூரியில் இரண்டாம் ஆண்டிலிருந்து மிதிவண்டி வைத்துக்கொள்ள அனுமதி உண்டு. மேலே உள்ள படத்தில் உள்ளது தான் நான் வாங்கியது. கோவை 100 அடி சாலையில் உள்ள ஒரு கடையில் வாங்க நான் சென்ற போது ஒரு ஒரு பாகங்களாக இணைக்கப்பட்டு முக்கால்வாசி முடிவடைந்த நிலையில் ஒரு வண்டியை அருகில் ஒருவர் மாட்டிக்கொண்டிருந்தார். கடை முதலாளியிடம் விலை விசாரித்து வாங்கிவிடுவதென முடிவெடுத்து பணமும் கட்ட ஆயத்தம் ஆகும் வரை அது தான் எனக்கு வரப்போகும் வண்டி என எனக்குத் தெரியாது. "எப்போ கெடைக்கும்" எனக் கேட்டபோது இதோ இவர் மாட்டி முடிச்சதும் எடுத்துக்கலாம் என அவர் கை காட்டிய திசையில் நான் பார்த்தது தான், என் வண்டி என நான் பார்த்த முதல் பார்வை. அங்கேயே இருந்து முழுவதும் முடிந்த பின்பு அப்படியே ஓட்டிக்கொண்டு வந்தேன். ஆனந்தமாக இருந்தது. நகர வீதிகளில் நான் ஓட்டுவது அதுவே முதல் முறை. அதுவும் அதுபோன்ற நவீனமான மிதிவண்டியை. என் அப்பாவிலிருந்து தொடங்கும் எங்கள் குடும்பத்தின் முதல் வாகனம்(சிறு வயதில் நடை பழகிய நடைவண்டியைத் தவிர்த்து). "என் செல்லம்" எனப் பெயர் வைத்தேன், எனக்காக மட்டும்! கல்லூரி மற்றும் கணிணி வகுப்புகளுக்கு செல்லல், திரைப்படம் பார்க்க செல்லுதல், ஊர் சுற்றுதல் என மிதி வண்டியின் பயன்பாடுகள் அதிகம். மூன்று வருடத்தில் எத்தனை தூரம் பயணம் செய்திருப்பேன் என்பது தெரியாது. ஒரு முறை கோவையின் அருகிலிருக்கும் ஆனைக்கட்டி என்ற ஊருக்கு ஒரு மாலை வேளையில் தனியாக சென்று தேநீர் மட்டும் அருந்தி விட்டு வந்திருக்கிறேன். எந்த ஒரு காரணமும் குறிக்கோளும் இல்லாமல் மிதிவண்டியில் பயணம் செய்வதை என மனம் எப்போதுமே விரும்பியிருக்கிறது.

அவினாசி
சாலையில், ஹோப்ஸ் கல்லூரி நிறுத்தத்தின் அருகில் இருக்கும் குமார் மாமாவின் அறைக்கு (கோவையில் அப்போது அவர் மகிழ்வுந்து(car) ஓட்டுனராக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். இன்னும் சில நண்பர்களுடன் அறையில் தங்கி இருந்தார்) அடிக்கடி சென்று வருவேன். அப்படி ஒரு முறை சென்றபோது தான் மிதிவண்டியில் என் இரண்டாவது விபத்து. என் இரண்டு விபத்திலுமே குமார் மாமா சம்பந்தப் பட்டு இருப்பது, இப்போது தான் எனக்குப் புரியும் ஆச்சரியமான உண்மை. அவினாசி சாலையில் இடது புறத்தில் இருந்து வலது பக்கம் திரும்ப முனைந்து பின்பக்கம் பார்த்து விட்டு தான் திரும்பினேன். திரும்பிய சில நொடிகளில் என்ன ஏதுவென்று உணரும் முன்பே சாலையில் விழுந்து கிடந்தேன். பின்னால் வந்த ஒரு இரு சக்கர வாகனம் என் மீது மோதிவிட்டு சென்றிருந்திருக்கிறது. மாலை முடிந்து இருள் கவிழ்ந்திருந்த நேரம். அந்த பகுதியில் விளக்குகள் ஏதும் இல்லை. அருகினில் எங்கோ இருந்த சிலர் வந்து என்னையும் என் வண்டியையும் சாலை ஓரமாக கொண்டுவந்தனர். பெரிய அடி எதுவும் இல்லை. ஆனால் இடுப்பு பகுதியில் வலி தெரிந்தது. ஒரு மாதிரி தவங்கி தவங்கி நடந்து சாலை ஓரம் வந்தேன். நல்ல வேளை, நான் அடிபடும் போது பின்புறம் எந்த வாகனமும் வரவில்லை. அதுவும் அவினாசி சாலை போன்ற பெரிய சாலைகளில் எப்போதும் பேருந்துகள் போய் கொண்டிருக்கும். வந்திருந்தால் 'அலைபாயுதே' சக்தி கதை தான் எனக்கும் நேர்ந்திருக்கும். சிறிது நேரம் கழித்து என்னை இடித்து சென்ற வண்டியில் ஒரு வாலிபர் திரும்பி வந்தார். என்னைவிட சிறிதே வயது மூத்தவர். திரும்பும் போது பாத்து திரும்ப வேண்டாமா என என்னை கேட்டுவிட்டு மன்னிப்பும் கேட்டார். அங்குஇருந்தவர் எல்லாம் "இவருக்கு இடுப்பு வலிக்குதாம் ஆஸ்பத்ரிக்கு கூட்டீட்டுபோங்க" என சொல்ல என் வண்டியை அங்கேயே ஓரமா பூட்டி வைத்து விட்டு அவர் என்னை ஒரு மருத்துவமனையில் இறக்கி விட்டுவிட்டு சென்றுவிட்டார். கூட்டமாக இருந்தது, மருத்துவர் இன்னும் வந்திருக்க வில்லை. எனக்கு பெரிதாக ஒன்றும் நேர்ந்துவிடவில்லை என்பது புரிந்துவிட அப்போது கொஞ்சம் இடுப்பும் வலி குறைந்திருப்பதாக உணர்ந்ததால், அங்கிருந்து நடந்தே என வண்டி இருந்த இடத்திற்கு வந்துவிட்டேன். முன் சக்கரம் ஒரு மாதிரி வளைந்து ஏதோ ஒரு கம்பி வளைந்து ஓட்ட முடியாத அளவிற்கு இருந்தது. தள்ளிக்கொண்டே வெளிச்சத்திற்கு வந்து சரி செய்து ஓட்டிச் சென்றேன்.

கோவை அரசு கல்லூரியில் மிதிவண்டி வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் வண்டியுடனான ஒரு கதை இருக்கும். வண்டி இல்லாதவர்களுக்கு இன்னும் பல கதைகள். அரட்டை, காதல், மோதல், படிப்பு, துக்கம், சந்தோசம் என எல்லாவற்றிலும் எங்களுடன் பங்கு பெற்ற மிதிவண்டிகள், எங்கள் கல்லூரி வாழ்க்கையின் அழிக்கமுடியாத குறியீடுகள். இதோ இதை எழுதும் போது கூட ஏதோ ஒன்று எனக்குள் நிகழ்ந்து, எழுத்தில் காட்டமுடியாத ஒரு பரவச நிலைக்கு என்னை இட்டுச் செல்கிறது. படிப்பு முடியும் போது வண்டியை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல முடியாத சில காரணங்களினால் மட்டுமே அதை விற்று விட்டுசெல்வர். நான் என் வண்டியை என் ஊருக்கு எடுத்து சென்று விட்டேன். அன்று முதல் நான் ஊர் செல்லும் நாட்களில் என் உற்ற துணையாய் அது ஆகிவிட்டது. நான் வருகிறேன் என்றால் முன்தினமே என் அப்பா வண்டியை வெளியே எடுத்து துடைத்து காற்றடித்து வைத்துவிடுவர். என் தெரு வாசிகளுக்கு நான் ஊருக்கு வருகிறேன் என்பதன் அடையாளம் அது. மாலை வேளைகளில் மனித நடமாட்டம் அதிகம் இல்லாத தோட்டம் துறவுகளில், தரிசு நிலங்களில் நானும் என் செல்லமும் சுற்றுவோம். தார் சாலைகளை விடுத்து ஒற்றையடி பாதைகளில் வண்டியோட்டுவது இன்னும் அலாதியானது. வருடத்தின் சில நாட்களிலே கிடைக்கும் இந்த அற்புத தினங்களுக்காக மட்டுமே என் வண்டியை சென்னை கொண்டு வரும் திட்டத்தினை வெறும் பேச்சளவில் இன்னும் வைத்திருக்கிறேன்.

எதிர்காலம் நோக்கிய நம் வாழ்க்கைப் பயணங்களில் உறவுகளையும் மனிதர்களையும் தாண்டி சில பொருட்கள் நம்முடனேயே பயணிக்கின்றன, சில முறை நமக்குத் தெரிந்தும் பலமுறை நமக்குத் தெரியாமலும். ஏதேனும் ஒரு வேளையில், ஒரு நிகழ்வில் அதை நாம் உணரும் சமயம், நாம் வாழ்ந்த வாழ்க்கையை பின்னோக்கி பார்த்து சென்றிட உதவிடும் கருவியாக அவை உள்ளன. கடந்த கால வாழ்க்கையின் உணர்வுக் குறியீடுகள் அவை. எனக்கு என் மிதிவண்டி போல் உங்களுக்கும், எவருக்கும் கட்டாயம் ஒன்று(ஒன்றுக்கு மேலும்) இருக்கும்!

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

தல!! எனக்கு இந்த ப்லொக் படிக்கும் பொது, நான் மிதி வண்டி பழகிய நாட்கள் தான் நினைவு வருகிறது....அது செம்ம கமெடி!!!!

நானும் என்னொட நெனைவுகளை பதியனும்!!!!

மீண்டும் ஒரு நல்ல பதிவு!!!!!