பொங்கலோ பொங்கல்!

புதுவீட்டில் குடியேறி இருப்பதால் முதல் ஒரு வருடத்திற்கு அனைத்து விழாக்களும் புது வீட்டில் தான் என்று அப்பா சொல்லிவிட இந்த முறை பொங்கலும் சென்னையில் தான். பொங்கலுக்கு ஊருக்கு போவது ஒரு தனி அனுபவம்! இந்த முறை அது வாய்க்கவில்லை. போகியன்றும் பொங்கலன்றும் மட்டுமே விடுமுறை. அவசர வேலை காரணமாக போகியன்றும் அலுவலகம் செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இரவு 8 மணி வரை அலுவலகத்திலேயே இருந்தேன். பொங்கலுக்கான ஒரு அறிகுறியும் எதிர்பார்ப்பும் இல்லாமலே போனது. மற்றுமொரு நாளாக மட்டுமே இருக்க போகிறது என்பது மட்டும் தெரிந்தது.

என் தங்கைகளின் உழைப்பால் வீடு சுத்தம் செய்யப் பட்டு இருந்தது. பொங்கலன்று நான் எழும்போது மணி 7:30 ஆகி இருந்தது. வாசலில் கரும்பு எல்லாம் வைத்து பொங்கல் வைப்பதற்கான ஆயத்த வேலைகளில் இருந்தனர். எனக்குத் தெரிந்து எங்கள் வீட்டில் பொங்கலன்று வைக்கப்பட போகும் முதல் பொங்கல் இதுவாகத்தான் இருக்கும். முந்தைய ஆண்டுகளில் வித விதமாய் காய்கறிகள், 12 வகை 16 வகை எல்லாம் செய்வார்கள். ஏனோ பொங்கல் வைத்ததில்லை. இந்த முறை அதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். 9 முதல் 10:30 வரை பொங்கல் வைக்க நல்ல நேரமாம். அதற்குள் குளித்து முடித்து தயாராக எனக்கு உத்தரவு வந்தது. 9 மணிக்கு மேல் பொங்கல் வைத்து சாமி கும்பிட்டோம். எங்கள் வீட்டு பொங்கலின் புகைப்படங்கள் கீழே.









காலை உணவுக்குபிறகு சிறிது நேரம் தொலைக்காட்சி பார்த்து விட்டு கரும்பு சாப்பிட்டு விட்டு எனது அறைக்கு வந்து புத்தகம் வாசிக்க ஆரம்பித்தேன். ஒரு இரண்டு மணி நேரம் வாசித்திருப்பேன். அப்புறம் மத்திய உணவு. 6 வகை காய்கறிகள் சாம்பார், ரசம் அப்பளமுடன் சாப்பாடு. திருப்தியாக சாப்பிட்டு விட்டு தூக்கம். மாலை ஆறு மணிக்கு தான் எழுந்தேன். வருத்தமாக இருந்தது. பொங்கலும் ஒரு விடுமுறை நாள் போல கழிந்துவிட்டதென்று. ஊரில் இருந்தால் என்ன பண்ணியிருப்பேன் என்று யோசித்துக்கொண்டே தேநீர் பருகினேன். அப்புறம் தற்செயலாகத் தோன்றியது "சென்னை சங்கமம்" நிகழ்ச்சி பற்றி. அண்ணாநகர் பூங்கா செல்வதென்று முடிவெடுத்து உடனே கிளம்பியும் விட்டேன்.
நல்ல கூட்டம். என் இருசக்கர வாகனத்தை நிறுத்த இடம் தேடவே நிறைய நேரம் ஆனது. உள்ளே சென்றபோது நையாண்டி மேளம், தப்பாட்டம் நிகழ்ச்சியின் உச்சகட்டம் நடந்து கொண்டிருந்தது. விலக இடம் இல்லை. உண்மையாகவே திருவிழா கூட்டம். அனேக பேர் மேடையின் முன் அமர்ந்திருக்க(தரையில்) அதைவிட அதிகமானோர் சுற்றி நின்றிருந்தனர். மரங்களின் மீது கூட சிலர் ஏறி அமர்ந்திருந்தனர். நான் போன சிறிது நேரத்திற்கெல்லாம் மேளம் நிகழ்ச்சி முடிந்து கர்நாடக சங்கீத பாட்டு ஆரம்பித்தது. விஜயலக்ஷ்மி சுப்பிரமணியன் பாடினார். இனிமையாகவும் இதமாகவும் இருந்தது. ரசிகர்களின் கரவொலியும் நன்றாகவே இருந்தது. முருகன், கண்ணன், சிவன் பாடல்கள், "செந்தமிழ் நாடெனும் போதிலே..., சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா..., அலைபாயுதே..." போன்ற பாடல்களை பாடினார். ஒரு ரசிகையின் வேண்டுகோளுக்கிணங்க "குறையொன்றுமில்லை..." பாடினார். நேரம் போதாமையால் ஒரு மணிநேரத்திலேயே முடித்துவிட்டார். அடுத்து "வால்கா முதல் கங்கை வரை.." என்ற தலைப்பில் மேற்கத்திய இசை நிகழ்ச்சி நடந்தது. நன்றாக இருந்த போதிலும் அதீத ஒலி கொண்ட இசை அப்போதைக்கு எனக்கு கேட்க வேண்டாம் என்று தோன்றிய காரணத்தினால் எழுந்து வந்துவிட்டேன். பொங்கலை நல்ல முறையில் முடித்து வைத்த மகிழ்ச்சி! திருப்தி!

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Gas stove la Man paani pongal!! Great!! Nalla muyarchi...