காகித இதயங்கள்!

ஆறாம் வகுப்பில் விடுதியில் தங்கி படிக்க ஆரம்பித்த போதுதான் ஆரம்பமானது, கடிதம் எழுதுவது. அதற்கு முன்னர் வாய்ப்புகள் இல்லை. விடுப்பு விண்ணப்பக்கடிதம் கூட எழுதியதில்லை என நினைக்கிறேன். விடுதியில் சேர்ந்த பின்பு வீட்டிலுள்ளவர்களுக்கும் எனக்குமிடையேயான இடைவெளியை கண்ணுக்குத் தெரியாத கயிறுகளால் இணைத்தவை கடிதங்கள். பதினைந்துபைசா மஞ்சள் அட்டைகளும், எழுபத்தைந்து பைசா இன்லேண்ட் லெட்டர்களும் எழுதி முடியா எண்ணங்களை சுமந்து கொண்டு இங்கும் அங்குமாக போய் வந்துகொண்டிருக்கும்.

"அன்புள்ள அப்பா அவர்களுக்கு...", "அன்பும் பாசமும் நிறைந்த அப்பா அவர்களுக்கு...", "அன்பும் பண்பும் பாசமும் நிறைந்த நண்பனுக்கு" என்று விதவிதமான விளிப்புகளுடன் தொடங்கி, நல விசாரிப்புகள், தேவைகள், பணம், எப்பொழுது பார்க்க வரவேண்டும், என்ன வாங்கி வர வேண்டும் என்பது போன்ற, எந்த கட்டிலும் வரையறைகளிலும் அடங்காத வாக்கியங்கள் அடங்கியதாகவே அது பெரும்பாலும் இருக்கும். மாரி பிஸ்கட் ஒரு பாக்கெட், நல்ல காயாக உள்ள கொய்யாக்காய்கள் சில, இது போல பட்டியலிட்டு கூட நான் எழுதி இருக்கிறேன். ஒருமுறை என்னைப் பார்க்க வந்த அப்பா, நான் எழுதிய கடிதங்களில் உள்ள தவறுகளை சிவப்பு மையினால் திருத்தி(ஆசிரியர் அல்லவா) கொண்டு வந்து, என் நண்பர்கள் சூழ்ந்து நிற்க என்னென்ன தவறு, எப்படி எழுதி இருக்க வேண்டும் என விளக்கினார். அப்பொழுது என்ன மனநிலையில் அதை எதிர்கொண்டேன் எனத்தெரியவில்லை. இப்பொழுது நினைத்தால் சிலிர்க்கிறது.

மதிய உணவிற்காக விடுதிக்கு வரும்போது, அன்றைய தின கடிதங்களை விடுதிக்காப்பாளர்அறை முன்பு பரப்பி வைத்திருப்பார்கள். கடிதம் வந்திருந்தால் அதை எடுத்துக்கொண்டு நடக்கும்போது ஒரு விதமான பெருமிதமும், எதிர்பார்த்து வராவிட்டால் ஏக்கமமுமான உணர்ச்சிப் பொழுதுகள் அவை. அப்பாவின் கையெழுத்தில் "அன்புள்ள எனது மகன் சிரஞ்சீவி கனகராசுவிற்கு," என வாசிக்கும்போதே ஏதோ ஒன்று தொண்டையில் உருவாகி, கண்களை நிறைத்திருக்கும். என்ன ஏதுவென்று புரியாமலே வேகவேகமாக கடிதம் முழுவதும் படித்து முடித்து அதன் சாராம்சத்தை தெரிந்து கொண்ட பின்பு தான் ஒரு ஆசுவாசம் வரும். அதன் பிறகு தான் நிதானமாக முழுவதும் படிப்பது. அப்பழக்கத்தினால் இன்று மின்மடலைக் கூட அப்படித்தான் படிக்கிறேன்.

படம் வரைவது, ஒவ்வொரு வரியையும் ஒரு வண்ணத்தில் எழுதுவது போன்ற புதிய முயற்சிகள் கூட அரங்கேற்றப்படும். ஒருமுறை ஒரு அஞ்சலட்டையில் இடம் போதாததால் தொடரும் போட்டு, இன்னொரு அட்டையில் மீதியை எழுதி இரண்டையும் ஒன்றாக அஞ்சல் செய்திருக்கிறேன். மகிழ்ச்சி இருந்தாலும் இல்லாவிட்டாலும் "நலம். நலமறிய ஆவல்" தான் இரண்டாம் வரியாக இருக்கும். ஒருமுறை காய்ச்சல் வந்து உடல் நலமில்லாமல் போனபோது, வந்து உடனே வீட்டிற்கு அழைத்துச்செல்ல வேண்டி அப்பாவிற்கு எழுதிய கடிதத்தில் கூட "நலம். நலமறிய ஆவல்" எழுதிவிட்டு தான் எழுதினேன். முதல் வரிகளை படிக்கும் போது என்ன மனநிலையில் இருப்பார்கள் என எனக்குத் தெரியும். அதனால் அமங்களமாகத் தொடங்காமல் மகிழ்சியாகத் தொடங்குவதே என்னுடைய வழக்கம். காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறைகள், கோடை விடுமுறைகளின் போது நண்பர்களுக்கு கடிதம் எழுதுவது உண்டு.

எல்லா தினத்திற்கும் விதவிதமான வாழ்த்து அட்டைகள் பரிமாறிக்கொள்ளப்படும் இக்காலம் போல் அல்லாமல், அக்காலத்தில் ஒரே தினத்திற்கு தான் வாழ்த்து அட்டை உண்டு. பொங்கல் வாழ்த்து! வருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த பண்டிகையின் போது உச்சபட்ச திறமைகள் வெளிக்கொணரப்படும். விடுதியிலிருந்து வீட்டிற்கு, அதுவும் விடுமுறைக்கு ஊருக்கு செல்வதற்கு முன்தினம் அஞ்சல் செய்து அடுத்த நாள் நாம் வீட்டிலிருக்கும் சமயம் வினியோகம் செய்யும் போது நாமே வாங்கி யாரோ அனுப்பியது போல் பாவித்து வீட்டிலுள்ளவர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி தருவது, விடுதியிலிருக்கும் போதே சக நண்பர்களின் வீடுகளுக்கு மாறி மாறி பொங்கல் வாழ்த்து அனுப்பிக்கொள்வது, வீட்டிற்கு வந்த பின்பும் நண்பர்களின் வீடுகளுக்கு மாட்டுப்பொங்கல் வாழ்த்து அட்டையை அனுப்பி சந்தோசப் படுத்துவது போன்ற பலப்பல மகிழ்ச்சி தருணங்கள்.

கல்லூரியில் சேர்ந்த பின்பு கடிதங்களின் எண்ணிக்கை குறைந்தபோதும் நின்றுவிடவில்லை. ஆனால் வீட்டில் தொலைபேசி நிறுவப்பட்ட பின்பு நின்று போனது. மாறாக வாழ்த்து அட்டைகள் கொடுப்பது அதிகரித்துவிட்டது. எழுதி, மடித்து, தபால்தலை ஒட்டி அஞ்சல் செய்வது போன்றவைகள் மறைந்து, நேருக்குநேர் கொடுத்துவிடும் பழக்கம் ஏற்பட்டது. பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளில், அனைவரும் நல்ல மனங்கவரும் வார்த்தைகள் உள்ள அட்டையாக தேடிக்கொண்டிருக்க, நான் மட்டும் நிறைய பக்கங்களும் வெற்றிடமும் உள்ள அட்டையாகத் தேடுவேன். அப்போதைய (இப்ப மட்டும்?) என்னுடைய ஆங்கில அறிவுக்கு வார்த்தைகள் தேடுவது சற்று சிரமமான காரியம். அதற்கு பதில் நானே எழுதிவிடுவது(தமிழில்) என் வழக்கம். வாழ்த்து, அறிவுரை, நையாண்டி என அனைத்தும் கலந்த பெரிய சொற்பொழிவுகளுக்கு சமமானவைகளாக இருக்கும் அவை. என் அன்பிற்காக அவைகளை என் நண்பர்கள் பொறுத்துக்கொண்டார்கள் என நினைக்கிறேன்..;)

பணிக்கு வந்தபின்பு மின்மடல்கள், கடிதத்திற்கு மாற்றாக வந்து விட்டது. இருந்தாலும் கடிதம் எழுதுவதில் இருக்கும் நெருக்கமான உணர்வு மின்மடல்களில் இல்லை. கடிதத்தில் கூறப்பட்டுள்ள செய்திகளுக்கு இணையானவை எழுதியவரின் கையெழுத்து. பேசும்போது ஒருவர் வெளிப்படுத்தும் அங்க அசைவுகளுக்குள்ள தனித்தன்மை போல, ஒவ்வொருவர் கையெழுத்தும் எழுதியவரின் எழுத்து வழி குறியீட்டு வடிவம். எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் கூட தன் மகன்/மகள் எழுதிய கடிதங்களை இனம் கண்டுகொள்வது அந்த தனித்தன்மையினால் தான். இந்த உணர்வு மின்மடல்களில் வராது.

பத்திரிக்கைகளுக்கு வெகு சில கடிதங்களும் மின்மடல்களும் எழுதியிருக்கிறேன். அபூர்வமாகவே பதில் வரும். பதிலை எதிர் நோக்கியே கடிதம் எழுதப் பழகிவிட்ட எனக்கு இது மிகவும் வருத்தமளிப்பதாக இருந்ததால் நிறுத்திக்கொண்டேன். காதல் கடிதங்கள் எழுதும் அளவிற்கு காதலியோ, காதலோ இன்னும் வாய்க்கவில்லை. எதிர்காலத்தில் வாய்க்கலாம்.

அறிவியலின் வளர்ச்சியால் நான்(ம்) தொலைத்துவிட்ட வழக்கங்களில் ஒன்று கடிதம் எழுதுவது. பேச்சில் சொல்லப்பட்டதை விட எழுத்தில் சொல்லப்பட்ட அன்பிற்கு, வலிமையும் உண்மையும் ஆயுளும் அதிகம் என்பது என் கருத்து. திரைப்படங்களில் கடிதம் வாசிக்கப்படும் போது அதை எழுதியவர் முகத்தை அந்த கடிதத்தில் தெரியச்செய்து, அவர்குரலிலேயே கடிதம் வாசிக்கப்படுவது போல் காட்டப்படும். ஏதோ ஒரு இயக்குநர் கண்டறிந்த கதை சொல்லும் உத்தி என ஒதுக்கி விடமுடியாத, வாசிப்பவரின் மனநிலையைத் தெள்ளெனப் பிரதிபலிக்கும் காட்சி அது என்பது கடித வாசிப்பனுபவம் உள்ள எவருக்கும் புரியும். இதயத்திலிருக்கும் உணர்வுகளை வார்த்தைகளில் தாங்கி உலா வரும் கடிதங்களை "காகித இதயங்கள்"(அப்பாடா தலைப்பு வந்திடுச்சு) என்பதைத் தவிர என்ன சொல்லி வருணிக்க?

(நான் திக்கித்திணறி இத்தன வார்த்தைகள்ல சொன்னத, ஒரே படத்துல இன்னாமா சொல்லீட்டாங்கப்பா)

பின்குறிப்பு: "காகித இதயங்கள்" என்ற உருவகம் சரியா என்பதில் எனக்கும் சந்தேகம் உள்ளது. இருந்தாலும் அந்த சொல்லாடல் எனக்குப் பிடித்திருப்பதால் அதையே உபயோகித்துள்ளேன். தவறெனில், என் கோடானுகோடி (சரி...சரி) வாசகர்கள் பொறுத்தருள வேண்டும்.

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

அண்ணா ! சூப்பர்! :-) உங்க உருவகம் சரியோ சரி! கண்டிப்பா எல்லாத்துக்கும் இந்த அனுபவமிருக்கும்! எவ்ளோவோ கடிதங்கள் பல பேரு வாழ்க்கையையே புரட்டி போட்டிருக்கும்!! இத படிச்சதுமே நான் எழுதின ஒரு கடிதம் ஞாபகம் வந்தது ..அந்த ஒன்னு மட்டும்தான் மனசுல ரொம்ப ஆழமா பதிஞ்சது! அதுல இருந்த வாதங்களும் நியாயங்களும் உருக்கங்களும், ஒரு முடிவுல இருந்த எங்க அண்ணா மனச மாத்திருச்சு!
உண்மைதான்! அதெல்லாம் அழகிய நிலாக்காலங்கள்! :-)

கனகராசு சீனிவாசன் சொன்னது…

நன்றி நண்பரே!

தோழி..ஹி ஹி..;)

பெயரில்லா சொன்னது…

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்