போகும் பாதை தூரமே...

அருப்புக்கோட்டை எஸ்.பி.கே ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி படித்தவன் நான். நான் இன்றைக்கு அடைந்திருக்கும் நிலைக்கு, ஓரளவிற்கேனும்(!) உலக விஷயங்கள் அறிந்தவனாக, முதிர்ச்சி அடைந்தவனாக, இருக்கிறேன் என்றால் அதற்கு என் விடுதி வாழக்கை அமைத்த அடித்தளம் மிகப்பெரிய காரணம்.

நிற்க, பதினொன்றாவது படித்துக்கொண்டிருந்த நேரம். ஏதோ ஒரு எதிர்பாராத விடுமுறை(பந்த், மழை) காரணமாபள்ளி நான்கு நாட்கள் மூடப்பட்டு விடுதி மாணவர்களும் ஊருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கட்டயமாக போக வேண்டும் என்று இல்லை. இது போன்ற சமயங்களில் நான் பெரும்பாலும் விடுதியிலேயே தங்கி விடுவேன். குறைந்த அளவே மாணவர்கள் இருப்பதால், படிப்பு நேரம் (ஸ்டடி ஹௌர்ஸ்), சாப்பாட்டு நேரம் போன்ற விடுதியின் நடைமுறைகள் எதுவும் இருக்காது. விடுதி காப்பாளர்களுடன்(அவர்களும் பள்ளி ஆசிரியர்களே), காப்பாளர்-மாணவர் என்ற உறவு முறை தாண்டி பேசலாம் பழகலாம். இதையெல்லாம் விட அக்காலத்தில் பேருந்து பயணம் என்பது எனக்கு மிகவும் ஒவ்வாத ஒன்றாக இருந்தது. இரண்டு பேருந்து மாறி, ஒருமணிநேரப் பயணமே எனினும் ஒரு மாதிரியான தலை சுற்றலும், மயக்கமான நிலையே பிரயாணம் முழுவதுவும் தொடரும். சில நேரங்களில் வாந்தி எடுத்துவிடுவதும் உண்டு. இதனால் பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன்.

அந்த விடுமுறையின் ஒரு நாளில், மதிய உணவுக்காக அமர்ந்திருந்தோம். முப்பது வயது மதிக்கத்தக்க விடுதி சமையற்பணியாளர் பரிமாறிக்கொண்டிருந்தார். சொற்ப மாணவர்களே இருந்ததால் நிஜமாகவே 'பரிமாறினார்'. பள்ளி விடுதியில் தங்கி படித்திருந்தால், நான் ஏன் 'பரிமாறி' என அழுத்திச் சொல்கிறேன் என புரியும். கத்தரிக்காய் நான் சாப்பிடுவதில்லை என்பதால், வேண்டாம் என்பதன் குறிப்பாக இடது கையை தட்டுக்கு முன் இடம் வலம் ஆட்டி மறுத்தேன். மறுபடியும் வைக்க முயன்றார். மறுத்தேன்.

"சும்மா சாப்பிடுங்க தம்பி. கத்திரிக்காய் உடம்புக்கு ரொம்ப நல்லது!"

"நான் என் வாழ்க்கையிலேயே கத்தரிக்காய் சாப்பிட்டதில்லை"

"என்ன வாழ்க்கைய பாத்துடீங்க! பதினாறு பதினேழு வயசுதான் ஆகுது. அதுக்குள்ள என்னத்த பாத்துபுட்டீங்க, வாழ்க்கையிலேயேன்னு இழுக்குறீங்க? இன்னும் பாக்க வேண்டியது நெறைய இருக்கு. புதுசா ஆரம்பிக்க வேண்டியது நெறைய இருக்கு. இந்த கத்தரிக்காயும் அதுல ஒண்ணா இருக்கட்டும்!"

வைத்தே விட்டார் என் தட்டில். அவர் பேச்சில் இருந்த நிஜத்தை உணர்ந்து கொள்ளவே எனக்கு நெடு நேரம் ஆனது. ரொம்ப நேரம் சாப்பிடாமலே இருந்தேன். அவருக்காக ஒரு சின்ன துண்டு சாப்பிட்டேன். முதலும் கடைசியாக.

இன்றும் நான் கத்தரிக்காய் சாப்பிடுவதில்லை. ஆனால் ஒவ்வொருமுறை அதை பார்க்கும் போதும், பெயர் தெரியாத அவர் முகம் வந்து போகும். பல நேரங்களில், சோர்வாக, சோகமாக இருக்கும் போது, இந்த நிகழ்வு எனக்கு ஆறுதல் வாக்கியமாக இருந்து உள்ளது, "இதென்ன பிரமாதம்? இன்னும் எவ்வளவோ உள்ளது எனும்படியாக..."

வாழ்க்கை என்பது அனுபவங்களின் கோர்வையாம். மேற்சொன்ன சம்பவம் என் அனுபவக்கோவையின் ஒரு முத்து! இன்னும் பல முத்துக்களை ஒளித்து வைத்திருக்கும் காலத்தின் பின் பயணிக்கிறேன். பணியிலிருந்து திரும்பிய அப்பாவின் கைப்பையில் தனக்கு என்ன இருக்கிறதெனத் துழாவும் சிறுவனின் ஆர்வத்துடன்! விரட்டி, ஓடி பிடிக்க முயன்ற வண்ணத்துப்பூச்சி, கையினில் விட்டுச் சென்ற வண்ணத்தை, தோழிக்கு காட்டி விவரிக்கும் சிறுமியின் குதூகலத்துடன்!

கனகைக் கவர்ந்தவை #2















அன்பே
சிவம்!
நான் விரும்பி பார்க்கும் மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்று. ஒவ்வொரு காட்சியையும் பார்த்து ரசித்திருக்கிறேன். கமலுக்கு எந்த விதத்திலும் குறையாமல் மாதவனும் நடித்திருப்பார். கிரணும், சங்குவும்(நாய்) கூட. அந்த படத்தின் உச்சக் காட்சியில் நல்லசிவம்(கமல்) அன்பரசுக்கு(மாதவன்) எழுதிய கடிதம் முத்தாய்ப்பு. கமல் அவர்கள் குரலின் பெரும் ரசிகன் நான். அந்த குரலில் இக்கடிதம் வாசிக்கப்படுவதை கேட்கும் ஒவ்வொரு முறையும் என் உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்படும், என்னையறியாமல். இதோ அக்கடிதம்.

அன்புள்ள
சக கடவுள் தம்பி அன்பரசுக்கு,

நம் இருவருடைய சித்தாந்தமும் வெவ்வேறாக இருந்தாலும், என்னை அண்ணனாகவே மதித்து எனக்கென்ற நிரந்தரமான ஓர் உறவும் தங்குமிடமும் தர இசைந்த உங்களுக்கு...

பறவைகளுக்கும், துறவிகளுக்கும் நிரந்தரமான சரணாலயம் இருப்பதில்லை. நானும் ஒரு பறவை தான். நிரந்தரம் என்ற நிலையையே அசௌகரியமாகக் கருதும் பறவை. இருப்பினும் என்னிடம் நீங்கள் வைத்திருக்கும் அன்பு வீண்போகக்கூடாது. அதையும் சேர்த்து உங்கள் மனைவியிடம் மொத்தமாகத் தந்துவிடுங்கள். இனி என் பயணங்களில் நான் தங்கப் போகும் கிளைகளில், என் அருமைத் தம்பியின் கனிவும் நிழழும் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்! ஆனால், அடுத்த விநாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் இவ்வுலகில் ஏராளம். உங்களை சந்தித்தது கூட அப்படிப்பட்ட ஒரு ஆச்சரியம் தான். ஆச்சரியம் நிறைந்த இந்த உலகத்தின் மேல் நம்பிக்கை வைத்து பயணிக்கிறேன். உங்களுக்குத் திருமதியாகப் போகும் பாலசரஸ்வதியின் வாழ்வில் ஏராளமான சந்தோசங்கள் காத்திருக்கின்றன. அதற்கு முழு காரணமாக நீங்கள் இருப்பீர்கள். இருக்க வேண்டும்.

உங்கள் அன்பு அண்ணன்,
. சிவம்

(சன் தொலைக்காட்சியில் படம் ஒளிபரப்பான போது, என் கைபேசியில் குரலை பதிவு செய்து, திரும்ப திரும்பக் கேட்டு தட்டச்சு செய்தது. பிழை இருப்பின் சுட்டவும்)

விழியீர்ப்பு விசை!



இதில்தான்,
நான் நீயாகிப்போனது!

இப்படித்தான்,
உன் விழிவீச்சு
என் இதயத்தைச்
சிறைப்படுத்திக்கொண்டது!

ஏனிந்த இமைதாழல்?
காற்றுலுக்கிய இலையாய்,
சட்டென உதிர்த்துவிடு
நீயும் நானாகிப்போனதை!

(சில வருடங்களுக்கு முன்பு, 'தினம் ஒரு கவிதை' யாஹூ இணைய குழு நடத்திய 'ஓவியத்திற்கான கவிதை' போட்டியில் வென்ற கவிதை.)

ராணி(கள்) மகாராணி(கள்)!!!












விண்டோஸ் விஸ்டா செஸ் - லெவல் 5 - 6 சிப்பாய்கள எதிரியின் எல்லைக்கு கொண்டு போய் ராணிங்களா மாத்தி, என்னோட சொந்த ராணியும் சேத்து, மொத்தம் 7 ராணிகளோட நான் நடத்திய அல்லி தர்பார்!!!

(ஆமா...ஆமா...ஏகப்பட்ட Undoகெல்லாம் அப்புறமாதான். அதில்லாம எப்பிடி? )

கனகைக் கவர்ந்தவை #1

இன்றைய தேதியில்,
விஜய், அசினை விட
மின்தடைக்கே
'விசிறிகள்' அதிகம்!

-விஜய் டிவி 'தமிழ் பேச்சு எங்கள் மூச்சில்' ராஜ்மோகன்

பொன்னியின் செல்வன்

(இது பொன்னியின் செல்வனின் கதை அல்ல. பொன்னியின் செல்வனை நான் படித்த கதை)

"கல்கி எழுதிய சரித்திர நாவல்களில் தலை சிறந்தது எது?"
என்ற ஒரு மதிப்பெண் வினாவிற்கான விடையாக மட்டுமே பொன்னியின் செல்வனை' அறிந்திருந்த நான், அதை படிக்க நேர்ந்தது ஒரு தற்செயல். சிறுவர்மலர், வாரமலர், குமுதம், விகடன் வார இதழ்களிலும், ராஜேஷ்குமார், சுபாவின் 'திக் திக்' நாவல்களிலும் அடங்கியிருந்த என் வாசிப்பு வட்டத்தின் விட்டம், பெருமளவு அதிகரிக்ககத் தொடங்கியது 'பொன்னியின் செல்வனை' படித்த பின்பே.

கோவை அரசு பொறியியற் கல்லூரியில் நான்காமாண்டு படித்துக்கொண்டிருந்த காலமது. 'No due form'ல் கையெழுத்து வாங்குவதற்காக மட்டுமே கல்லூரி நூலகத்திற்குச் செல்லும் வழக்கமுடைய என்னை 'R S புரம்' மாவட்ட மைய நூலகம் தன் நிரந்தர வாசகனாக்கிக் கொண்டது. அங்கு அமர்ந்து முதலில் படித்த நாவல் நா.பார்த்தசாரதி அவர்களின் 'பொன்விலங்கு'. கதை முழுவதும் நினைவில் இல்லையெனினும் ஆசிரியப் பணிக்காக ஒரு மலை கிராமத்தின் செல்வந்தர் வீட்டுக்குச் செல்லும் பட்டதாரி வாலிபனின் கதை என்பது மட்டும் நினைவில் உள்ளது. ஒரு ஆரம்பம், பக்கத்திற்குப் பக்கம் திருப்பங்கள், பெரும்பாலும் "நீயா அது?... நானே தான்!" வகை முடிவுகள், இவை தான் அதுவரை நானறிந்திருந்த நாவல் நடை. இந்த இலக்கணங்களை மாற்றி, எதார்த்த உலகினை நாவல் எழுத்தில் எனக்கு காட்டியது 'பொன்விலங்கு'.

'பொன்விலங்கை' படித்தபின், இன்னும் அரை மணி நேரம் ஏதேனும் படிக்கலாம் என தேடிய போது கண்ணில் பட்டது 'பொன்னியின் செல்வன்'. பல தொகுதிகளும், பக்கங்களும் கொண்டது என்பது பெரிய மலைப்பை கொடுத்த போதும் ஏதோ ஒரு உந்துதலினால், முதல் தொகுதியை எடுத்துக் கொண்டு படிக்க அமர்ந்தேன். ஆரம்பித்த இரண்டு பக்கங்களிலேயே கல்கி என்னை ஆட்கொண்டுவிட்டார். இவ்வளவு காலம் படிக்காமலிருந்த என் அறியாமையை, படிப்பதற்கு முன் யோசித்த என் பேதைமை எண்ணி வெட்கிட வைத்தார்.

காட்சிகளை கண் முன் நடப்பது போல விவரித்திடும் அந்த எழுத்து நடை எனக்கு புதிதாக இருந்தது. வாசிக்க வாசிக்க பரவசமேற்படுதியது. வீராணம் ஏரியில் நடக்கும் ஆடித்திருநாள் காட்சிகள் என் கண் முன்னே விரிந்து, நானும் வந்திய தேவன் போல அக்காட்சிகளுக்குள் பயணித்தேன். அரை மணி நேரத்திற்கு கணக்கு பார்த்தவன், நூலகம் மூடும் வரை(இரவு 8 மணி என நியாபகம்) படித்துக் கொண்டிருந்தேன். அதன் பின் வந்த நாட்களில் பொன்னியின் செல்வன் பித்து பிடித்து திரிந்தேன். தினமும் கல்லூரி முடிந்த மாலை வேளைகள், பொன்னியின் செல்வனால் நிரப்பப்பட்டன. வந்தியதேவனும், குந்தவையும், அருண்மொழிவர்மரும், வானதியும், என் உறவுகளாகிப் போயினர்.

ரசித்து, ருசித்து, அனுபவித்து படித்து வந்தேன். படித்த பின்பு எண்ணிப்பார்த்து மகிழ்ந்திட நிறைய இருந்தன. எனவே ஒரு நாளைக்கு நூறு பக்கங்களுக்கு மிகாமல் படிப்பதில்லையென வைத்துக்கொண்டு, இரவு உணவுக்கு பின் படுக்கையில் படுத்து படித்தவற்றை அசை போட்டுக் கொண்டிருப்பேன். மூன்றாம் தொகுதியை படித்துக்கொண்டிருக்கும் போது, இன்னொருவரும் அதற்கு போட்டிக்கு வந்துவிட்டார். யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கு அன்றைக்கு யோகம். ஒரு நாள் அவர் என்னை முந்திவிட, வருத்தத்துடன் வேறு புத்தகத்தை தேட ஆரம்பித்தேன். தேடலின் போது தான் தெரிந்தது மூன்றாம் தொகுதி, இன்னொரு பிரதியும் இருப்பது. முழுதாக தேடியபோது அனைத்து தொகுதிகளுமே இரு பிரதிகள் இருந்தது. எதிர்பாரா சந்தோசத்தின் உச்சகட்டம் அது!

ஏறக்குறைய ஒண்ணரை மாதங்கள் ஆனதாக நியாபகம். நண்பர்களுடன் ஊர் சுற்றவோ, சினிமாவிற்கோ செல்வதைக் கூட சில பல முறைகள் தவிர்த்திருக்கிறேன், நாவலை படிப்பதற்காக. நூலகத்தின் வார விடுமுறை நாட்களில் தவித்திருக்கிறேன். கடைசி நூறு பக்கங்களை ஒரு சனிக்கிழமை காலை வேலையில் வரும்படி பார்த்து, மிகுந்த பரவசத்துடனும் உணர்ச்சிப்பெருக்குடனும் படித்து முடித்தேன். அருண்மொழியின் தியாகமும், மணிமேகலையின் மறைவும் பல நாட்கள் என் மனதில் வேரூன்றியிருந்தது...இன்னும் இருக்கிறது!

கல்லூரி முடித்து பணிக்கு வந்த இரண்டாம் ஆண்டு சொந்தமாக பொன்னியின் செல்வன் வாங்கி இன்னொருமுறை படித்தேன். முதல் முறை படித்த போதிருந்த அதே உணர்வுகள், விறுவிறுப்பு. பலருக்கும் பரிந்துரைத்து படிக்க வைத்திருக்கிறேன். சில சமயங்களில் என் புத்தகத்தை கொடுத்தே! என் ஐந்து தொகுதிகளும் இன்று என்னிடம் இல்லை. அதற்காக நான் வருத்தப் படவில்லை. யான் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்!

பொன்னியின் செல்வனை இணையத்தில் படித்திட...

பிள்ளையார் சுழி!

அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி
பகவன் முதற்றே உலகு.


எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதன்மையாக கொண்டுள்ளதைப் போல, உலகில் வாழும் உயிர்கள் ஆதி பகவனை முதன்மையாகக் கொண்டுள்ளன.