போகும் பாதை தூரமே...

அருப்புக்கோட்டை எஸ்.பி.கே ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி படித்தவன் நான். நான் இன்றைக்கு அடைந்திருக்கும் நிலைக்கு, ஓரளவிற்கேனும்(!) உலக விஷயங்கள் அறிந்தவனாக, முதிர்ச்சி அடைந்தவனாக, இருக்கிறேன் என்றால் அதற்கு என் விடுதி வாழக்கை அமைத்த அடித்தளம் மிகப்பெரிய காரணம்.

நிற்க, பதினொன்றாவது படித்துக்கொண்டிருந்த நேரம். ஏதோ ஒரு எதிர்பாராத விடுமுறை(பந்த், மழை) காரணமாபள்ளி நான்கு நாட்கள் மூடப்பட்டு விடுதி மாணவர்களும் ஊருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கட்டயமாக போக வேண்டும் என்று இல்லை. இது போன்ற சமயங்களில் நான் பெரும்பாலும் விடுதியிலேயே தங்கி விடுவேன். குறைந்த அளவே மாணவர்கள் இருப்பதால், படிப்பு நேரம் (ஸ்டடி ஹௌர்ஸ்), சாப்பாட்டு நேரம் போன்ற விடுதியின் நடைமுறைகள் எதுவும் இருக்காது. விடுதி காப்பாளர்களுடன்(அவர்களும் பள்ளி ஆசிரியர்களே), காப்பாளர்-மாணவர் என்ற உறவு முறை தாண்டி பேசலாம் பழகலாம். இதையெல்லாம் விட அக்காலத்தில் பேருந்து பயணம் என்பது எனக்கு மிகவும் ஒவ்வாத ஒன்றாக இருந்தது. இரண்டு பேருந்து மாறி, ஒருமணிநேரப் பயணமே எனினும் ஒரு மாதிரியான தலை சுற்றலும், மயக்கமான நிலையே பிரயாணம் முழுவதுவும் தொடரும். சில நேரங்களில் வாந்தி எடுத்துவிடுவதும் உண்டு. இதனால் பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன்.

அந்த விடுமுறையின் ஒரு நாளில், மதிய உணவுக்காக அமர்ந்திருந்தோம். முப்பது வயது மதிக்கத்தக்க விடுதி சமையற்பணியாளர் பரிமாறிக்கொண்டிருந்தார். சொற்ப மாணவர்களே இருந்ததால் நிஜமாகவே 'பரிமாறினார்'. பள்ளி விடுதியில் தங்கி படித்திருந்தால், நான் ஏன் 'பரிமாறி' என அழுத்திச் சொல்கிறேன் என புரியும். கத்தரிக்காய் நான் சாப்பிடுவதில்லை என்பதால், வேண்டாம் என்பதன் குறிப்பாக இடது கையை தட்டுக்கு முன் இடம் வலம் ஆட்டி மறுத்தேன். மறுபடியும் வைக்க முயன்றார். மறுத்தேன்.

"சும்மா சாப்பிடுங்க தம்பி. கத்திரிக்காய் உடம்புக்கு ரொம்ப நல்லது!"

"நான் என் வாழ்க்கையிலேயே கத்தரிக்காய் சாப்பிட்டதில்லை"

"என்ன வாழ்க்கைய பாத்துடீங்க! பதினாறு பதினேழு வயசுதான் ஆகுது. அதுக்குள்ள என்னத்த பாத்துபுட்டீங்க, வாழ்க்கையிலேயேன்னு இழுக்குறீங்க? இன்னும் பாக்க வேண்டியது நெறைய இருக்கு. புதுசா ஆரம்பிக்க வேண்டியது நெறைய இருக்கு. இந்த கத்தரிக்காயும் அதுல ஒண்ணா இருக்கட்டும்!"

வைத்தே விட்டார் என் தட்டில். அவர் பேச்சில் இருந்த நிஜத்தை உணர்ந்து கொள்ளவே எனக்கு நெடு நேரம் ஆனது. ரொம்ப நேரம் சாப்பிடாமலே இருந்தேன். அவருக்காக ஒரு சின்ன துண்டு சாப்பிட்டேன். முதலும் கடைசியாக.

இன்றும் நான் கத்தரிக்காய் சாப்பிடுவதில்லை. ஆனால் ஒவ்வொருமுறை அதை பார்க்கும் போதும், பெயர் தெரியாத அவர் முகம் வந்து போகும். பல நேரங்களில், சோர்வாக, சோகமாக இருக்கும் போது, இந்த நிகழ்வு எனக்கு ஆறுதல் வாக்கியமாக இருந்து உள்ளது, "இதென்ன பிரமாதம்? இன்னும் எவ்வளவோ உள்ளது எனும்படியாக..."

வாழ்க்கை என்பது அனுபவங்களின் கோர்வையாம். மேற்சொன்ன சம்பவம் என் அனுபவக்கோவையின் ஒரு முத்து! இன்னும் பல முத்துக்களை ஒளித்து வைத்திருக்கும் காலத்தின் பின் பயணிக்கிறேன். பணியிலிருந்து திரும்பிய அப்பாவின் கைப்பையில் தனக்கு என்ன இருக்கிறதெனத் துழாவும் சிறுவனின் ஆர்வத்துடன்! விரட்டி, ஓடி பிடிக்க முயன்ற வண்ணத்துப்பூச்சி, கையினில் விட்டுச் சென்ற வண்ணத்தை, தோழிக்கு காட்டி விவரிக்கும் சிறுமியின் குதூகலத்துடன்!