பூவதிரும் ஓசை!

இரு நாட்களாகப் பெய்து வந்த மழை இன்று தணிந்திருந்தது. ஆனாலும் வானம் இருண்டிருந்த அந்த பிற்பகல் வேளை இரவு போலிருந்தது. காற்று, தரை, சுவர் எங்கும் ஈரப்பதம். எதுவும் செய்ய விருப்பமற்ற, தூங்கவும் இயலாத ஒரு மந்தமான நிலை, கண்மூடி கனவு காண அழைத்தது. உள்ளறை சென்று, படுக்கை விரித்து, பக்கவாட்டில் கால்கள் ஒன்றின் மீது ஒன்று வருமாறு வைத்து மடக்கி உடல் குறுக்கி, போர்வையை இறுக்கிப் போர்த்தி படுத்தேன். கண்கள் மூடியதும் காட்சி விரிந்தது.

ஆளரவமற்ற வீதி. நீண்டு கிடந்தது நிசப்தம். வீதியின் இரு மருங்கிலும் மரங்கள். மரம் முழுவதும் மலர்கள். மஞ்சள் மலர்கள். வீதிமுழுவதும் விழுந்தும் கிடந்தன, அடுக்கி வைக்கப்பட்ட நேர்த்தியுடன். வசந்தத்தின் உச்சம். எங்கும் மஞ்சள். மங்களகரம். நீண்ட அலகினையுடைய பறவை ஒன்று சத்தமின்றி பூ கொத்திக் கொண்டிருந்தது. அதுவும் மஞ்சள் நிறமே. ஒரு மர அடியில் இருந்த நீண்ட இருக்கையில் ஒருவன் அமர்ந்திருக்கிறான். இரு கைகளையும் இருக்கையின் கைப்பிடியில் தளரவிட்டு, முகத்தை மேலுயர்த்தி கண்கள் மூடிய நிலையில். அருகினில் சென்று பார்த்தால், ஓ...நான் தான்!

என்ன ஒரு தனிமைச் சுகம்? எனக்காக நானே படைத்துக்கொண்ட கனவுலகம். சன்னமான காற்று வீசினால் இன்னும் சுகமாக இருக்கும். என்ன அது சத்தம்? பூவதிரும் சத்தம். கண்விழித்தேன். என் வலப்பக்கம், சிறிது தொலைவில் ஒருத்தி வந்து கொண்டிருந்தாள். நெருங்க நெருங்க இதம். எனை நோக்கித்தான் வருகிறாளோ? இல்லை இல்லை எனைப் பார்ப்பதாகத் தெரியவில்லையே.

"ஏ பெண்ணே? யார் நீ?"

"நீங்கள் யாரோ?"

"நானல்லவா முதலில் கேட்டேன்?"

"அதனால்?"

"விடையையும் முதலில் அறியும் தகுதி படைத்தவனாகிறேன்"

அவளின் ஒவ்வொரு சொல்லிலும் இதம்!

"தன் வழியில் போய்க்கொண்டிருந்தவளை நிறுத்தி, எனை யாரென அறிய முயலும் நீங்கள் யாரென முதலில் நானறிவது தானே முறை?"

என்ன பதில் சொல்வது இதற்கு? நான் யாரென்பதைத் தவிர?

"நான் இக்கனவு வீதியைப் படைத்தவன். இங்குள்ள ஒவ்வொன்றும் என் விருப்பத்தின் பேரில் அமைந்தவை. இவ்வீதியை அறிந்தார் எனையன்றி யாருமில்லை. இப்பொழுதாவது சொல்? யார் நீ?"

"இங்குள்ள ஒவ்வொன்றும் நீர் படைத்ததென்றால், நான் மட்டும் எப்படி வர முடியும்? எல்லாம் படைத்த உங்களுக்கு நான் யாரென்பது மட்டும் தெரியவில்லையா?"

"ஆ... நீ மிகுந்த அறிவுள்ளவளாக இருக்கிறாய்"

"மன்னிக்கவும். உங்கள் அறியாமையை மறைக்க என்னை அறிவுள்ளவளாக்க வேண்டாம்"

"மறுபடியும் நிரூபிக்கிறாய், உன் அறிவை. இல்லை இல்லை என் அறியாமையை. போதும் சொல்லிவிடு"

"தென்றல் என்பர் என்னை"

"ஓ... என் நினைவிலிருந்து படைக்கப்பட்டவள். இதம் பரவும் போதே நான் உணர்ந்திருக்க வேண்டும். வந்தமைக்கு நன்றி. வா...வந்திங்கு சிறிது நேரம் என்னருகினில் அமர்"

"இல்லை. முடியாது"

"ஏன்? எனக்காகத்தானே வந்தாய். நானல்லவா உனைப் படைத்தது? என்னருகினில் அமரமாட்டாயா?"

"படைத்தவரென்றால்? அடங்கி விட வேண்டுமா?"

இமை குறுக்கி, கன்னக்கதுப்புகள் உப்ப, இதழ்விரிய புன்னகை புரிந்தாள் தென்றல் பெண். இதம் இதம்!

"தேங்கி நிற்பதல்ல என் பண்பு. என் பயணத்தில் தான் பயன். வருகிறேன்"

மறைந்து விட்டாள், தென்றல். எனதாக்கிக் கொள்ள எத்தனித்ததை அவதானித்துக் கொண்டாளோ?. இன்னும் இன்னும் இதம்! இதம்!

போர்வைக்குள் பொதிந்து கண்மூடி, குறுநகை புரியுமென் முகம் பார்த்தால், எனைப் பைத்தியக்காரன் என நினைப்பதைத் தவிர உங்களுக்கு வேறு வழி இருக்காது.

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

ஹையோ!!!! அண்ணா! வாய்ப்பே இல்ல! ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப சூப்பரா இருக்கு !!!! ரொம்ப பிடிச்சுருக்கு எனக்கு! :-)

பெயரில்லா சொன்னது…

Thala, sujatha voda since fiction stories padichu iruken.. Ethu oru pudhu thinusa ella iruku..

Anyway ungal karpani romba nalla iruku.. Again u got my Vote!!!

Aanal pengal eppodum Thenralai, nilavai mattum parkatheergall.. avargalilum puyal, etc ellam irukenrargal!!!

Unknown சொன்னது…

Hmm ....nice
i liked it very much.......paaru da
ivanakulaiyum oruthan irukaan :)........

innum neraiya edhir parkuraeyn unnidam....