எனைத்தான் அன்பே மறந்தாயோ?

பள்ளிக்கூட படிப்பக்கூட
பாதியில விட்டுப்போட்டு
பட்டாளம் போனமச்சான்
பாவிமக நெனப்பிருக்கா?

ஆலமர ஊஞ்சல்லையும்
ஆமணக்குத் தோட்டத்திலயும்
ஆடிப்பாடி ஓடினோமே
அதாச்சும் யாவமிருக்கா?

ஒன்னப்பத்தி நெனைச்சாலே
ஒறக்கமெல்லா ஓடிப்போது!
நெதானமே இல்லாம
நெதநெதம் பித்துப்பிடிக்குது!

உருப்படாம போனவன்னுதான்
ஊருசனம் பொறணி பேசுது!
இலவுகாத்த கிளிக்கு என்ன
இட்டுக்கட்டி கத சொல்லுது!

மாமங்கிட்ட சொல்லிட்டியா?
மனச தொறந்து காட்டீட்டியா?
சோடிப்பொண்ணுங்க கேக்குறாங்க
சொல்லிச்சொல்லி சிரிக்கிறாங்க!

கம்மாக்குள்ள மழத்தண்ணி
கடுதாசி போட்டா வந்துசேரும்?
சோளக்கொல்ல குருவிரெண்டும்
சொல்லிகிட்டா ஒண்ணு சேரும்?

எதிர்க்கேள்வி நாங்கேட்டா
எனக்கெந்த பதிலுமில்ல
கூனிக்குறுகி இளிப்பாளுக
கூறுகெட்ட குப்பாயிமக்க!

மத்தவங்களப்பத்தி கவலயில்ல
மசிரேபோச்சுன்னுதான் ஊதிடுவேன்
ஊருவாய பொத்திவைக்க
உலகத்திலேயே ஒண்ணுமில்லன்னு!

அடுத்த தைதான் கடைசியாம்
அதுக்கு மேல பொறுக்கமாட்டாளாம்!
அம்மாக்காரி சொல்லிப்புட்டா
அவகடம அவளுக்கு!

சேந்துநட்ட புங்ககூட
சரஞ்சரமா பூத்திடுச்சு
என்கூட சமஞ்சதெல்லாம்
ஏழெட்டு பெத்திடுச்சு!

இதுக்குமேல எதுத்துநிக்க
இந்தவுசுருக்கு திராணியில்ல
ஏதாச்சும் செஞ்சுக்குவேன்
எவனாச்சும் கட்டவந்தா!

கயிறோ கள்ளிப்பாலோ
கணக்கா முடிச்சுக்குவேன்
கனகுப்பயலுக்காவது கருகெடைக்கும்
கவிதயில என்கதயப்பாட!

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

Kavidhai soopera irukku.. aana oru chinna vishyam. Kavidhaiyoda thalaippu, vera vidhamaana kavidhaiya edhirpaaka vechuthu. aana, ipdi oru gramathu kavidhaiya illa!
koodavey oru sandhegam. Ethugai monai irundhathaan kavidhaigal nallaa irukkuma?

கனகராசு சீனிவாசன் சொன்னது…

நன்றி!
அந்த தலைப்பு தளபதி படத்தில் வரும் 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' பாடலில் ஒரு வரி என்பது உனக்கும் தெரிந்திருக்கும். தலைவியின் இந்த கேள்வியும் அதற்கு தலைவனின் பதிலும் எனக்கு மிக பிடித்தமான வரிகள். இந்த கவிதைக்கு தலைப்பு தேடிய போது இந்தவரிகள் பளிச்சென வந்து போனது. அதையே வைத்து விட்டேன்.

எதுகை மோனை இலக்கணங்களுக்கு அப்பாற்பட்டது தான் புதுக்கவிதை. அது இருந்தாலும் நன்றாகத்தான் இருக்கும்..;)
சில மோனைகள் இடைசெருகல் போல தான் தோன்றுகிறது. இருந்தாலும் வேண்டுமெனவே இணைத்திருக்கிறேன்.