நவம்பர் 27! முன்தினம் ஆரம்பித்த மழை இன்னும் விடாமல் பெய்து கொண்டிருந்தது. மும்பையில் ஆரம்பித்திருந்த தீவிரவாத தாக்குதலும்! "அலுவலகம் விடுமுறையா?" என்ற கேள்விக்கு "தெரியவில்லை. விடுமுறையாக இருந்தால் ஏதேனும் ஒரு மாற்று வேலை நாள் இருக்கும்" என்று மட்டுமே பதில் சொல்ல முடிந்தது. இந்திய ஆங்கில தொலைக்காட்சிகள், மும்பை தாஜ் மற்றும் ஓபராய் ஹோட்டல்களில் நடக்கும் தாக்குதல் செய்திகளை முந்தித் தர முனைந்துகொண்டிருந்தன. மழைகால அம்பத்தூர் தொழிற்பேட்டை சாலைகளுக்கும், எனக்கும் ஆறு வருட பழக்கம். சாலைகளின் தரம் உயர்ந்திருந்ததாலும், இந்த முறை என்னிடம் இரு சக்கர வாகனம் இருந்ததாலும், மழையில், வெள்ள நீரில் அதை ஓட்டிப் பார்க்கும் ஆசையினாலும், மாற்றுடையுடன் அலுவலம் சென்றேன். எதிர்பார்த்ததை விட நல்ல அனுபவமாகவே இருந்தது, ஓரடி நீரில் வண்டி ஓட்டுவது. சொற்பமானவர்களே வந்திருந்தனர். மழை விடாது பெய்யவே மதிய உணவுக்குப் பின் கிளம்பிச் சென்றுவிட அனைவரும் அறிவுறுத்தப்பட்டனர். நீண்ட ஆய்வுக்கும் பரிசீலனைக்கும் பின், எதுவானாலும் பரவாயில்லை வண்டியிலேயே திரும்பிவிடுவதென முடிவெடுத்தேன். வெற்றியும் பெற்றேன்! பிரதமரும் எதிர்க் கட்சித் தலைவரும் ஒரே விமானத்தில் மும்பையை பார்வையிட வர முடிவு செய்து பின்னர் மாற்றப்பட்டது. மழையும் தாக்குதலும் தொடர்ந்தது.
அடுத்த நாள் அதிகாலை மின்சாரம் துண்டிக்கப் பட்டது, பாதுகாப்பு நடவடிக்கையாக! மும்பை நிலவரம் ஒன்றும் அறிய முடியவில்லை. வீட்டுக் காவல் ஆக்கப் பட்டோம். எங்கெங்கு காணினும் தண்ணீரே. அலுவலகம் விடுமுறை. எங்கள் அடுக்கக சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்திருந்தது. ஈரக் கசகசப்புடன் அன்றைய நாள் கழிந்தது. மழையின் அடர்த்தி குறைந்து அவ்வப்போது தூற மட்டும் செய்தது, அடுத்த நாள். அதுக்கும் அடுத்த நாள் முற்றிலும் விட்டிருந்தது. கிளைச் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழை தேங்கிக்கிடந்தது. சாலைகள் உருமாறிப் போயிருந்தன.
பல மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு, பல உயிரிழப்புகளுடன் மும்பை தீவிரவாதம் கட்டுப்படுத்தப் பட்டது. சிறந்த மூன்று காவல் அதிகாரிகளையும், பல காவற் பணியாளர்களையும், பொதுமக்களையும், வெளிநாட்டு பிரமுகர்களையும், பாதுகாப்பு நம்பகத் தன்மையையும் இழந்திருந்தது இந்தியா! பல செய்திகளும், கோணங்களும், பார்வைகளும், அரசின் மெத்தனப் போக்கும் அலசப்பட்டன. தன்னை வீட்டிற்க்குள் அனுமதிக்க மறுத்த, மும்பை தாக்குதல்களில் மறைந்த மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் தந்தையை தரம் தாழ்த்து விமர்சித்து பின் மன்னிப்புக் கோறினார், கேரள முதல்வர். இந்திய உள்துறை அமைச்சரும், மகாராஷ்டிர முதல்வரும் மாற்றப்பட்டனர்! தாக்குதல்களில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உண்டென்று இந்தியாவும் உலக நாடுகளும் உரத்து கூறிக்கொண்டுள்ளன. அமெரிக்க வெளியறவு அமைச்சர் காண்டலிசா ரைஸ் வந்து, பாகிஸ்தானுக்கும் சென்றார். பாகிஸ்தான் நாளொரு தகவலும் அடுத்த நாள் அதை மறுத்தும் கண்ணா மூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது. சென்னை மழை வெள்ள நிவாரண நிதி அறிவிக்கப் பட்டது. எதிர்க் கட்சிகள் அதில் குறை கூறும் கடமையை செவ்வனே செய்தன. ஆளும் கட்சியும் அதற்கு புள்ளிவிவர பதிலளித்தது.


விஜய் டிவி ஜோடி நம்பர் -1 மூன்றாம் பாகத்தில் மைக்கேல்-ஹேமா ஜோடி வென்றது. பரிசு வழங்கி வென்றவர் மற்றும் தோற்றவர்களுக்கு சொல்லும் செய்தியில், தன் அப்பா அடிக்கடி சொல்வதாக நடிகர் சூர்யா சொன்னதே, இப்பதிவின் தலைப்பு.
முந்ததர் அமெரிக்க அதிபர் மீது தன் காலணிகளை எறிந்து பிரபலமானார். சானியா மிர்சா 'டாக்டர்' ஆனார். செய்னா உலகத் தர பட்டியலில் 10 வது இடத்திற்கு முன்னேறினார். ஏ ஆர் அந்துலே எதையோ சொல்லி எதையோ வாங்கிக் கொண்டார். அதை காரணமாக்கி எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தை நடத்த விடாமல் செய்து, 8 மசோதாக்களை 17 நிமிடங்களில் விவாதமே இல்லாமல் நிறைவேற்ற செய்து, பாராளுமன்றத்திற்கு சாதனைப் பெருமை தேடித் தந்துள்ளன. மதுரை திருமங்கலத்தில் இடைத் தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய அதன் தேசிய தலைவர், விரைவில் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என்றார்.
தாக்குதலுக்குட்பட்ட தாஜ் மற்றும் ஒபராய் ஹோட்டல்கள் மீண்டும் திறக்கப்பட்டு விட்டன!
இது மட்டும் அல்ல எதுவும் கடந்து போகும்...போக வேண்டும்!
1 கருத்து:
Thala.. Romba visayathai cover pannitu, ellathai um korthu mudikuradhu oru periya visyam.. Romba kastamana onnum kooda..
Nalla muyarchi aanal, ennum koncham kavanam thevai..
கருத்துரையிடுக